Published:Updated:

வயிற்றில் டியூப், கையில் பாக்கெட், சிகிச்சைக்காகத் தவிக்கும் கணவன்... போராடும் மனைவி!

நீலகண்டனுடன் மனைவி வனிதா
News
நீலகண்டனுடன் மனைவி வனிதா ( ம.அரவிந்த் )

''என் வீட்டுக்காரர் சின்ன உசுருகளுக்குக்கூட தீங்கு நினைக்க மாட்டாரு. நாய் குறுக்க ஓடியாந்துச்சுன்னு வண்டியை நிறுத்துனவருக்கு இப்புடி ஒரு நெலமை வந்துடுச்சு...''

வயிற்றில் டியூப், கையில் பாக்கெட், சிகிச்சைக்காகத் தவிக்கும் கணவன்... போராடும் மனைவி!

''என் வீட்டுக்காரர் சின்ன உசுருகளுக்குக்கூட தீங்கு நினைக்க மாட்டாரு. நாய் குறுக்க ஓடியாந்துச்சுன்னு வண்டியை நிறுத்துனவருக்கு இப்புடி ஒரு நெலமை வந்துடுச்சு...''

Published:Updated:
நீலகண்டனுடன் மனைவி வனிதா
News
நீலகண்டனுடன் மனைவி வனிதா ( ம.அரவிந்த் )

பட்டுக்கோட்டை அருகே விபத்தில் அடிபட்டு சிறுநீர் கழிக்க முடியாமல் தவிக்கும் கணவரை, எப்படியாவது குணப்படுத்திவிட வேண்டும் என அவரின் மனைவி போராடி வருகிறார். ''இந்தக் கொரோனா காலத்துல உங்க வீட்டுக்காரருக்கு இப்போ ஆபரேஷன் செய்ய முடியாதுனு அரசாங்க ஆஸ்பத்திரியில சொல்லிட்டாங்க. நாங்க சொல்ல முடியாத துயரங்களை அனுபவிச்சிட்டு இருக்கோம்...'' என்ற அவருடைய கண்ணீர் வார்த்தைகள் கலங்க வைக்கின்றன.

பட்டுக்கோட்டை அருகே உள்ள அழகியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், 28 வயதாகும் நீலகண்டன். இவரின் மனைவி வனிதாவுக்கு 24 வயது. இவர்களுக்கு 10 வயதுக்குட்பட்ட இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். டிராக்டர் டிரைவரான நீலகண்டன், கூலி அடிப்படையில் விவசாயப் பணிகளுக்கு டிராக்டர் ஓட்டிவந்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட நீலகண்டன்
விபத்தில் பாதிக்கப்பட்ட நீலகண்டன்

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு வயலில் உழுவு ஓட்டி முடித்த பிறகு, டிராக்டரை ஓட்டிக்கொண்டு சென்றபோது, நாய் ஒன்று குறுக்கே வந்துவிட, பதறிய நீலகண்டன் நாயைக் காப்பாற்றுவதற்காக வேகமாக பிரேக்கை அழுத்தியிருக்கிறார்.

இதில் நிலை தடுமாறிய அவர் டிராக்டரிலிருந்து தூக்கி வீசப்பட்டதுடன் இடுப்புப் பகுதியில் அவருக்கு பலமான அடிபட்டிருக்கிறது. மயக்கமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

ஆனால், நீலகண்டன் சிறுநீர் கழிக்க முடியாமல் தவிக்க, மீண்டும் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 'சிறுநீர் வரும் பாதையில் அடிபட்டிருப்பதால் நீர் வருவதில் பிரச்னையிருக்கிறது. ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடும். ஆனால், கொரோனா பரவிக்கொண்டிருப்பதால் இப்போது செய்ய முடியாது' எனக் கூறி, வயிற்றுப் பகுதியில் டியூப் வைத்து, சிறுநீர் கழிக்க தற்காலிக ஏற்பாடு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வனிதாவிடம் பேசினோம். ''என் வீட்டுக்காரர் சின்ன உசுருகளுக்குக்கூட தீங்கு நெனைக்கமாட்டாரு. நாய் குறுக்க ஓடியாந்துருச்சுன்னு வண்டியை நிறுத்தினவருக்கு, இன்னைக்கு இப்படி ஒரு நெலமை.

ஒரு நாள் ராத்திரி அய்யோ, அம்மானு முணகிக்கிட்டே இருந்தாரு. எங்க குடிசை வீட்டுல கரன்ட்டும் இல்ல. விளக்கை கொண்டுவர்றதுக்குள்ள 100 தடவை கதறியிருப்பாரு. பார்த்தா, வவுறு அந்தந்தண்டு வீங்கியிருந்துச்சு.

உடனே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டு ஓடினோம். அப்பதான் டியூப் வெச்சு, அதுல ஒரு பிளாஸ்டிக் பை சேர்த்து, '20 நாளைக்கு ஒரு தடவை குழாயை மாத்தணும், இல்லையினா புண்ணாகிடும்'னு சொல்லி அனுப்பிட்டாங்க. ரெண்டு மாசத்துக்கு மேல டியூப் வழியாதான் சிறுநீர் போறாரு. நொம்பினா எடுத்து ஊத்த, ராத்திரி முழுக்க நான் முழிச்சிக்கிட்டே இருக்கேன்.

கணவன் மனைவி
கணவன் மனைவி

வேலைக்குப் போயி ரெண்டு மாசம் ஆச்சு. ஒரு நாளு, சோறு வடிக்க அரிசியில்ல. 'என்ன இன்னும் சோறு பொங்கலை..?'னு கேட்டாரு. உடம்பு நோவுல இருக்க மனுசன்கிட்ட இந்த ரோதனையையும் சொல்லி கஷ்படுத்தக்கூடாதுனு, 'ஒண்ணும் இல்லீங்க...'னு சொல்லிட்டு, அவருக்கு மட்டும் நாலு இட்லியை வாங்கிக் கொடுத்துட்டு, பிள்ளைகளும் நானும் தண்ணியக் குடிச்சு வயிறை ரொப்பிக்கிட்டோம்.

ஒரு தடவை டியூப் மாத்த போயிட்டு வர்றதுக்கு 2,000 ரூபாய் செலவாகுது. இதுவரை நாலு தடவை மாத்திட்டோம். அதுக்குக் காசு ரெடி பண்ணவே என்னோட அரை ஆயுசு போயிடுது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் புருஷன் பழையபடி வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டா எல்லாம் சரியாகிடும்னு, தனியார் ஆஸ்பத்திரிக்காச்சும் போகலாம்னு நெனச்சேன். அங்க ஒரு லட்சம் செல்வாகும்னு சொன்னாங்க. இப்போதைக்கு நம்ம வீட்டுல அடுப்பெரிய வழியில்லன்னு தெரிஞ்சு, என்னையுமறியாம ஆஸ்பத்திரியிலேயே கண்ணீரு கொட்டிச்சு.

அவர் படுற ரோதனையை என்னால தாங்க முடியல. எந்த சாமியாவது எங்களைக் கண் திறந்து பாக்காதானு வேண்டிக்கிறேன். அடிக்கடி டியூப் மாத்திக்கிட்டேயிருந்தா உசுருக்கே ஆபத்தாயிடும்னு வேற சொல்லுறாங்க. மனசு கெடந்து அடிச்சுக்குது. எல்லாம் தலையெழுத்துனு நொந்துக்கிட்டு சும்மாவும் இருக்க முடியல.

 நீலகண்டன் மனைவி வனிதா
நீலகண்டன் மனைவி வனிதா

வயித்துல டியூபும் கையில பாக்கெட்டுமா இருக்குற என் புருஷனை பாக்க எனக்கு சக்தியில்ல. அப்பாவுக்கு எப்ப சரியாகும்மானு கேக்குற பிள்ளைகளுக்கு பதில் சொல்லவும் தெரியல. ஒரு லட்சம் இருந்தா எங்க பொழப்பு விடிஞ்சிரும்னு பலர்கிட்டயும் உதவி கேட்டு அலைஞ்சேன். என் காலு தேய்ஞ்சதுதான் மிச்சம்.

எப்ப விடியும்னு தெரியல. நானும் நம்பிக்கைய விடாம இருக்கேன்..!"

வனிதா வயதையொத்த பெண்கள் கல்லூரி முடித்து முதல் வேலை, முதல் சம்பளம் என்று வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் காலகட்டத்தில், வாழ்க்கையின் துயரங்கள் அவரை உருக்கிக்கொண்டிருக்கின்றன.

Note: 

இவருக்கு உதவி செய்ய முன்வரும் வாசகர்கள், help@vikatan.com - என்ற மெயில் ஐ.டிக்கு தொடர்புகொண்டு நீங்கள் செய்ய நினைக்கும் உதவி குறித்துத் தெரிவிக்கலாம். உங்கள் உதவியைக் வனிதாவுக்கு கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism