
கூட்டுக் குடும்ப குதூகலம்

மதுரை அனுப்பனாடியில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தோம். சென்ற வருடம் ஜூன் மாதம்தான் என் தாத்தாவும் அம்மாச்சியும் இறந்து போனார்கள். அதில் இருந்து மீள்வதற்குள் கணவரின் பதவி உயர்வு காரணமாக மதுரையில் இருந்து தருமபுரிக்குப் பயணப்பட்டோம். புது இடம்... அதை உணர்ந்துகொண்டு வாழ சிரமப்பட்டேன். நின்று நிதானிப்பதற்குள் மகனுக்குச் சென்னையில் வேலை கிடைத்து சென்றுவிட்டான். மகளுக்குத் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள். தனிமை என்னை மிகவும் வாட்டியது. கூட்டுக்குடும்பமாக இருந்தே பழக்கப்பட்ட எனக்கு அந்த தனிமை மிகப் பெரிய விஷயமாக இருந்தது.
கணவருக்குச் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் மறுபடியும் சிவகங்கைக்குப் பணி மாறுதல் கிடைத்தது. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஊரடங்கினால், சென்னையில் வேலை செய்த மகன் வீட்டுக்குத் திரும்பிவிட்டான். என் மகனும் கணவரும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு என்னுடன் இருப்பதால் மிக நிம்மதியாக உணர்கிறேன். இருவரும் எனக்கு வீட்டு வேலைகளில் உதவுகிறார்கள்.

ஓய்வு நேரங்களில் என் குழந்தைகளின் அறையைச் சுத்தம் செய்யும் போது கிடைத்த சுட்டி க்ரியேஷன்களை நானும் ஆர்வத்துடன் செய்து பார்த்தேன். தங்கை மகன் பிரணவ்வுக்கு ஒன்றரை வயதாகிறது. அவனுடன் பொழுதை கழிக்கிறேன். மொத்தத்தில் கொரோனா என் தனிமையை விலக்கி மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
ஜெயந்தி சந்திரன் மதுரை