
பள்ளிக்கூடம்
நான் 2-ம் வகுப்பு படித்த காலம் அது. புது நோட்டின் வாசம், பென்சிலின் கூர்மை, அழி ரப்பரின் வெண்மை எல்லாம் என்னை எழுதத் தூண்டியது.
இரண்டு வாரங்களுக்குப் பின் முதன்முறையாக கஸ்பார் சார் தமிழ் நோட்டை எடுக்கச் சொன்னார்.
``நான் போர்டில் எழுதிப் போடுவதைத் தப்பில்லாமல், அழகா உங்க நோட்டுல எழுதணும். எழுத்து ஒழுங்கா மணியா இருக்கணும். இல்லைன்னா மொழியைப் (புறங்கையின் எலும்புதான்) பேத்துடுவேன்” என்கிற பயமுறுத்தலுடன் கரும்பலகையில் எழுத ஆரம்பித்தார்.

வகுப்பில் முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்த நான் அழகான கையெழுத்தில் எழுத ஆரம்பித்தேன். முதலில் ஒரு கேள்வி - பதில் எழுதி விட்டு, சார் எங்கள் அத்தனை பேரின் நோட்டையும் பார்வையிட்டார். திருப்தியோடு தொடர்ந்து எழுதிப்போட ஆரம்பித்தார். சின்ன கரும்பலகை... இரண்டு கேள்வி - பதில் எழுதியதுமே நிறைந்துவிட்டது. அடுத்து மெதுவாக முதலில் எழுதியதை ஒவ்வொரு வரியாக அழித்து அழித்து மூன்றாவது கேள்வி - பதிலை எழுத ஆரம்பித்தார்.
மற்ற எல்லாப் பிள்ளைகளும் ஒழுங்காக எழுத, நான் மட்டும் சார் செய்வதுபோலவே எழுதியதை அழித்து விட்டு, மறுபடியும் அதே இடத்தில் எழுத ஆரம்பித்தேன். இரண்டாவது முறை கரும்பலகை எழுத்துகளால் நிறைய... திரும்பவும் மேலிருந்து அழித்து எழுத ஆரம்பித்தார் கஸ்பார் சார். எனக்கோ பயங்கர டென்ஷன். நானும், நோட்டில் திரும்ப முதலில் இருந்து அழிக்க ஆரம்பிக்க நோட்டெல்லாம் கரியாகி, கொஞ்சம் கிழிய ஆரம்பித்து விட்டது.

பயத்துடன் பக்கத்தில் ருவைதாவை எட்டிப் பார்த்தேன்.அவள் நாலாவது பக்கம் எழுதிக்கொண்டிருந்தாள். நானோ முதல் பக்கத்தையே எழுதி, அழித்து, எழுதி அழித்து, அழித்துக்கொண்டிருந்தேன்.
அவ்வளவுதான்... நான் ஓவென அழுது. ஒரே களேபரம் ஆகிவிட்டது. சார், ``என்னடீ செய்துட்டு இருக்கே...” எனக் கேட்க, ‘நீங்கதானே சார் அழிச்சு அழிச்சு எழுதுறீங்க. அதான் நானும் அப்படியே செஞ்சேன்’’ எனக் கையை பின்னால் மறைத்துக்கொண்டே, அழுகை பாதியும் சொற்கள் பாதியுமாக உளறினேன். என்னவென்று தெரியவில்லை.... கஸ்பார் சார் குலுங்கிக் குலுங்கி சிரிக்கத் தொடங்கினார்!
உமா ராஜ், ஏரல்