
தாயில்லாமல் நானில்லை

என் பெற்றோருக்கு ஒன்பதாவது மகள் நான். அசராமல் அத்தனை பேரையும் நன்கு படிக்க வைத்து, நல்ல வேலையில் அமர்த்தியதில், தந்தைக்கு இணையாக என் தாய்க்கும் மிகப்பெரிய பங்குண்டு. சமையலில் ஆரம்பித்து நன்னடத்தை வரை அத்தனையும் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். வீட்டு வேலை, தையல், கோலம் என அவரின் பத்து விரல்களும் பல கலைகளை அறியும். அவற்றையெல்லாம் எங்களுக்கும் கற்றுக்கொடுத்தார்.
நான் இந்திய உணவுக் கழகத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றேன். அந்த உயரம் தொட என் தாயும் ஒரு காரணம். இன்றளவும் மனத்தில் தொய்வு ஏற்படும் நேரங்களில் என் தாயை நினைத்துக்கொண்டால் விருட்டென்று எழுந்துகொள்வேன். என் கடமைகளை நினைப்பதற்கு மேலாகவே திருப்தியுடன் செய்யும் என் வழக்கத்துக்கும் தாயே காரணம்.

கடைசிப் பெண் என்பதால் என் தாய்க்கு நான் மிகவும் செல்லம். 1999-ல் என் மகள் வளைகாப்பு நடைபெற்று அவளைப் பிரசவத்துக்கு வீட்டுக்கு அழைத்துவந்த நிலையில், என் தாயார் உடல்நிலை நலிவுற்று மே மாதம் 14-ம் தேதி இறந்துவிட்டார். கருவுற்ற மகள் முன்னால் என் துக்கத்தை வெளிக்காட்டாமல் வளையவந்தேன். என் மகளுக்கும் பாட்டியிடம் பிரியம் அதிகம். ஜூன் கடைசி வாரத்தில் பிரசவம் என்று மருத்துவர் கணித்திருந்தார். என்ன ஆச்சர்யம்... மே 30 அன்று (தாய் இறந்த 17-ம் நாள்) அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் என் மகள். சுகப்பிரசவம். என் பேத்தியை கையில் ஏந்திய தருணத்தில் என் தாயை மறு உருவில் கண்ட உணர்வில் சிலிர்த்துப்போனேன்.
லக்ஷ்மி வாசன்,சென்னை-33