தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் வாசகி: லாக் டெளன் சொர்க்கம் !

ஸ்வேதா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வேதா

பாசமலர்

இரண்டு அண்ணனுக்குப் பிறகு நான். சிறு வயதில் அண்ணன்கள் எனக்கு டாம்; நான் ஜெர்ரி. அந்தளவுக்கு சதா சண்டைதான்.

எப்போதும் அண்ணன்களுக்கு வெளியே கடைக்குப் போகும் வேலை, எனக்கோ கிச்சன் மற்றும் துவைத்த துணியைக் காயவைக்கும் வேலைகள். லீவ் என்றாலே கடுப்பாக வரும். பிறகு திருமணம் முடிந்து குழந்தைகள், குடும்பம் என்றானது.

சொர்க்கம் என்றால் இந்த லாக் டெளன் காலம்தான். லாக் டெளன் காரணமாகச் சின்ன அண்ணன், பெரிய அண்ணன், நான், அம்மா அப்பா எல்லோரும் ஒரே வீட்டில்தான் இருக்கிறோம். பெரிய அண்ணன் அற்புதமாக ஆய்ந்து தரும் கீரையைச் சின்ன அண்ணன் மையக் கடைந்து தருகிறான். ஒருநாள் ஜாங்கிரி செய்தபோது, `ஸ்வே... அள்ளிட்ட போ’ என்று அண்ணன்தான் முதலில் வந்து கை கொடுத்துப் பாராட்டினான். இனிப்புகளே பிடிக்காத அவன் எனக்காக அதைச் சாப்பிட்டான் என்பதில் எனக்குக் கூடுதல் பெருமை.

அவள் வாசகி: லாக் டெளன் சொர்க்கம் !

மாதவிடாய் நாள்களில் உட்காரவைத்து எனக்குச் சமைத்துப் போடுகிறான் சின்ன அண்ணன். மின்சாரம் இல்லையென்றால் எனக்கும் மகளுக்கும் விசிறிவிட்டு, என் மகளை தன் மார்பில் போட்டு தூங்கவைக்கிறான்.

பள்ளி, கல்லூரி நாள்களைப் பற்றி நாங்கள் பேச ஆரம்பித்தால் தூங்க நள்ளிரவாகிறது. ஒருவர் உப்புமா கிளற, மற்றொருவர் கிரைண்டர் கழுவ, இன்னொருவர் பாத்ரூம் சுத்தம் செய்ய, தண்ணீர்க்குடம் எடுத்துவைக்க, துணி உலர்த்த, தோட்டம் பெருக்க... இப்படி விக்ரமன் படத்தில் வருவதுபோல அப்பாவில் ஆரம்பித்து நான் வரை அனைத்து வேலைகளையும் ஒன்றாகப் பகிர்ந்துசெய்கிறோம். மிக முக்கியமாக, எல்லா வேளையும் ஒன்றாக அமர்ந்து உணவை உண்கிறோம். ஆண்கள் பிரமாதமாகச் சமைப்பார்கள் என்பதை நான் கண்டு உணர்ந்த காலம் இது.

ஸ்வேதா
ஸ்வேதா

அண்ணன்களோடு பிறந்த தங்கைகளாக இருந்தால் அண்ணன் ஊட்டிவிட்டு பழைய சோறும் மோர் மிளகாயும் சாப்பிட்டு இருக்கிறீர்களா... அந்த தேவாமிர்த உணவை என் அண்ணன் ஊட்டிவிட சாப்பிட்டேன். மனதும் வயிறும் குளிர்ந்து போய்விட்டது.

லாக் டெளன் நாள்களில்தான் பாசத்தின் வலிமை, நளபாகத்தின் ருசியை உணர்ந்தேன்.ஒவ்வொரு கஷ்டமும் நமக்கு லாபத்தை தந்து விட்டுச் செல்லும் என்பதைப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்போது அதை அணு அணுவாக உணர்கிறேன்!

ஸ்வேதா, வளவனூர்