Published:Updated:

`என் உழைப்பையும் ஓய்வையும் பறிச்சுக்கிற அந்த ஓர் உறவு... என்ன செய்யலாம்?' #PennDiary - 02

#PennDiary
News
#PennDiary

என்னை அடிமைப்படுத்துறது, கொடுமைப்படுத்துறதுனு எல்லாம் இல்ல. ஆனா, ரொம்ப நுட்பமா என் உழைப்பையும், எங்க பொருளாதாரத்தையும் சுரண்டுறாங்க.

Published:Updated:

`என் உழைப்பையும் ஓய்வையும் பறிச்சுக்கிற அந்த ஓர் உறவு... என்ன செய்யலாம்?' #PennDiary - 02

என்னை அடிமைப்படுத்துறது, கொடுமைப்படுத்துறதுனு எல்லாம் இல்ல. ஆனா, ரொம்ப நுட்பமா என் உழைப்பையும், எங்க பொருளாதாரத்தையும் சுரண்டுறாங்க.

#PennDiary
News
#PennDiary

``இன்றைய குடும்பச் சூழல்ல பெண்களுக்கான பல பிரச்னைகள், தடைகள் நீங்கிட்டே வருது. ஆனாலும், சிலருக்கு சில பிரச்னைகள் தொடர்ந்துட்டேதான் இருக்கு. குறிப்பா, வீட்டில் உறவுகளுக்கு இடையேயான பிரச்னைகள். எனக்கு, நாத்தனார் பிரச்னை.

என் வீட்டுக்காரர் தனியார் நிறுவனத்துல வேலை பார்க்குறார். மாமியார், மாமனார்கூட வசிக்கிறோம். எங்க தெருவுக்கு ஒரு தெரு தள்ளி இருக்கு, என் நாத்தனார் குடும்பம்.

Family
Family

நாத்தனார் வீட்டுல வசதிக்குக் குறைவில்ல. கணவன், மனைவி, ஒரு பையன்னு நியூக்ளியர் ஃபேமிலி. தினமும் எங்க வீட்டுக்கு வந்து, தன் அம்மாவைப் பார்த்துட்டு கதைபேசிட்டுப் போவாங்க. அப்படி வரும்போதெல்லாம், அம்மாவும் பெண்ணுமா சேர்ந்துட்டு எனக்குத் தர்ற மென்டல் டார்ச்சரைதான் என்னால தாங்க முடியல. அடிமைப்படுத்துறது, கொடுமைப்படுத்துறதுனு எல்லாம் இல்ல. ஆனா, ரொம்ப நுட்பமா என் உழைப்பையும், எங்க பொருளாதாரத்தையும் சுரண்டுறாங்க.

நான் மாவு அரைச்சு வைப்பேன். அதுல பாதியை என் நாத்தனாருக்குக் கொடுத்து அனுப்பிடுவாங்க என் மாமியார். இதேபோல, அரைக்கிற மசாலா எல்லாம் பாதி அங்க போயிடும். தினமும் சாயங்காலம் குழந்தையைக் கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு வருவாங்க என் நாத்தனார். நைட் அவங்களை அழைச்சுட்டுப்போக அவங்களோட வீட்டுக்காரர் வருவார். உடனே என் மாமியார், `அண்ணனுக்கும் அண்ணிக்கும் தோசை ஊத்தும்மா...’னு அந்தக் குடும்பத்தோட டின்னரை, என்னை வெச்சே முடிச்சிடுவாங்க. வாரத்துல நாலு நாள் இப்படிதான்.

இதுல என்னங்க இருக்குனு கேக்குறீங்களா? வாரத்துல பல நாள், பல வேளை இன்னொரு குடும்பத்துக்கும் சேர்த்து சமைக்கிற சுமை அதை செய்றவங்களுக்குத்தான் தெரியும். `நாத்தனார் வீட்டுக்கு நீங்களும்தானே போவீங்க...'னு தோணுதா? போவோம். ஆனா, ரெண்டு, மூணு மாசத்துக்கு ஒரு தடவை. `இந்த வீக் எண்ட் எங்க வீட்டுக்கு வாங்க...'னு சொல்லிட்டு, `நீ காலைலேயே சீக்கிரம் வந்துடு...'னு ஸ்பெஷலா என்னை அழைப்பாங்க நாத்தனார். அந்த வீக் எண்ட் காலை விடிஞ்சதும், `அண்ணி உன்னை சீக்கிரம் வர சொன்னுச்சே... நீ போ. நான், அவன், புள்ளைங்க எல்லாம் குளிச்சிட்டு அப்புறம் வர்றோம்...'னு... கோலம் போட்டுட்டு வந்ததுலயிருந்தே என்னை விரட்ட ஆரம்பிச்சிடுவாங்க என் மாமியார். ஏன்னா, நாத்தனார் வீட்டுலயும் நான்தான் போயி சமைக்கணும். என் நாத்தனாரும் மாமியாரும் வழக்கம்போல கதை பேசிட்டு இருப்பாங்க. இப்படி இவங்க அம்மாவும் பொண்ணும் மட்டும் சந்தோஷமா இருப்பாங்க. இன்னொரு பக்கம், என் அம்மா வீட்டுக்கு நான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை போகத்தான் அனுமதி உண்டு எங்க வீட்டுல.

woman (Representational Image)
woman (Representational Image)

ஸ்வீட் பாக்ஸ்ல இருந்து புடவை வரை, என்ன வாங்கினாலும் ரெண்டாத்தான் வாங்கணும் என் கணவர். ஒண்ணு எங்களுக்கு, இன்னொண்ணு என் நாத்தனாருக்கு. அதேபோல, கோயிலுக்குப் போறதிலிருந்து டூர் போறதுவரை, என் நாத்தனார் குடும்பத்தையும் கூட்டிட்டுத்தான் போகணும். செலவுகளை எல்லாம் என் வீட்டுக்காரர்தான் செய்வார்.

`ஏங்க இப்படி...?'னு என் வீட்டுக்காரர்கிட்ட சொன்னா, `இதெல்லாம் ஒரு விஷயமா?’ங்கிறார். ஆனா, என்னை இதெல்லாம் ரொம்ப பாதிக்குது. இன்னொரு பக்கம், மாமியாரும் நாத்தனாரும் என்னை மதிக்கிறதேயில்ல. `கதவுக்கு கர்ட்டன் போடணும்னு சொன்னியே, அக்காகிட்ட கேளு என்ன கலர்னு சொல்லும்'ங்கிறதுல ஆரம்பிச்சு, `அக்காவுக்கு தெரிஞ்ச கடை இருக்காம், அங்க மிக்ஸி வாங்கலாம்'ங்கிறதுவரை, வீட்ல எந்த முடிவா இருந்தாலும் என் வீட்டுக்காரரை அவரோட அக்காவை கேட்டே எடுக்க பழக்கிவெச்சிருக்காங்க மாமியார். இன்னொரு பக்கம், `இதுக்கு அதெல்லாம் ஒண்ணும் தெரியாது...'னு நாத்தனார் என்னை மட்டம்தட்டி மட்டம்தட்டியே என் கருத்தையோ, ஆலோசனையையோ வீட்ல எந்த விஷயத்திலும் சொல்லவிடுறதே இல்ல.

நான், என் வீட்டுக்காரர், குழந்தைகள் மட்டும்ங்கிற ஒரு ப்ரைவஸியே இல்ல. நாத்தனாருக்கு சமையல் பொடி அரைச்சுக் கொடுக்கிறதுலயிருந்து, பல நாள்கள் சமையல் செஞ்சு கொடுத்துவிடுறது வரைக்கும் என் உழைப்பையும் ஓய்வையும் பறிச்சுட்டே இருக்காங்க. எல்லாத்துக்கும் மேலா, அம்மாவும் பெண்ணும் என்னை அவங்களுக்குப் பணிவிடை செய்யப் பயன்படுத்திக்கிறதுல, என் சுயமரியாதை கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சுட்டே போகுது. இந்த 34 வயசுல, இதெல்லாம் என்னை மனஅழுத்தத்துல தள்ளிட்டே வருது.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Pixabay

நான் அப்படி என்ன பெருசா எதிர்பார்க்குறேன்? `இன்னொரு வீட்டுலயிருந்து வந்த பொண்ணா இருந்தாலும் இந்த வீட்டை புரிஞ்சுக்கிட்டு உறவுகளை அனுசரிச்சு, அரவணைச்சுப் போறாளே...'னு என் மாமியாரும் நாத்தனாரும் நான் செய்யுற வேலைகளின் சுமையை உணர்ந்து அதுக்கான பதில் அனுசரணையை, அரவணைப்பை எனக்குக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். மாறா, `என் பையன்/தம்பி வீடு இது... என்ன பெருசா பண்றா இவ...'ங்கிற மனநிலையிலேயே அவங்க என்னை நடத்துறதைதான் என்னால தாங்கிக்க முடியல.

அதுக்காக... அம்மாவைப் பார்க்கப் பொண்ணு வரக்கூடாதுனு சொல்ற மருமக இல்ல நான். தாராளமா வரட்டும், சந்தோஷமா பேசி, சிரிச்சுட்டு இருக்கட்டும். ஆனா, அவங்க சுயநலத்துக்கும் சொகுசுக்கும் என்னைப் பயன்படுத்திக்கிற இந்தச் சூழல்ல இருந்து நான் விடுபடணும். அதுக்கு என்ன வழி..?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.