
ஆண் சமையல் அருமை
லாக் டெளன் வீட்டு வேலைகளில் எனக்கு மூச்சு முட்டிப் போச்சு. இனி வேலைகளை பிரிச்சுப் பண்ணிக்கலாம் என்று நானும் கணவரும் ஒப்பந்தம் போட்டோம்.

பிள்ளையார் சுழியாக டீ போட்டு தருகிறேன் என்று கிச்சனுக்குச் சென்றார். நானும் டி.வி விளம்பரத்தில் வருவதுபோல எடுத்து வந்து நீட்டுவார் என்று கற்பனைக் குஷியில் இருக்க, ‘மா பால் எங்க, மா டிகாக்ஷன் எங்க, மா வடிகட்டி எங்க’னு ஒவ்வொன்றாகக் கேட்டு எனக்கு டீ சாப்பிடுகிற ஆசையே போய்விட்டது. ஒருவழியாக வந்த டீ அதி அற்புதம். அந்தக் குஷியில் நான் கிச்சனுக்குள் போனால், ஹாலிவுட் படத்தில் வரும் சண்டைக்காட்சி போலவே கிச்சன் களேபரமாகக் கிடந்தது!
ஒருவழியாக சமாளித்து நான் வீடுகூட்ட என்னவர் வீடுதுடைக்க ஆரம்பித்தார். டைல்ஸ்ல என்ன கீறல், கறை எனப் புலம்பிக்கொண்டே துடைத்தார். இவ்வளவு நாளா ஏதோ செவ்வாய்க் கிரகத்தில் இருந்துவிட்டு இப்பதான் வீட்டுக்கு வந்தமாதிரி பேசுறாரே என நான் நினைக்கும்போதே வீடு பளிங்கு மாதிரி பளிச். `இதுகூட நல்ல உடற்பயிற்சிதான். தினம் இப்படிச் செய்தால் தொப்பையே வராது' என மகிழ்ந்தார்.
`இரவு டிபன் என்ன செய்ய... பனீர் பரோட்டா, தம் ஆலு, ஆனியன் ஸ்டஃடு பாரத்தா...' என ஹோட்டல் மெனு மாதிரியே கேட்டார். `நீங்க முதலில் செய்யுங்க. நாங்க பிறகு பெயர் வைக்கிறோம்' எனக் கலாய்த்து கிச்சனுக்குத் தள்ளினேன். ஆனா பாருங்க, எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் கீரை ஸ்டஃப்டு பரோட்டாவும், பனீர் பட்டர் மசாலாவும் செய்து எடுத்து வந்தார்.

முக்கியமானதைச் சொல்ல மறந்து விட்டேன் பாருங்க. அவர் சமையலுக்கு நாங்கள் அடிமையாகி ரசிகர் மன்றம் ஆரம்பித்துவிட்டோம்!
சுதா செல்வகுமார், சென்னை-116