தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

காசு சேர்த்து காது கேக்குற மெஷின் வாங்கிக்கொடுக்கணும்!

ராமானுஜம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமானுஜம்

மெளனம் பேசியதே... - ராமானுஜம் - தேவி

கையசைவுகளும் கண்ணசைவுகளும்தாம் ராமானுஜம் - தேவி தம்பதியின் காதல் கைகூட காரணமாக அமைந்திருக்கிறது. காலையில் மலர்ந்த இவர்கள் காதல், மாலையில் திருமணத்தில் முடிந்திருக்கிறது!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி இவர்களுக்குச் சொந்த ஊர். இருவராலும் வாய் பேச முடியாது. இருவருக்கும் காது கேட்காது. இவர்கள் காதலின் மொத்த முடிச்சுகளும் கண்களுக்குள்ளே பொதிந்திருக்கிறது. மூன்று மாதத் திருமண வாழ்க்கையை நொடிக்கு நொடி ரசித்து வாழும் இவர்கள் வசிப்பது ஒரு கூரை வீட்டில். நாம் சென்றபோது ராமானுஜம் ஆட்டுக்கல்லில் மாவைத் தள்ள, மாவாட்டிக்கொண்டிருந்தார் தேவி.

ராமானுஜம் - தேவி
ராமானுஜம் - தேவி

நம்மிடம் பேச வார்த்தைகளைக்கொட்ட முயற்சி செய்கிறார் ராமானுஜம். அவை வேறு வேறு ஒலிகளாக வந்து விழுகின்றன. அவர்களின் மெளன மொழிகளை நமக்குப் பொறுமையாக மொழிபெயர்த்தார் ராமானுஜத்தின் நண்பர் ராமச்சந்திரன்.

“சொந்தக்காரங்க கல்யாணம் அது... அங்கேதான் தேவியை முதன்முதல்ல சந்திச்சேன். அவளுக்கும் மௌனம்தான் மொழி. பார்த்தவுடனேயே மனசுக்குள்ள சந்தோஷம். ஏதோ, ரொம்பநாள் பார்க்கக் காத்திருந்த சொந்தத்தைப் பார்த்தமாதிரி ஓர் உணர்வு. ரெண்டுபேரும் கண்களாலேயே பேசிக்கிட்டோம். கண்டதும் காதல்தான். அதுவரை மனசுக்குள்ள புதைச்சு வெச்சிருந்த எல்லாத்தையும் அந்த ரெண்டு மணி நேரத்துல வார்த்தைகளே இல்லாம நாங்க கண்களாலேயே உரையாடித் தீர்த்தோம்” என்றபடியே தன் காதல் மனைவியை வெட்கம் மிளிரப் பார்த்துக்கொள்கிறார் ராமானுஜம். சிரித்துக்கொண்டே பேச ஆரம்பிக்கிறார் தேவி.

தேவி, ராமானுஜம்
தேவி, ராமானுஜம்

“நெறைய சினிமால பார்த்திருக்கேன். ஹீரோதான் மொதல்ல காதலை சொல்லுவாரு. அதுமாதிரிதான் இங்கேயும்... மொதல்ல அவருதான் என்னைக் காதலிக்கிறதா சொன்னாரு” என்று கள்ளங்கபடமில்லாமல் குழந்தையாக மாறி சைகை மொழி பேசுகிறார் தேவி.

``நான் நாகப்பட்டினம். எங்க அத்தை பொண்ணு மாதவியோட கல்யாணத்துக்காகத்தான் கறம்பக்குடிக்கு வந்தேன். கடைசிவரை நான் கல்யாணத்துக்கு வரமாட்டேன்னுதான் சொல்லிட்டு இருந்தேன். வீட்ல இருந்த எல்லாரும் என்னைக் கட்டாயப்படுத்தி கூட்டிக்கிட்டுப் போனாங்க. அன்னிக்கு மட்டும் நான் போகாம இருந்திருந்தா, இந்த அற்புதமான வாழ்க்கை கிடைக்காமலே போயிருக்கும்” என்கிற தேவியின் கண்கள் கலங்குகின்றன. அவர் முதுகைத் தடவிவிட்டபடியே பெருமையோடு பேசுகிறார் ராமானுஜம்.

தேவி, ராமானுஜம்
தேவி, ராமானுஜம்

“எப்படிப்பட்ட பொண்டாட்டி அமையணும் நான் எதிர்பார்த்தேனோ... அப்படிதான் இருந்தா என் தேவி. பார்த்த கொஞ்ச நேரத்திலேயே, ‘எனக்கு உன்னைப் பிடிச்சுருக்கு... கல்யாணம் பண்ணிக்கலாமா’ன்னு கேட்டுட்டேன். ஆனாலும், உள்ளுக்குள்ள கொஞ்சம் பயம் இருக்கத்தான் செஞ்சது. தேவியோ, எப்ப நான் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்பேன் என்கிற மாதிரி... வெட்கத்தோட சரி சொன்னாங்க. அந்த நிமிஷம் அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. பெரியவங்ககிட்ட பேசினோம். அன்னிக்கு சாயங்காலமே ரெண்டு பேருக்கும் திருமணம் செஞ்சு வெச்சிட்டாங்க.

`இவனுக்கெல்லாம் யார் பொண்ணு கொடுப்பாங்க'ன்னு கேலி பண்ணின சொந்தக்காரங் களுக்காகவே இந்த தேவதையை ஆண்டவன் அனுப்பியிருக்கார்” என்று நெகிழ்கிறார் ராமானுஜம்.

காசு சேர்த்து காது கேக்குற மெஷின் வாங்கிக்கொடுக்கணும்!

“என்னை அவ்வளவு நல்லா பாத்துக்கிறாரு. நான் சமைப்பேன்... அவர் காய்கறி நறுக்கி கொடுப்பாரு. ஒருநாள் ராத்திரி காய்ச்சல் வந்து எழுந்து நடக்கக்கூட முடியலை. உடனே இவர், கறம்பக்குடிக்கு சைக்கிளை எடுத்துக்கிட்டுப்போய் வைத்தியரை எழுப்பி கையோட கூட்டிக்கிட்டு வந்திட்டாரு. என் மேல அவ்வளவு அன்பு காட்டுறாரு. நான் கேட்காமலேயே எனக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்கிறார். நான் ஒரு வேலைக்குப் போகணும். காசு சேர்த்து என் வீட்டுக்காரருக்கு காது கேக்குற மெஷின் வாங்கிக்கொடுக்கணும்” என்று சைகைமொழியில் காதல் செய்கிறார் தேவி!