
பிரார்த்தனை

விபத்தில் இறந்துபோன தன் தாயின் இறப்பைத் தாங்க முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளான தன் மகளை ‘இனி அவ உன் பொறுப்பு அக்கா’ என்று என்னிடம் விட்டான் என் தம்பி. கோவையில் என்னுடன் தங்கி, ப்ளஸ் ஒன் சேர்ந்து படிக்கத் தொடங்கினாள் தம்பி மகள். ஒவ்வொரு நாளும் அவளுடன் போராட்டமாகத்தான் கழிந்தது. எதுவுமே பிடிக்கவில்லை என்றவளைத் தேற்றித் தேற்றிப் படிக்க வைத்தேன்.
ப்ளஸ் டூவில் டியூஷன் டீச்சர், அருகிலேயே நான் என ஒவ்வொரு நாளும் கழிந்தது. கடைசி நாள் தேர்வை எழுதப்போகும் முன் ‘எனக்கு எல்லாம் மறந்துவிட்டது’ என மறுபடியும் புலம்ப ஆரம்பித்துவிட்டாள். எனக்கோ பயம் வர ஆரம்பித்துவிட்டது. எதிர்வீட்டிலிருந்த பாபா பக்தர் சொன்னதன் பேரில், மனமுருகி ஷீர்டி பாபாவை வேண்டிக்கொண்டேன்.

பரீட்சை முடிவில் என் தம்பி மகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதைக் கேட்டு நான் மிகவும் நெகிழ்ந்தேன். என் சொந்தங்கள் எல்லோரும் எனக்கு வாழ்த்து சொல்ல, நானே பாஸானது போன்று மகிழ்ந்தேன். உடனடியாக என் கணவருடன் ஷீர்டி சென்று என் நன்றியையும் அவள் வெற்றியையும் பாபாவுக்கு காணிக்கையாக்கிவிட்டு வந்தேன். என் தம்பி மிகவும் சந்தோஷப்பட்டான். இப்போது நினைத்தாலும் எப்படி அவளைத் தேற்றி வெளியே கொண்டு வந்தேன் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.
வெ.ஜெயலட்சுமி ,கோவை 45