
கற்க கசடற
எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றால் என்னுடைய 52-வது வயதில் எம்ஃபில் ஆய்வு நிறைவு செய்து பட்டம் வாங்கியதுதான். எனக்குப் படிப்பில் ஈடுபாடு அதிகம். திருமணத்துக்கு முன்னால் குடும்பச் சூழ்நிலை காரணமாக இளங்கலை வரைதான் படிக்க முடிந்தது. திருமணத்துக்குப்பிறகு குழந்தை பிறந்து, அவள் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்து, நான் கொஞ்சம் ஃப்ரீ ஆனவுடன் என்னுடைய 40-வது வயதில் படிக்க ஆரம்பித்தேன். நிறைய சர்டிஃபிகேட் கோர்ஸ் படித்தேன். அதற்கு என் கணவரும் ஒத்துழைத்தார். என் மகளும் உதவியாக இருந்தாள்.

46, 47-ம் வயதில் எம்.ஏ படிக்க ஆரம்பித்து, அதை முடித்தேன். பிறகு தொடர்ந்து, எம்ஃபில் படிக்க ஆரம்பித்து, அதையும் வெற்றிகரமாக முடித்தேன். நான் எடுத்துக்கொண்ட தலைப்பு, `திருவருட்பாவில் பெண் கடவுளர் புனைவு'. கணவருக்கும் எனக்கும் வள்ளலார் மீது ஈடுபாடு உண்டு. அதனால் இதை எடுத்துச்செய்தேன். அடுத்து பிஹெச்.டி செய்து முனைவர் பட்டம் வாங்க ஆசை. ஆனால், என் பெண்ணுக்கு நல்ல வேலை கிடைத்து, அவளுடன் பெங்களூரு வந்து விட்டேன். அதனால் அதை முடிக்க முடியவில்லை. இருந்தாலும் எங்கள் குடும்பத்தில் யாரும் இந்த அளவு படிக்கவில்லை. அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி. படிப்பதற்கு என்றும் வயது ஓரு தடையே இல்லை!
ஆர்.பிருந்தா இரமணி, மதுரை