தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கலை & காதல்: இப்படியும்கூட ஆண்கள் இருப்பாங்களா!

ஐரின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐரின்

செல்வராஜ் - ஐரின்

“ஒவ்வொரு காதலுக்குப் பின்னாலும் நிச்சயம் ஒரு கதை இருக்கும். எங்க காதலுக்குப் பின்னால் நாங்கள் நேசிக்கும் சிலம்பக் கலை இருக்கு” - வித்தியாசமாகத் தொடங்குகிறார் செல்வராஜ். அருகில் நிற்கிற ஐரின் முகத்தில் வெட்கம் தளும்புகிறது. சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘பட்டாஸ்’ திரைப்படத்தில் தனுஷ், சினேகாவுக்கு சிலம்ப அடிமுறை பயிற்சி வழங்கியவர் செல்வராஜ் மாஸ்டர். கணவன் மனைவி இருவரும் இணைந்து இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குச் சிலம்பக் கலைப் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

“சொந்த ஊரு திருநெல்வேலி. அவங்களுக்கு ராஜபாளையம். நாகர்கோவிலில் தங்கி சிலம்பம் கத்துக்கிட்டு, போட்டிகளை நடத்திட்டு இருந்தாங்க. நான் தேசிய அளவிலான பவர் லிஃப்டர். ‘ஸ்ட்ராங் வுமன் ஆஃப் இந்தியா’ பட்டம் வாங்கியிருக்கேன். 20 வருஷத்துக்கு முன்னாடி பவர்லிஃப்டரா ஒரு பெண்ணை இந்தச் சமுதாயம் ஏத்துக்கலை. தடைகளையெல்லாம் தாண்டி, எனக்கான அடையாளத்தை உருவாக்க நிறையவே சிரமப்பட்டேன். `இதெல்லாம் உனக்கு தேவையா' என்கிற பேச்சை நான் எதிர் கொள்ளாத நாளே கிடையாது. ஆனா, எங்க ஊரு பொண்ணுங்களுக்கு எப்பவும் நான்தான் ரோல் மாடல்!

ஒருமுறை தேசிய போட்டிக்குப் போயிருந் தப்போ சிலம்பம் சுத்துற வீரர்களைச் சந்திச்சேன். அவங்களை மாதிரி எனக்கும் சிலம்பம் சுத்தணும்னு ரொம்ப ஆசை. அங்கே ஓர் அண்ணன்கிட்ட அவங்க மாஸ்டர் நம்பரை வாங்கினேன். ரெண்டு நாள் கழிச்சு அந்த நம்பருக்குப் போன் பண்ணி சிலம்பம் கத்துக்கொடுக்க முடியுமான்னு கேட்டேன். `தாராளமா கத்துக் கொடுக்கலாம். பொண்ணுங்க சிலம்பம் கத்துக்க நினைக்கிறது ரொம்பப் பெருமையா இருக்கு'ன்னு சொன்னாங்க. உதாசீனப்படுத்தும் ஆண்களையே பார்த்து வளர்ந்த எனக்கு மாஸ்டருடைய ஊக்கம் நிறைந்த பேச்சு பிடிச்சுருந்துச்சு. அவரை நேரில் சந்திச்சதுக்கு அப்புறம் இப்படியும்கூட ஆண்கள் இருப்பாங்களான்னு ஒரு நல்ல எண்ணம் வந்தது” என அந்த நினைவுகளை ஒரு மாணவியாக நெகிழ்ந்தபடி ஐரின் சொல்லி முடிக்க, செல்வராஜ் தொடர்கிறார்...

செல்வராஜ் - ஐரின்
செல்வராஜ் - ஐரின்

“சிலம்பத்துக்கு ஆண் பெண் வித்தியாசமெல்லாம் தெரியாது. மனசுல தைரியத்தை விதைச்சு... யாரு கம்பைத் தொட்டாலும் அப்படியே வெறியேறி காத்துல கம்பு நிக்காம சுத்திட்டே இருக்கும். இவுக சிலம்பம் கத்துக்கணும்னு கேட்டதும் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாவும் பெருமையாவும் இருந்துச்சு. கத்துக்கொடுக்க ஆரம்பிச்ச சில நாள்களிலேயே நான் சொல்லிக்கொடுக்கிறதை சுலபமா புரிஞ்சுக்கிட்டாங்க. இவுக சிலம்பம் மேல காட்டின ஆர்வம்தான் எனக்கு அவுக மேல காதல் வர முக்கியமான காரணமா அமைஞ்சது. ரெண்டு பேருக்கும் சிலம்பம் உயிரா இருந்ததால எங்க காதலை நீட்டிக்க நினைச்சு திருமணம் செஞ்சுகிட்டோம்” என்று மென்மையாகச் சிரிக்கிறார் செல்வராஜ். கணவரை பெருமையாகப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஐரின் சொல்ல இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

“திருமணம் முடிஞ்சு 13 வருஷங்கள் ஆயிருச்சு. என்னை இப்பகூட நீங்க, வாங்கன்னு மரியாதையாதான் கூப்பிடுவாங்க. இவ்வளவு வருஷத்துல எங்க ரெண்டு பேருக்கும் எந்த கருத்து வேறுபாடும் வந்ததில்லை. சிலம்பத்தில் இப்பவும் அவருதான் எனக்கு ஆசான். திருமணம் ஆனதிலிருந்தே எனக்குன்னு ஓர் அடையாளத்தை உருவாக்கணும்கிறது அவரோட கனவு. `நீங்க ஒரு பவர் லிஃப்டர். திரும்பவும் அதைக் கையில் எடுங்க. நான் பக்கபலமாக இருக்கேன்'னு பலமுறை சொல்லியிருக்காங்க. ஆனா, என் கவனம் முழுக்க சிலம்பம் மேலதான் இருந்துச்சு. ரெண்டு பேருக்கும் சிலம்பம் தெரியுங்கிறதால வகுப்பு எடுக்க ஆரம்பிச்சோம்.

இந்த 13 வருஷங்கள்ல எத்தனையோ மாணவர்களை உருவாக்கியிருக்கோம். உலக அளவிலான போட்டிகளில் எங்க மாணவர்கள் நிறைய பேரை பங்கெடுக்க வெச்சிருக்கோம். அவங்கல்லாம் பதக்கங்களால இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துட்டு வர்றாங்க. நான் இப்போ ‘ஆல் இந்தியா சிலம்பம் ஃபெடரேஷ'னுக்குப் பொதுச் செயலாளரா இருக்கேன். இந்த அடையாளத்துக்குப் பின்னாடி ஆணி வேரா என் கணவர்தான் இருக்கார்” என்கிறார் ஐரின்.

“திருமணத்துக்கு முன்பே அவங்க தைரியம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது எப்பவும் அவங்ககூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால் அவங் களுக்குத் துணையா நின்னேன்... அவ்வளவுதான். பொண்ணுங்களை வளர்த்துவிடலைன்னாலும் அவங்களுக் குள்ள இருக்க திறமையை மறைக்காமல் இருந்தாலே போதும். தானா ஜெயிச்சு மேல வந்திருவாங்க” எனப் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் செல்வராஜ் மாஸ்டரிடம் ‘பட்டாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.

“எதிர்பாராமல் கிடைச்ச வாய்ப்புதான் பட்டாஸ். தனுஷ் சார் இந்த ரோல் பண்ணினதுனால, `அடிமுறை' என்கிற கலை மேல் இப்போ நிறைய பேர் ஆர்வம்காட்ட ஆரம்பிச்சிருக்காங்க. வெறும் கை கால்களால எதிரிகளை தாக்கறதும் தன்னை தற்காத்துக்கொள்றதும்தான் அடிமுறை. தனுஷ் சாரைப் பொறுத்தவரை கடமைனு வந்துட்டா அசுரனாகவே ஆகிடுறார். மாஸ்டருக்கு என்ன மரியாதை தரணுமோ அதையெல்லாம் தந்து ஒன்பது மாதங்கள் சிரத்தையா பயிற்சி எடுத்துக்கிட்டார்.

ஐரின்
ஐரின்

ஆரம்பத்தில் சினேகா மேடம்கிட்ட சின்ன தயக்கம் இருந்துச்சு. `பொண்ணுங்ககூட இதெல்லாம் பண்றாங்களா மாஸ்டர்'னு கேட்டாங்க. என் மனைவியை அடிமுறை செய்யச் சொல்லி ஒரு வீடியோ எடுத்து அனுப்பினேன். அதைப் பார்த்துட்டு சினேகா மேடம், ‘யாரு மாஸ்டர் இவங்க’ன்னு ஆச்சர்யமா கேட்டாங்க. அவங்க என் மனைவின்னு சொன்னப்ப அசந்துபோயிட்டாங்க. இப்படி பலரும் என் மனைவியை புகழணும், அவங்க பேரும் புகழும் இன்னும் பல மடங்கு எங்க காதலை போல உயரணும்’’ என்கிற செல்வராஜின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் காதலும் அன்பும் பெருக்கெடுத்து வழிகின்றன.