தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் வாசகி: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!

வனஜா செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
வனஜா செல்வராஜ்

சுட்டீஸ் உலகம்

கிச்சன் களத்தில் நான் போடும் எல்லா பந்துகளையும் `நோ பால்' ஆக்கும் திறமை பெற்றவர் என்னவர்.

ஒருமுறை எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, என்னுடைய சாம பேத தான தண்டங்களில் ஏதோவொன்று பலிதமாகி என்னவர் காபி போட்ட கதை, எழுத்தாளர் சுஜாதா அவர்கள் காபி போட்ட கதையைவிட பெருஞ்சோகக் கதையாகிவிட்டது.

அவள் வாசகி: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!

அதனால், இந்த ஊரடங்கு காலத்தில் அவர் இருந்த திசை பக்கமே திரும்பாமல் எல்லா பந்துகளையும் சிக்ஸராக மாற்றும் திறமைகள்கொண்ட என் பேரப்பிள்ளைகள் பக்கம் திருப்பிவிட்டேன். எதையாவது எடுத்துவந்து கொடுக்கச் சொன்னாலே பிகு செய்துகொள்ளும் அவர்கள்கூட, இப்போதைய சூழ்நிலையில் மிகவும் ஆர்வமாகவே களம் இறங்கினார்கள்.

ஆரம்பத்தில் நெருப்பில்லாமல் செய்யக்கூடிய மில்க் ஷேக், பழ ஜூஸ் என்று தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக சாண்ட்விச், கேக்குகள், பீட்சா என்று சூப்பரான அயிட்டங்களை சுவையாகச் செய்ய ஆர்வமானார்கள். இவற்றைச் சத்தான பொருள்களைப் பயன்படுத்திச் செய்யக் கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், நம் பாரம்பர்ய உணவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துவிட்டார்கள். நானும் விட்டுப் பிடிப்போம் என்று இருக்கிறேன்.

அடுத்தகட்டமாக GOT IT YEAH என்ற பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்து அவர்களுடைய நளபாகத்தையே காணொலிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வைரஸில் இருந்து நாம் எப்படிப் பாதுகாப்பாக இருப்பது, உலகின் டாப் 10 விமான நிலையங்கள், கதைச் சுருக்கம் என இன்னும் நிறைய காணொலிகளை வெளியிட்டு வருகிறார்கள்.

வனஜா செல்வராஜ்
வனஜா செல்வராஜ்

காணொலி எடுப்பது எப்படி, எடிட் செய்வது என எல்லாவற்றையும் இந்தச் சுட்டிகளே தேடித்தேடி கற்றுக்கொண்டார்கள். மீதி நேரத்தில் டிராயிங், யோகா என எதையும் விட்டு வைக்கவில்லை. ஆமாம்... குழந்தைப் பருவத்தில் விதைத்தால் மிகவும் சுலபமாக அறுவடை செய்யலாம்!

பி.கு: இப்படியெல்லாம் பரபரப்பாகச் செயல்படுவதால் சண்டை போட்டுக்கொள்ளவோ, அடித்துக்கொள்ளவோ மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள். இடையிடையே அவையெல்லாம் தாராளமாகவே நடக்கும்!

வனஜா செல்வராஜ், புதுச்சேரி