Published:Updated:

பிரசவத்திற்கு சென்ற மனைவி வயிற்றில் ஊசி வைத்து தைத்த டாக்டர்கள்; நீதி கேட்கும் கணவர்; என்ன நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறும் உறவினர்கள்
மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறும் உறவினர்கள்

``லெட்சுமியின் உடலைக் கொடுப்பதற்கு முன்பு மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம், `லெட்சுமி இறப்பில் எந்தச் சந்தேகமும் இல்லை, இது தொடர்பாக நீதிமன்றத்துக்கும் செல்ல மாட்டோம் என எழுதிக் கொடுத்தால் மட்டுமே உடலைத் தருவோம்' என அழுத்தம் கொடுத்து எழுதி வாங்கினர்."

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு செவிலியர் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் பிறந்த குழந்தையின் கை கட்டைவிரல் துண்டான சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் மறையவில்லை. இப்போது, ``சிசேரியன் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்தபோது டாக்டர்கள், செவிலியர்கள் கவனக் குறைவாகச் செயல்பட்டதால் என் மனைவியின் வயிற்றில் ஊசி போன்ற ஏதோ ஒரு பொருளை வயிற்றுக்குள் வைத்து தைத்துவிட்டனர். இதனால் என் மனைவி இறந்துவிட்டார். பச்சிளம் குழந்தையுடன் நான் தவித்து நிற்கிறேன்'' எனப் பாதிக்கப்பட்ட கணவர் புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்த லெட்சுமி
உயிரிழந்த லெட்சுமி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள இளங்கார்குடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (39). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி லெட்சுமி (34 ), எம்.ஏ, எம்.பில் பட்டதாரி. இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த லெட்சுமியை பிரசவத்துக்காக விஜயகுமார் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதைத் தொடர்ந்து அன்று இரவே சிசேரியன் ஆபரேஷன் மூலம் லெட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிகிச்சையிலிருந்த லெட்சுமி உயிரிழந்து விட்டார்.

``ஆபரேஷன் செய்தபோது டாக்டர்கள், செவிலியர்கள் அலட்சியமாகச் செயல்பட்டதால் ஊசி போன்ற ஏதோ ஒரு பொருளை லெட்சுமியின் வயிற்றுக்குள் வைத்துத் தையல் போட்டுவிட்டனர். அதுவே என் மனைவியின் உயிரைப் பறிக்க காரணமாக அமைந்திருக்கிறது. டாக்டர்கள் காட்டிய அலட்சியம் இரண்டு பிள்ளைகளுடன் என்னை தெருவில் நிற்க வைத்திருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைக் கவனித்துக்கொண்டே வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்'' என்று விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை
ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை
செவிலியரின் கவனக்குறைவால் துண்டான குழந்தையின் கைவிரல்; அரசு மருத்துவ மனையில் நடந்தது என்ன?

இது குறித்து விஜயகுமாரிடம் பேசினோம். ``பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கும்போது என் மனைவியின் உடலில் மஞ்சள் காமாலை உள்ளிட்ட எந்தப் பிரச்னையும் இல்லை. குழந்தை பிறந்த சில நாள்களுக்குப் பிறகு, அவருக்கு உடம்பில் பிரச்னை ஏற்பட்டது. மஞ்சள் காமாலை உள்ளதாகச் சொல்லிக் குழந்தையைத் தனியாகவும், என் மனைவியைத் தனியாகவும் வைத்து சிகிச்சை அளித்தனர். 15 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. சிறுநீரில் ரத்தம் கலந்து வரத்தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வயிற்றுப் பகுதி மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவை எடுத்தனர். மனைவி உடல்நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை. டாக்டர்களிடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை. `டிஸ்சார்ஜ் செய்யுங்க, நான் பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல வெச்சுப் பார்த்துக்கிறேன்' என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். இந்நிலையில் வயிற்றுப் பகுதியில் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் என் மனைவி லெட்சுமியின் வயிற்றுக்குள் ஊசி போன்ற ஏதோ ஒரு பொருள் இருப்பது டாக்டர்களுக்குத் தெரியவந்திருக்கிறது.

Surgery (Representational Image)
Surgery (Representational Image)
Photo by JAFAR AHMED on Unsplash

அடுத்த நாளே என் வீட்டுக்கு வந்த டாக்டர்,செவிலியர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் ஏதேதோ காரணம் சொல்லி என் மனைவியை அழைத்துச் சென்றனர். ராசா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தவர்கள் அதன் பிறகு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சையைத் தொடர்ந்தனர். ஆனால், கடந்த 22-ம் தேதி என் மனைவி லெட்சுமி இறந்துவிட்டார். பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு, `என்னை அநாதையாகத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாளே உங்க அம்மா' என்று கதறினேன்.

லெட்சுமியின் உடலைக் கொடுப்பதற்கு முன்பு மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம், `லெட்சுமி இறப்பில் எந்தச் சந்தேகமும் இல்லை, இது தொடர்பாக நீதிமன்றத்துக்கும் செல்ல மாட்டோம் என எழுதிக் கொடுத்தால் மட்டுமே உடலைத் தருவோம்' என அழுத்தம் கொடுத்து எழுதி வாங்கினர். அதன் பிறகுதான் எனக்கும், எங்கள் உறவினர்களுக்கும் சந்தேகமே எழுந்தது. மருத்துவக் கல்லூரியில் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டை கேட்டதுக்கு சிடி ஸ்கேன் ரிப்போர்ட் மட்டும் கொடுத்தார்கள்.

வயிற்றுப் பகுதிக்கு எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் கொடுக்காமல் அலைய விட்ட பின்னர், ஃபிலிம் அழிந்துபோய்விட்டது என்று அலட்சியமாகப் பதில் கூறினர். சிசேரியன் ஆபரேஷன் செய்த போது டாக்டர்கள், செவிலியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். அப்போது ஊசி போன்ற ஏதோ ஒரு பொருளை வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டுவிட்டனர். அதனாலேயே சிறுநீரில் ரத்தம் கலந்து வந்துள்ளது. டாக்டர்கள் தங்கள் தவற்றை மறைக்க தவற்றுக்கு மேல் தவறு செய்கிறார்கள்.

அலட்சியத்தால் ஓர் உயிர் பறிபோய்விட்டது. பாலுக்காக அழும் பச்சிளம் குழந்தையான என் மகனைத் தேற்ற முடியவில்லை. என்ன நடக்கிறது என்றே புரியாத என் இரண்டு வயது மகன், `அம்மாக்கிட்ட போகணும்' என்று அடம்பிடிக்கிறான். சாதாரண விவசாயக் கூலிக் குடும்பத்தில் பிறந்த என்னை ஏமாற்றிவிடலாம் என டாக்டர்கள் நினைக்கிறார்கள். ஸ்கேன் ரிப்போர்ட் வெளியில் கிடைத்தால் அனைவரும் மாட்டிக்கொள்வார்கள் என்பதால் அதைத் தரவில்லை.

மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறும் உறவினர்கள்
மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறும் உறவினர்கள்
உயிரிழந்த மகன், கலங்கி நின்ற தாய்; சுடுகாடு வரை சென்று அடக்கம் செய்து நெகிழச் செய்த பெண்!

இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறேன். முதலமைச்சர் ஸ்டாலின் சார் இதில் தலையிட்டு என் மனைவி விஷயத்தில் என்ன நடந்து என்று அறிந்து, அவர் இறப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைகள்தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம். எங்கள் பாதுகாப்பு அங்கு கேள்விகுறியாகின்ற நிலை இருக்கிறது. அலட்சியத்தால் என் மனைவி உயிர் பறிபோய்விட்டது. 22 நாள் குழந்தை மற்றும் இரண்டு வயது மகனுடன் தவித்து நிற்கும் எனக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரியிடம் கேட்டபோது, இது தவறான தகவல் என்றும் விரைவில் இதற்கான விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விஜயகுமார் மனு கொடுத்தபோது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு