Published:Updated:

எங்கள் காலப் பொங்கல் விழா | 70's கிட்ஸ் #MyVikatan

பொங்கல் விழா
News
பொங்கல் விழா

தீபாவளி சமயத்தில் யார் வீட்டு வாசலில் அதிகப் பட்டாசு வெடித்த குப்பைகள் குவிந்திருக்கிறதோ, அவர்கள் செழிப்பானவர்கள் என்ற ஓர் அடையாளம் போல, பொங்கல் சமயத்தில் யார் வீட்டு வாசலில் அதிகக் கரும்புச் சக்கை இருக்கிறதென்று கவனித்த காலமொன்று உண்டு.

எங்கள் காலப் பொங்கல் விழா | 70's கிட்ஸ் #MyVikatan

தீபாவளி சமயத்தில் யார் வீட்டு வாசலில் அதிகப் பட்டாசு வெடித்த குப்பைகள் குவிந்திருக்கிறதோ, அவர்கள் செழிப்பானவர்கள் என்ற ஓர் அடையாளம் போல, பொங்கல் சமயத்தில் யார் வீட்டு வாசலில் அதிகக் கரும்புச் சக்கை இருக்கிறதென்று கவனித்த காலமொன்று உண்டு.

Published:Updated:
பொங்கல் விழா
News
பொங்கல் விழா

பொங்கல், தீபாவளி பண்டிகைகள்தான் எங்கள் கால இரட்டையர்கள்! இரண்டிற்கும் காட்டும் முக்கியத்துவத்தை வேறு எதற்கும் காட்டியதாக ஞாபகம் இல்லை. அப்பொழுதெல்லாம் பெரும்பாலும் எல்லா வீட்டிலும் தினசரி நாட்காட்டிகள் இருக்கும். நாட்காட்டி வந்தவுடனேயே தீபாவளி மற்றும் பொங்கல் தினங்கள் குறிக்கப்பட்ட தாள்களை, நன்கு அடையாளம் தெரியுமாறு மடித்து வைத்து விடுவோம். புது நாட்காட்டி வந்து 15 நாட்களுக்குள்ளாகவே பொங்கல் பண்டிகை வந்தாலும், வரும் நாள் எதுவென்று நன்கு தெரிந்திருந்தாலும், தினமும் காலையில் எழுந்தவுடன் ஒவ்வொரு தாளாக நகர்த்தி எண்ணிப் பார்ப்பதில் மனதுக்கு ஓர் உற்சாகம்.

பொங்கலின் தாத்பர்யம் மிகவும் புனிதமானது.

- முதல் நாள் போகியன்று, நமக்கு உதவிய பாய், படுக்கைகள் போன்றவற்றுக்கு நன்றி சொல்லி, அவற்றை நம்மிலிருந்து பிரித்துக் கொள்ளும் நாள்.

- இரண்டாவது நாளான பெரும் பொங்கலன்றோ, நமக்கு எல்லா விதத்திலும் உதவி புரியும் சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைத்து நம் நன்றியைக் காட்டும் நாள்.

- மூன்றாவது நாளான ‘ மாட்டுப் பொங்கல்’ தினத்தில், நமது வாழ்வில் நம்மோடு இணைந்து உழைத்து, நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவற்றைக் குளிப்பாட்டி அலங்கரித்து அவற்றுக்கும் பொங்கலிட்டுக் கொடுத்து, அவற்றின் திருஷ்டிகளையும் போக்கும் விதமான செயல்களைச் செய்கிறோம்.

-நான்காவது நாளான ‘காணும் பொங்கல்’ நாளில்தான் உற்றார் உறவினரைச் சந்தித்து, அவர்களுடன் அளவளாவி மகிழும் நாள்.

நன்றி என்பது அஃறிணைகளுக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று’ என்பதில் நம் முன்னோர் அவ்வளவு ஆணித்தரமாக இருந்திருக்கிறார்கள் என்பதைப் புரிய வைப்பதுதான் பொங்கல் பண்டிகை.

pongal vikatan
pongal vikatan

அப்பொழுதெல்லாம் நாட்காட்டியின் ஒவ்வொரு தாளையும் கூட மல்டி பர்பஸ் (multi-Purpose) உபயோகத்திற்குப் பயன்படுத்துவார்கள். சிலர், காலையில் எழுந்ததும் நாட்காட்டியின் அன்றைய தாளைக் கிழித்து, டப்பாவிலோ, கவரிலோ இருக்கும் கருவேல் பற்பொடியையோ, இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிரபலமான ‘கோபால்’ பல்பொடியையோ, ’கோல்கேட்’ பற்பொடியையோ அதில் கொட்டி மடித்துக் கொண்டு, குளத்திற்குச் செல்வார்கள். பல்துலக்கல், குளியல் எல்லாம் குளத்தில்தான். கோடை வந்துவிட்டால் சில குளங்களைக் குடிநீருக்கென்று ஒதுக்கி, யாரும் அக்குளத்தில் இறங்கக்கூடாது என்று ஊரில் ‘தண்டோரா’ மூலம் தெரியப்படுத்தி விடுவார்கள். காவலுக்கு ஓர் ஆளையும் போட்டு விடுவார்கள்.

எங்கள் ஊரில் ‘பிடாரி குளம்’ எப்பொழுதும் காவலுக்கு உட்படுத்தப்படும். ’தாமரைக் குள’த்தில் குளிக்கலாம். (அல்லி மட்டுமே உள்ள அந்தக் குளத்திற்கு தாமரைக்குளம் என்று பெயர்). வேறு சிலர் தினசரி முகத்தை ஷேவ் செய்யப் போடும் சோப்பை, ஷேவிங் மெஷினிலிருந்து துடைக்க, நாட்காட்டித் தாளைப் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலரோ, அவசரமாக ஏதாவது குறிக்க, அதன் வெள்ளையான பின்புறத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தற்போது, அநேகக் கோயில்களில் விபூதி-குங்குமம் மடித்து வீட்டிற்கு எடுத்துச் செல்ல நாட்காட்டியின் தாள்கள் பயன்பட்டு வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொங்கலுக்கு ஒரு வார இடைவெளியில் பக்கத்து டவுனில் ‘பொங்கல் சந்தை’ கூடும். எங்களுக்குப் பக்கத்து டவுன் திருத்துறைப் பூண்டிதான். 10 கி். மீ. அப்பாலுள்ள திருத்துறைப் பூண்டிக்கு ஒவ்வொரு தெருவிலுமுள்ள மூன்று, நான்கு பேர் சேர்ந்து பாரை வண்டியில் மாடுகளைப் பூட்டி ஓட்டிக்கொண்டு கிளம்புவார்கள். எங்கள் ஊர் வண்டி மாடுகள் அனைத்துமே கொம்பு தீய்க்கப்பட்ட மொட்டை மாடுகள்தான். கொம்பு வளர்வதால் மாடுகளின் திறன் குறைந்து விடுமென்று நம்பியதால், கொம்பு வளர ஆரம்பித்தவுடனேயே, மாடுகளின் கால்களைக்கட்டி பூமியில் கிடத்தி விட்டு, பழுகக் காய்ச்சிய இரும்புக் குச்சிகளால் மாடுகளின் கொம்புகளைத் தீய்த்து விடுவார்கள்.

வேலு என்பவர் அப்பொழுது அத்தொழிலில் எக்ஸ்பர்ட். சிவன் கோயிலுக்கு எதிரே அடிக்கடி அது நிகழும். சில மாடுகளின் வேதனைக் கத்தல்கள் இன்னும் நமது காதுகளில். ஊரில் அபூர்வமாகச் சிலர் கொம்பு மாடுகள் வைத்திருப்பார்கள். அவற்றைப் பெரும்பாலும் கூண்டு வண்டிகளை இழுக்கவே பயன்படுத்துவார்கள். அவற்றைப் பாரை வண்டிகளிலும், உழவுக்கும் அதிகம் பயன்படுத்த மாட்டார்கள்.

Pongal holidays
Pongal holidays

பொங்கல் சந்தையில் கரும்புக் கட்டுகளும், வாழைத்தார்களும் பிரதான இடம் பிடித்திருக்கும். அப்புறம் இஞ்சி, மஞ்சள் கொத்துக்கள் மற்றும் காய்கறிகள். அவரைக் காயும், சர்க்கரை வல்லிக்கிழங்கும் முக்கியப் பங்கு வகிக்கும். மாடுகளுக்கான மணிகள், தலைக்கயிறுகள், மூக்கணாங்கயிறுகள், நெட்டியில் செய்யப்பட்ட பல வண்ண மாலைகள், வண்ணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நிறையக் கடைகள் வரிசைகட்டி நிற்கும். பெரிய இடத்தில் நிறையப்பேர் விற்பனை செய்வார்கள்.

வாங்கச் செல்பவர்கள் வேகமாக ஒரு ரவுண்ட் சென்று, எங்கு நல்ல கரும்பு உள்ளது, யார் நல்ல வாழைப்பழங்கள் விற்கிறார்கள், எங்கு மலிவாக உள்ளது என்பதையெல்லாம் கணித்த பிறகு, அவர்களிடம் பேரம் பேசி கரும்புக் கட்டுகளையும், வாழைப்பழத் தார்களையும், இஞ்சி, மஞ்சள் பிறவற்றையும் வாங்கி வந்து வண்டியில் ஏற்றி விடுவார்கள். வாழைப் பழத்தில் ‘பூவன்’ என்றழைக்கப்படும் வகையே அதிகமாக விற்பனையாகும். அதைத்தான் தார், தாராக வாங்குவார்கள்.

எங்கள் வீட்டில் எனது தாயாருக்குப் பூவன் அவ்வளவாகப் பிடிக்காது என்பதால், மொந்தன் பழத்தைச் சில சீப்புகள் வாங்குவதை எனது தந்தையார் வழக்கமாகக் கொண்டிருந்தார். வண்டிகள் ஊர் வந்து சேர முன்னிரவாகி விடும். அவரவர் வீடுகளுக்கு, வண்டிக்காரர் எல்லாவற்றையும் கொண்டு சேர்த்து விட்டே தன் வீடு செல்வார்.

போகிப் பண்டிகையன்று பழசைக் கொளுத்தும் வழக்கமெல்லாம் எங்கள் ஊரில் கிடையாது. ஒரு சில வீடுகளில் மட்டும் போகியன்று இரவு வெண் பொங்கல், வீட்டு அடுப்பிலேயே பொங்கி, சாமிக்குப் படைப்பார்கள். அந்த வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று.

பொங்கல் பண்டிகையின் பிரதான நாளான பெரும் பொங்கல் அன்று, அவரவர் வீட்டு வாசலில் ‘கோடு’ தோன்றி விடுவார்கள். (கோடு என்பது பூமியில் 2, 3 அடி நீளத்திற்கு, சுமார் அரை, முக்கால் அடி அகலத்திற்கு, ஏறத்தாழ ஓர் அடி ஆழத்திற்கு எடுக்கப்படும் அடுப்பாகும். )அதன் இரு பக்கங்களிலும் களி மண் உருண்டைகளை வைத்துப்பொங்கல் பானைகளை அதன் மேல் வைக்க ஏதுவாகச் செய்து கொள்வார்கள்.

சூரிய பகவானுக்குப் பொங்கலிட்டுப் படைப்பதே நோக்கம். வாசலில் சூரிய ஒளியில், சூரியன் கண்முன்னாலேயே, நல்ல நேரத்தில், புதுப்பொங்கல் பானைகளை வைப்பார்கள். அநேகமாக இரண்டு பானைகள் இருக்கும். சற்றே சிறிதாய் இருப்பது சர்க்கரைப் பொங்கலுக்கும், மற்றொன்று வெண் பொங்கலுக்கும். பானைகளின் கழுத்தில் இஞ்சி, மஞ்சள் கொத்துகளைக் கட்டி விடுவார்கள். நீர் கொதித்ததும் வெண்பொங்கல் பானையில், களைந்து வைத்திருக்கும் அரிசியைப் போட்டு மூடி விடுவார்கள். அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் என்று வரிசைக் கிரமமாக சர்க்கரைப் பொங்கல் பானைக்குள் அனைத்தும் செல்லும்.

பொங்கல் பண்டிகை தமிழகமெங்கும் கோலாகல கொண்டாட்டம்!
பொங்கல் பண்டிகை தமிழகமெங்கும் கோலாகல கொண்டாட்டம்!

வெண்பொங்கலுக்குத் தேங்காய்த் துருவல் மட்டுமே துணை. கோட்டில் விறகைச் சீராக எரிய விடுவதும், விறகு மண்பானைகளைப் பங்கப்படுத்தாமலும் பொங்கல் இடுவதே ஒரு கலை. பானையின் அடியில் பொங்கல் பிடிக்காமல் கிண்டுவதற்குப் பொறுமையும், நிதானமும் தேவை. மூடிவைத்த பொங்கல் பானையின் மூடியைத் தள்ளியபடி பொங்கி வரும்போது, ”பொங்கலோ பொங்கல்” என்று பூரிப்புடன் பெரிதாய்க் குரலெடுப்பது வழக்கம்.

சர்க்கரைப் பொங்கலுக்கு ‘சைட் டிஷ்’ ஷாக அவரைக்காய் மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு கலந்து செய்த பொரியலும், வெண் பொங்கலுக்குப் பிடி கருணையில் செய்யப்பட்ட தொக்கும் செய்வது வழக்கம். கூடுதலாகத் தேங்காய்த் துவையலும் சேர்ந்து கொள்ளும்.

எல்லாம் தயாரானதும், நடு முற்றத்தில் சாணத்தால் மெழுகப்பட்ட இடத்தில் தலை வாழை இலையில் பொங்கலை வைத்து, கூடவே வாழைப்பழம், வெல்லக்கட்டி போன்றவற்றையும், கரும்புத் துண்டையும் வைத்து சூரியனுக்குப் படைப்பார்கள். தலை வாழை இலையின் எண்ணிக்கை, வீட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து, 3, 5, 7 என்று ஒற்றைப்படை எண்ணில் அமையும்.

அப்புறமென்ன? ஆளுக்கொரு இலையை இழுத்து வைத்துக் கொண்டு வயிறு முட்டப் பொங்கலைச் சுவைக்க வேண்டியதுதான். சர்க்கரைப் பொங்கலின் மேல் மேலும் நெய்யை ஊற்றிக் குழைத்து அடித்த அந்தப் பொங்கல் நாட்கள் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாதவை.

அடுத்த நாள் காலையில் குளிக்கப்போகும்போதே, பலரும் குளக்கரை மற்றும் வாய்க்காங்கரையிலுள்ள கோரையை வேருடன் பிடுங்கி, மண்போக அலசிக் கொண்டு வந்து, மூன்று நான்காக வகிர்ந்து கூரையில் காய வைத்து விடுவார்கள். இரவில் மாடுகளின்கழுத்தில் தேங்காய் மூடி மற்றும் வேப்பிலை மாலை கட்ட அதனைப் பயன்படுத்துவார்கள். மதியம் பல வீடுகளிலும் ஆட்டுக் கறிக் குழம்பாகவே இருக்கும். ஆட்டுக்கறியை ஒரு பிடி பிடித்து விட்டு மாலையில் மாட்டுப் பொங்கல் கொண்டாட ரெடியாகி விடுவோம்.

வீட்டிலுள்ள அனைத்து மாடுகளையும் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, புதுப் பெண்ணை மணமேடைக்குத் தயார் செய்வதைப் போல, மாடுகளை அலங்கரிப்பார்கள். மாலையானதும் இரண்டு, மூன்று வீடுகள் ஒன்று சேர்ந்தோ, தனியாகவோ, தெரு மொத்தமும் ஒன்றாகவோ, மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுவார்கள். எங்கள் தெருவில்தான் எப்பொழுதும் கடைசியாகப் பொங்கல் கூறுவார்கள்.

மைதானத்தில் பசுஞ்சாணத்தால் ஆன பிள்ளையாரைப் பிடித்து, முழு செங்கல்லின் மீது வைத்து வணங்கிய பிறகு, பொங்கல் ஆரம்பமாகும். கோடு வெட்டி, புதுப் பானையில் உப்புப் போடாமல் பொங்கி, அதைச் சாமிக்குப் படைக்கையில், அவரவர் வீடுகளிலிருந்து ஓலைக் குட்டான்களில், அதாவது ஓலையால் பின்னப்பட்ட பெருங்கூடைகளில் மாடுகளுக்கான ஆபரணங்களுடன், நல்லெண்ணை, சிகைக் காய்த்தூள் போன்றவற்றையும் கொண்டு வந்து சாமிக்குப் படைத்து விட்டு, மீண்டும் வீடுகளுக்கே எடுத்துச் செல்வார்கள். கூடவே, பொங்கப்பட்ட உப்பில்லா பொங்கலையும் வாங்கிச் செல்வார்கள். வீட்டில், முளைகளில் கட்டப்பட்டிருக்கும் மாட்டின் தலையில் கொஞ்சம் எண்ணையை வைப்பார்கள். ’எண்ணை…எண்ணை’ என்று கூறியபடியே. அப்புறம் கொஞ்சம் சிகைக்காய். அதன்பிறகு தண்ணீரைத் தெளிப்பார்கள். எல்லாவற்றின் பெயரையும் சொல்லிக்கொண்டே தெளிப்பார்கள்.

உணவின் முழுச்சத்துகளுக்கும் உத்தரவாதம் தரும் மண்பானை சமையல் மகிமை! #Pongal
உணவின் முழுச்சத்துகளுக்கும் உத்தரவாதம் தரும் மண்பானை சமையல் மகிமை! #Pongal

என் தந்தையார், ’எண்ணை…எண்ணை’ ‘தண்ணி…தண்ணி’ என்று சொல்லித் தெளித்தது இன்றைக்கும் என் காதுகளில் கேட்கிறது. எண்ணைக் குளியல் முடிந்த பிறகுதான் ஆபரணங்கள் சூடல் தொடங்கும். அதற்கு முன்னால் கொஞ்சம் பொங்கலையும் அவற்றுக்குக் கொடுத்து விடுவார்கள்.

கழுத்தில் வெண்கலத்தாலான மணி. நெட்டிகளால் செய்யப்பட்டு பல வண்ணங்கள் பூசப்பட்ட மாலைகள். பனை ஓலையில் தாமரை வடிவில் செய்யப்பட்டு, வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு அவனியில் கோர்க்கப்பட்ட மாலைகள். அதனூடே வேப்பிலை மாலையும், தேங்காய் மூடி மாலையும். அப்புறம், நெற்றிக்குப் பனை ஓலையால் செய்யப்பட்ட நெற்றிச் சுட்டி. அதற்கும் பொருத்தமான வண்ணமுண்டு. ஏற்கெனவே வண்ணம் பூசப்பட்ட கொம்புகளில், நெற் பதரால் செய்யப்பட்ட குஞ்சம். வெள்ளிக் குஞ்சமென மின்னும். அதன்பிறகு, இரண்டு கொம்புகளையும் இணைக்கும் விதமாக நெட்டி, வேப்பிலை மாலைகள்.

இவற்றையெல்லாம் மாடுகளுக்குப்பூட்டி, பொங்கலிடும் மைதானத்திற்கு அழைத்து வரும்போது, புது மணப்பெண்ணைப் பூரண அலங்காரத்துடன் மணமேடைக்கு அழைத்து வருவது போலவே இருக்கும். பசுக்களுக்கும், எருமைகளுக்கும், வண்டி மற்றும் உழவு மாடுகளுக்கும், காளைகளுக்கும் ஒரே விதமான ட்ரீட்மெண்ட்தான். அதாவது அலங்காரத்தில் அதிக மாறுபாடு இருக்காது. ஆனாலும், அந்த வண்டி மற்றும் உழவு மாடுகள், நமக்காகச் செய்யும் தியாகங்கள் அசாதாரணமானவை. சிறு வயதிலேயே தங்கள் கொம்புகளைத் தீய்த்துக் கொள்வதுடன், பருவ வயதில் ஆண்மையைத் தியாகம் செய்துவிட்டு நமக்காக ஆயுளுக்கும் உழைக்கின்றன. இரவுஇரண்டு மணிக்கு அவிழ்த்துப் பிடித்து வண்டியில் பூட்டினாலும், மறுப்பேதும் கூறாமல் இழுத்துச் செல்லும் தியாகச் செம்மல்கள் அவை.

ஆபரணங்களால் அழகு படுத்தப்பட்ட அத்தனை மாடுகளையும் மைதானத்தின் நடுவில் நிறுத்தி, புதுச்சட்டியில் உப்பு, மிளகாய் ஆகியவற்றுடன் தணலையும் சேர்த்து எடுத்துக் கொண்டு முன்னால் ஒருவர் போக, மற்றவர்கள் அவரைப் பின் தொடர, ”பொங்கலோ…பொங்கல்” கோஷம் வானை எட்ட, மூன்று சுற்றுக்கள் முடிந்த பிறகு வைக்கோலைப் போட்டு அதன்மீது அந்தத் தணலைக்கொட்டி எரியச் செய்வார்கள். ஒவ்வொரு மாடாக அந்தத் தணலைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

அப்போதுதான் ஆரம்பிக்கும் வேடிக்கை. நெருப்பைக் கண்டதும் மாடுகள் விலகி ஓட முயல, தலைக் கயிற்றைப் பிடித்திருப்பவர் அதனுடன் போராட, சின்ன ஜல்லிக்கட்டே நடைபெறும். மாடுகள் தணலைத் தாண்டிச் சென்றால்தான் திருஷ்டிகள் கழியும் என்பது ஐதீகம். போராடி, எப்படியும் இழுத்து வந்து நெருப்பைத் தாண்ட வைத்து விடுவார்கள்.

பஞ்சாப் மாநில அமிர்தசரசின் ‘ஜாலியன் வாலாபாக்’ படுகொலை நிகழ்ச்சிதான் அப்போதெல்லாம் எம் மனத்தில் நிழலாடும். அகண்ட மைதானத்தின் குறுகிய நுழைவாயில் காரணமாகத்தானே நம்மவர்கள் சிக்கிக்கொண்டு செய்வதறியாது திகைத்தார்கள். மைதானத்தின் குறுகிய வழி எதுவோ அதில்தான் வைக்கோலைக் கொளுத்துவார்கள். மாடுகள் தீயைத் தாண்ட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில். அங்கோ…தீய எண்ணத்துடனேயே ஆங்கிலேயர்கள் செயல்பட்டார்கள்.

பின்னர் அனைத்து மாடுகளையும் அன்றிரவு மாட்டுக் கொட்டகையினுள்ளே கட்டி, அன்றைக்கு அறுத்து வரப்பட்ட பசும் புல்லை உணவாகப் போட்டு விட்டு வந்து விடுவார்கள். அடுத்த நாள் காலையில் வாசலில் உலக்கையைப் போட்டு அதனைத் தாண்டச் செய்து மாடுகளை வெளியே விடுவார்கள்.

எங்கள் ஊரில் எங்கள் இளமைக் காலத்தில் ‘காணும் பொங்கல்’ என்பது மாட்டுப் பொங்கல் முடிந்த அன்றிரவே ஆரம்பித்து விடும். ஊரிலுள்ள அனைத்துப் பெரியவர்களின் வீடுகளுக்கும் சென்று சாஷ்டங்கமாகக் காலில் விழுந்து ஆசி வாங்குவோம். நெற்றிகள் விபூதியால் திணறும். பல வீடுகளில் பயத்தம் பருப்புப் பாயசமும், உளுத்தம் வடையும், வாழைப்பழமும் கொடுத்து உபசரிப்பார்கள். அநேகமாக ஊரின் எல்லா வீடுகளிலும் அன்றைக்கு அந்த டிஷ் இருக்கும். பாயசமும், வடையும் வயிற்றைக் கிறங்க வைக்கும்.

நானும் எனது கசினும் போட்டி போட்டுக்கொண்டு வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிட்ட கதையெல்லாம் உண்டு. பொங்கலின்போது ஒரு வாரம் முழுவதும் கையில் கரும்பைக் கடித்தபடிதான் நட்புப் பேச்சுக்கள் தொடரும்.

Pongal
Pongal
Pongal Images

தீபாவளி சமயத்தில் யார் வீட்டு வாசலில் அதிகப் பட்டாசு வெடித்த குப்பைகள் குவிந்திருக்கிறதோ, அவர்கள் செழிப்பானவர்கள் என்ற ஓர் அடையாளம் போல, பொங்கல் சமயத்தில் யார் வீட்டு வாசலில் அதிகக் கரும்புச் சக்கை இருக்கிறதென்று கவனித்த காலமொன்று உண்டு. ஏனெனில் வாழைப்பழத்தோல், மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் உணவாகிப் போவதால், அவற்றைக் கணக்கெடுக்க இயலாது.

மாட்டுப் பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே சேற்று வயலில் குஞ்சம் சேகரித்ததும், பனை மரத்தில் ஓலை வெட்ட முயற்சித்துக் காயம் ஏற்படுத்திக் கொண்டதும், ஓலையில் நெற்றிப்பட்டமும், தாமரை மொட்டும் செய்யக் கற்றுக்கொண்டபோது சரியாகச் செய்ய வராத காரணத்தால் நம்மை நாமே திட்டிக் கொண்டதும், கொம்புக்கு வண்ணம் பூச முயன்றபோது மாடு தலையை ஆட்ட, கொம்பு கண் புருவத்தில் காயமேற்படுத்த, ’இத்தோடு போச்சே’ என்று அம்மா ஆதங்கப்பட்டதும் போன்ற நிழ்வுகளெல்லாம் ஆயுள் பரியந்தம் அடி மனத்தில் நிலைத்துப் போனவை.

மாடுகள் நமக்குக் கற்றுத் தருபவை ஏராளம். இரு வண்டி மாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இலக்கை அடைய முடியும். கணவனும், மனைவியும் அவ்வாறே கடமையாற்றினால்தான் வாழ்க்கை வண்டி சிரமமின்றி முன்னேறும். இன்று வரை மாட்டுப் பாலுக்கு இணையான சிறந்த உணவு வேறு எதுவுமில்லை. அவை தங்கள் இனத்தைக் காப்பதுடன் மனித வாழ்வு சிறக்கவும் உதவுகின்றன- தன்னலமின்றி!

மாட்டுச் சாணமும் சிறுநீரும் நல்ல இயற்கைக் கிருமி நாசினிகள், விளைக்கும் பூமியை உயிர்ப்பிக்கும் உரங்கள். சுற்றுச் சூழலைப் பேணிக் காக்கும் செல்வங்கள் அவை. அவற்றின் உழைப்பையும் பயனையும் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

- நமக்கு உதவும் விலங்குகளுக்கு நன்றி சொல்வோம்!

-காணும் பொங்கல் நாளில் கனிவுடன் உறவுகளைப் பேணுவோம்!

- கொரோனாவையும், ஓமிக்ரானையும் மனதில் கொண்டு, விதிகளைப் பின்பற்றுவோம்!

- ரெ.ஆத்மநாதன், காட்டிகன், சுவிட்சர்லாந்து