
மாற்றம்

நான் ஒரு தனியார் மருத்துவமனையில் காப்பீட்டுப் பிரிவில் பணிபுரிகிறேன். படித்தது எம்.பி.ஏ. ஆரம்பத்தில் மருத்துவமனை வேலை எனக்குப் பிடிக்கவே இல்லை. நம்முடைய படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். அதன் பிறகு, பழகிவிட்டது. இப்போது கொரோனா எனக்குள் பெரும் மாற்றத்தை விதைத்திருக்கிறது. ‘ஓ, மருத்துவமனையிலே வேலை பார்க்கிறீர்களா... பார்த்து பத்ரம்’ என்று எல்லோரும் அன்போடும் அக்கறையுடனும் என்னை விசாரிக்கும்போது ஒருவித சந்தோஷம் ஏற்படுகிறது.
எல்லோரும் வீட்டில் இருக்கும் நிலையில் நான் மட்டும் வேலைக்குப் போகிறேனே என்று ஒருநாள்கூட நினைத்ததில்லை. வீட்டுக்கு வரும்போது என் சமையலைக் குறைசொன்னவர்கள், எனக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைத்துப் போடுகிறார்கள். முன்பெல்லாம் விடுமுறை நாள்களில் தூக்கம் என்பது எனக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். இப்போது அதுவும் நன்றாகவே கிடைக்கிறது.

மொத்தத்தில் வீட்டில் உள்ளவர்கள் என் பணிச்சுமையைப் பற்றி உணர்ந்திருக்கிறார்கள். அதனால் வீட்டில் மன அமைதியுடன் இருந்து, மருத்துவமனையில் விருப்பத்துடன் பணியாற்றி வருகிறேன்.
நாகராணி அருண் உடுமலைப்பேட்டை