நான் சின்ன நகரம் ஒண்ணுல வசிக்கிறேன். கணவர் தொழில் பண்றார். கை நிறைய வருமானம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை. எங்க ரெண்டு பேருக்கும் காதல் திருமணம்.
ரெண்டு பேருமே மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்தவங்க. நல்லா படிச்சு, எங்க முயற்சியால நல்ல வேலையில சேர்ந்ததுக்கு அப்புறம், ரெண்டு வீட்டு சம்மதமும் பெற்று கல்யாணம் பண்ணிக்கிட்டோம். திடீர்னு அவருக்கு தொழில் ஆர்வம் வர, `பார்த்துட்டு இருக்குற வேலையை விட்டுட்டு ரிஸ்க் எடுக்கவா..?'னு கேட்டார். `ஒண்ணு தோணுச்சுனா செஞ்சு பார்த்துடுங்க. என் சம்பளம்தான் வருதுல... சமாளிச்சுக்குவோம்'னு சொன்னேன்.

பிசினஸ் ஆரம்பிச்சாலும், பெருசா வருமானம் இல்ல. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம், என் சம்பளம்தான் குடும்பத்தை தாங்குச்சு. ஆனா அதுக்கு அப்புறம் அவர் தொழில்ல வலுவா காலூன்ற ஆரம்பிக்க, வருமானமும் அதிகரிக்க ஆரம்பிச்சது. அடுத்த ரெண்டு வருஷத்துல, நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு தொழில் ஓஹோனு போச்சு. இதுக்கு இடையில எங்களுக்குக் குழந்தை பிறந்திருக்க, `எனக்கும் சேர்த்து நீ ரொம்ப உழைச்சுட்ட. நான்தான் இப்போ நல்லா சம்பாதிக்கிறேன்ல... பாப்பாவையும் வெச்சுக்கிட்டு இனி நீ ஏன் கஷ்டப்படணும்?'னு கேட்டார் என் கணவர். எனக்கும் அது சரியெனப் பட, நான் குழந்தைக்காக என் வேலையை விட்டேன்.
இப்படி, எங்க வீட்ல எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, மாமனார் வீட்லயிருந்து எங்களுக்குக் கொடுக்காத பிரச்னைகள் இல்லை.
அப்பா, அம்மா, ஒரு அண்ணன், ஒரு தங்கச்சினு என் கணவர் தன் வீட்டின் மேல ரொம்ப பாசமா இருப்பார். நானும் அவங்ககூட எல்லாம் ரொம்ப அன்பாதான் இருந்தேன். ஆனா, இப்போ முடியலை. காரணம், அவங்க எல்லாம் என் கணவரை பணம் காய்க்கும் மரமா நடத்தும் விதம்.

என் கணவரின் அண்ணன் வீடும், தங்கை வீடும் மிடில் க்ளாஸ் குடும்பங்கள். மாமனாரும் மாமியாரும் தனியா வசிக்கிறாங்க. அரசு வேலையிலிருந்து ஓய்வுபெற்ற என் மாமனார் பென்ஷன் வாங்குறார். அவங்க தேவைக்கும் அதிகமான ஒரு தொகையை என் கணவர் மாதம் மாதம் அவங்களுக்கு அனுப்பிவெச்சிடுவார். அதேபோல, தன் அண்ணன், தங்கைக்கும் புத்தாண்டு, பண்டிகைகள், அவங்க பிள்ளைங்க பிறந்தநாள்னு பணம் அனுப்பிட்டேதான் இருப்பார்.
ஆனா அவங்க எல்லாருக்குமே, இவர் எவ்வளவு செஞ்சாலும் திருப்தியே இருக்கிறதில்ல. `அவன்தான் நல்லா சம்பாதிக்கிறானே... அவன்கிட்ட இருந்து நாம நல்லா வாங்கிப்போம்'ங்கிற மனநிலையிலேயே என் கணவர்கிட்ட நடந்துக்குறாங்க.

பெத்தவங்களுக்கு, கூடப் பிறந்தவங்களுக்கு கணவர் செய்றதைத் தடுக்க நினைக்கிற மனைவி இல்ல நான். அவங்க எல்லாம் தங்களோட தேவைக்கு என் கணவர்கிட்ட பணம் வாங்கினா, கொடுக்கிறது என் கணவரோட கடமைதான். அவங்களுக்கு ஒரு கஷ்டம்னா நாங்கதான் பார்த்துக்கணும்ங்கிற பொறுப்பு எனக்கும் எனக்கு. ஆனா, அவங்க தேவைகளை எல்லாம் நாங்க ஓரளவுக்கு நிறைவேற்றிக் கொடுத்துட்டோம். அதனால, இப்போ அவங்களோட ஆடம்பரத்துக்கு என் கணவர்கிட்ட பணம் வாங்கிட்டு இருக்காங்க.
உதாரணமா, என் கணவரோட அண்ணன், தங்கை ரெண்டு பேரும் வீடு கட்டினப்போ, எங்களோட பரிசா குறிப்பிட்ட தொகையை நாங்க கொடுத்தோம். அதேபோல, அவங்க ரெண்டு பேரும் கார் வாங்கப் போறோம்னு சொன்னப்போவும், குறிப்பிட்ட தொகையை நாங்க கொடுத்தோம். இதுபோல, `புது டிவி வாங்கணும்', `ஃபிரிட்ஜ் பழசாயிடுச்சு மாத்தணும்'னு அவங்க சொல்லும்போதெல்லாம், உடனடியா என் கணவர் அவங்களுக்கு உதவுற ஒரு தொகையை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுவார்.

ஆனா ஒரு கட்டத்துல அவங்க அண்ணன், `ஃப்ரெண்ட்ஸோட டூர் போறேன்டா'னு சொல்லி 25,000 வாங்குறது, திடீர்னு போன் பண்ணி, எதுக்காக தேவைனுகூட சொல்லாம, `என் அக்கவுன்ட்டுக்கு 50,000 போட்டுவிடு'னு கேக்குறது, ஏற்கெனவே ஒரு பைக் வாங்கி சில வருஷம்தான் ஆகியிருக்குற நிலையில, `இல்ல, புது பைக் வாங்கணும்'னு இவர்கிட்ட கேட்குறதுனு அட்வான்டேஜ் எடுத்துக்க ஆரம்பிச்சுட்டார்.
இன்னொரு பக்கம் இவரோட தங்கை, `அண்ணா, நான் ஒரு புது நகை வாங்க நினைச்சேன், காசு குறையுது, ஒரு லட்சம் போட்டுவிடுறியா?'னு கேட்குறது, `ஒரு இடம் ரெஜிஸ்டர் பண்ண நினைச்சோம், இன்னும் ரெண்டு லட்சம் தேவைப்படுது...'னு கேட்குறதுனு, வருஷத்துக்கு 1 - 2 லட்சம் என் கணவர்கிட்ட வாங்கிடுறாங்க. என் மாமனார், மாமியாரும்கூட, `நீங்கதான் சம்பாதிக்கிறீங்க இல்ல... கூட பிறந்தவங்களுக்குக் கொடுத்தா குறைஞ்சு போயிட மாட்டீங்க'னுதான் சொல்றாங்க. இன்னொரு பக்கம், என் மாமனாரும் எங்ககிட்ட சில லட்சங்கள் வாங்கி வட்டிக்குக் கொடுத்து வாங்கிட்டு இருக்கார்.

என்னதான் என் கணவர் நல்லா சம்பாதிச்சாலும், அதை இப்படி அவர் குடும்பத்துக்குக் கொடுத்துட்டே இருக்குறதும், அவங்களும், `எவ்ளோ முடியுமோ அவ்ளோ இவன்கிட்ட வாங்கிக்குவோம்'ங்கிற மனநிலையில இருக்கிறதும்னு என் பொறுமை குறைஞ்சுட்டே வந்தது. குறிப்பா, இந்த கொரோனா காலத்துல தொழில் முழுக்க முடங்கி, 10 மாசமா சுத்தமா வருமானம் இல்லாம, பேங்க் பேலன்ஸ் எல்லாம் கரைஞ்சு, கிட்டத்தட்ட நாங்க ஸீரோ நிலைமைக்கே வந்து நின்னப்போ, நான் நிறைய யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.
இந்தக் கொரோனா காலத்துல என் கணவர்கிட்ட நிறைய பேசினேன். `நேத்து காசு இருந்துச்சு கொடுத்தீங்க. இப்போ நம்மகிட்ட காசு இல்லாம போச்சு... நமக்குக் கொடுக்க யார் இருக்கா? தொழில்ங்கிறது எப்பவுமே ரிஸ்க்கானது. திடீர்னு ஒரு நாள் ஏறும், எதிர்பாராத ஒருநாள் சரியும். அப்போ, சம்பாதிக்கும்போதே சேர்த்து வெச்சுக்கிட்டாதானே நமக்கு பாதுகாப்பு? நீங்க இப்படி உங்க குடும்பத்துக்கே கொடுத்துட்டு இருந்தா, நாம எப்போ செட்டில் ஆகுறது?'னு கேட்டு சண்டை போட்டேன்.

`இருக்குறதுக்கு வீடு, கார் இருக்கு. ஓரளவுக்கு சொத்து இருக்கு. எனக்கு அது போதும். உறவுகள்தான் எனக்கு வேணும்'னு சொல்றாரு என் கணவர். ஆனா, அந்த உறவுகள் இவர்கிட்ட அதே அன்போட இல்ல, பணத்துக்குத்தான் பழகுறாங்க. நாளைக்கு பணம் கரைஞ்சு போனா கண்டுக்க மாட்டாங்கங்கிறது இவருக்குப் புரியல.
உதாரணமா, இந்தக் கொரோனா காலத்துல நாங்க ரொம்ப முடங்கிப்போயிட்டோம்னு தெரிஞ்சும், `ஏதாச்சும் உதவி தேவையா?'னுகூட யாரும் ஒரு வார்த்தை கேக்கல. அதேபோல, பண்டிகை, விசேஷங்கள்னு அவங்க அண்ணன் வீட்டுக்கும், தங்கை வீட்டுக்கும் நாங்க போகும்போது, அவர்கூட போன ராஜ உபசாரமாதான் இருக்கும். அதுவே நானும் குழந்தையும் மட்டும் போனா, பிள்ளைக்கு ஒரு ஸ்நாக்ஸ்கூட ஆசையா வாங்கிக்கொடுக்க மாட்டாங்க. இவ்ளோதான் அவங்களோட பதில் அன்பு.
என் கணவர் வீட்டின் உறவுகளால, இப்போ எங்களுக்குள்ள நிறைய பிரச்னைகள் வர ஆரம்பிச்சிருக்கு. பணம், நிம்மதி எல்லாம் போகுது. என்னதான் தீர்வு?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.