Published:Updated:

106 வயதினிலே...

குடும்பத்துடன் கிருஷ்ணம்மாள் பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் கிருஷ்ணம்மாள் பாட்டி

பாட்டியின் பேரன்களில் ஒருவரான ராஜேந்திரன், “பாட்டி பொறந்து வளர்ந்தது சின்னத்தடாகம். தாத்தா ராயப்பன் ஊர் பொம்மனம்பாளையம்.

106 வயதினிலே...

பாட்டியின் பேரன்களில் ஒருவரான ராஜேந்திரன், “பாட்டி பொறந்து வளர்ந்தது சின்னத்தடாகம். தாத்தா ராயப்பன் ஊர் பொம்மனம்பாளையம்.

Published:Updated:
குடும்பத்துடன் கிருஷ்ணம்மாள் பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் கிருஷ்ணம்மாள் பாட்டி

50வயதைத் தாண்டினாலே, அடுத்து வாழும் ஒவ்வொரு நாளும் போனஸ் எனப் பெருமைப்படும் காலகட்டம் இது. அந்த அளவுக்கு மிகக்குறுகிய காலத்தில், நோய்கள் நம் வாழ்வை ஆக்கிரமித்துவிடுகின்றன. கோவை, கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் பாட்டி 106 வயதைக் கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்துவருகிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகத் தொடங்கி பாட்டி, கொள்ளுப்பாட்டி, தற்போது இரண்டு குழந்தைகளுக்கு எள்ளுப் பாட்டியாக என ஐந்து தலைமுறைகளைப் பார்த்துவிட்டார். சமீபத்தில் சுற்றமும் உறவும் அழைத்து கிடா விருந்து படைத்து பாட்டிக்குச் சிறப்புத் திருவிழா நடத்தியுள்ளனர். பாட்டியால் அதை சரியாக உணர முடியாவிடினும் பொன்னாடை போர்த்தி, கிரீடம் வைத்து நெகிழ்ந்திருக்கின்றன உறவுகள்.

106 வயதினிலே...
சகோதரியுடன்
சகோதரியுடன்

பாட்டியின் பேரன்களில் ஒருவரான ராஜேந்திரன், “பாட்டி பொறந்து வளர்ந்தது சின்னத்தடாகம். தாத்தா ராயப்பன் ஊர் பொம்மனம்பாளையம். இவங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். தாத்தாவோட பேரையே எங்க அப்பாவுக்கு வெச்சுட்டாங்க. அப்பாவுக்கு சின்ன வயசா இருக்கறப்ப பொம்மனம்பாளையம் இடத்தை வித்துட்டு, கணுவாய் கிட்ட நிலம் வாங்கிட்டு வந்துட்டாங்க. எனக்கு இப்ப 47 வயசு ஆகுது. பாட்டியோட மகளே கொள்ளுப்பேத்தி எடுத்துட்டாங்க. நாங்க பாரம்பர்ய விவசாயம் குடும்பம். பாட்டிகூட ரெண்டு அக்கா, ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி பொறந்தாங்க. இவங்க கூடப் பொறந்த எல்லாரும் இறந்துட்டாங்க. பாட்டியோட அக்கா, அண்ணன் புள்ளைங்களுக்கு எல்லாம் வயசாகிடுச்சு. பாட்டி காலைல 4 மணிக்கு எந்திருச்சு விவசாயம் பண்றது, வீட்டு வேலைகள் பார்க்கறதுன்னு எல்லாம் அவங்களேதான் செஞ்சுட்டிருந்தாங்க. கொஞ்ச வருஷம் முன்ன வரை காலைல 5.30 மணிக்கு எந்திருச்சு எல்லா வேலையும் பார்த்துட்டுதான் இருந்தாங்க. இந்த ரெண்டு வருஷமாதான் பாட்டினால நடக்க முடியறதில்ல. முன்னாடி இருந்தே பாட்டி மூணு நேரமும் களிதான் சாப்பிடுவாங்க. இட்லி, தோசை, சாப்பாடு எல்லாம் எப்பவாச்சுதான். மாதத்துக்கு 2-3 தடவை அவங்களே வளர்த்த நாட்டுக் கோழியோ ஆடோ அடிச்சு சமைச்சு சாப்பிடுவாங்க. எங்களுக்கும் குடுப்பாங்க. 100 வயது தாண்டினப்பவே, கேக் எல்லாம் வெட்டி உறவுகளைக் கூப்பிட்டுக் கொண்டாட யோசிச்சோம். அதான் இப்ப கொண்டாடினோம்” என்று நெகிழ்ந்தார்.

கிருஷ்ணம்மாளின் 80 வயது மகள் ராயக்காளும், 85 வயதாகும் அவர் கணவர் மயில்சாமியும் இப்போதும் விவசாய வேலைகளைச் செய்கின்றனர். ராயக்காள், “அம்மா 6 அடி உசரம். நல்ல கனமா இருப்பா. சுத்துவட்டாரத்துல அவள மாதிரி தைரியமான ஆள் எங்கயும் இல்ல. எனக்கு 3 வயசா இருக்கறப்ப அப்பா பிளேக் வியாதில இறந்துட்டார். அப்ப தம்பிக்கு 3 வயசு. எங்களை அம்மாதான் வளர்த்துச்சு. சீக்குனு ஒரு நாள் ஆஸ்பத்திரி போனது இல்ல. கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் கண்ல ஆபரேஷன் பண்ணுச்சு. இப்பவும் காது நல்லா கேக்கும். நல்லா சாப்பிடுவா. எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யும். எங்களை வேலை செய்ய விடாது. நானே கல்யாணம் கட்டினப்பறம்தான் சமைச்சுப் பழகினேன். ‘என் அப்பா எனக்கு ஆயுள் கெட்டின்னு அடிக்கடி சொல்லுவார்’னு சந்தோஷமா சொல்லுவா. எந்த வம்புக்கும் போக மாட்டா. ஆனா, ஏதாவது பிரச்னை வந்தா விட மாட்டா. எவ்வளவு பெரிய பிரச்னையா இருந்தாலும் ஒத்தை ஆளா போய் பேசி சரி செஞ்சுடும். முன்னாடிலாம் யார் வீட்டுக்கு வந்தாலும், அவங்களோட எல்லா விவரத்தையும் கேட்பா. இப்ப நெருங்கின உறவுங்ககிட்ட மட்டும் ரெண்டு வார்த்தை பேசறா. அவளோட தைரியம், ஆரோக்கியம் எங்க வம்சத்துலயே யாருக்கும் இல்ல. எங்க குடும்பம் மொத்தத்தையும் கரைசேர்த்தது அவதான். இருக்கற வரை அவளை நல்லாப் பார்த்துக்கணும். அவ்வளவுதான்” என்றார்.

கிருஷ்ணம்மாள் பாட்டி வீடு
கிருஷ்ணம்மாள் பாட்டி வீடு
106 வயதினிலே...

பாட்டியின் மற்றொரு பேரனான கனகராஜ், “காலைல எந்திருச்சோன சூரியனைக் கும்பிடுவாங்க. எங்க வீட்டுக்கும், ராஜேந்திரன் வீட்டுக்கும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும். ரெண்டு வீட்டுக்கும் நடந்துட்டேதான் இருப்பாங்க. சோள முறுக்கு, ராகி முறுக்கு, உக்காரைன்னு ஆரோக்கியமான தின்பண்டங்கள் செஞ்சு குடுப்பாங்க. கடைல வாங்கிச் சாப்பிடற பழக்கத்துக்கு விட மாட்டாங்க. எனக்கு இப்ப 52 வயசு. எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. என் குழந்தைங்க வரை எல்லாரையும் வளர்த்தது பாட்டிதான். நல்லாப் பாடுபட்டாங்க. திருப்தியா சாப்பிடுவாங்க. சர்வ சாதாரணமா மலை ஏறி வெறகு, புல் எடுக்கறதெல்லாம் செய்வாங்க. பால் ஊத்திக்காம, கை நெறய நெய், வெண்ணெய் எடுத்து கொள்ளுப் பருப்புல போட்டுப் பிசைஞ்சு சாப்பிடுவாங்க. ‘இப்படி சாப்பிட்டாதான் ஆரோக்கியமா இருக்க முடியும் சாமி’ன்னு சொல்லுவாங்க. கொஞ்ச வருஷம் முன்னாடி நாங்க எல்லாரும் வெளில போயிருந்தப்ப, பாட்டி காட்டு வேலை செஞ்சுட்டிருந்தாங்க. அப்ப மலைத்தேனீக் கூட்டம் கொட்டீருச்சு. அதுல பாட்டிக்கு ரொம்ப முடியாமப்போயிடுச்சு. பொழைக்கறதே கஷ்டம்னு சொன்னாங்க. ஆனா, மீண்டு வந்தாங்க. அதுக்கப்பறமும் சில நேரம் ரொம்ப முடியாமப்போச்சு. இப்ப ரெண்டு நேரம் சாப்பாடு, காலைல, சாய்ங்காலம் காபி. அவ்ளோதான். அசைவம் சுத்தமா சாப்பிடறது இல்ல. எங்க மாமாவோட ரெண்டாவது மகன் செந்திலுக்கு (ராஜேந்திரனின் சகோதரர்) கல்யாணம் ஆகலைன்னு மட்டும்தான் பாட்டி அப்பப்ப வருத்தப்படும். மத்தபடி அதுக்கு எந்தக் குறையும் இல்ல” என்றார்.

ராயக்காள், ராஜேந்திரன், கனகராஜ்
ராயக்காள், ராஜேந்திரன், கனகராஜ்

பாட்டி பேரன்களின் உதவியோடு சற்று சிரமப்பட்டு சிறிது நேரம் உட்கார்ந்தார். “கிடா வெட்டுக்காக பாட்டிக்கு தலைக்குத் தண்ணி ஊத்தினோம். அன்னிக்கே பாட்டி ரொம்ப சோர்வாதான் இருந்தாங்க. இப்பவும் அந்தச் சோர்வு போகலை” என்றனர். “பாட்டி... கூழ், டீ எதாவது குடிக்கிறியா?” என பேரன்கள் கேட்க, சரியாக அமரக்கூடிய முடியாத நேரத்திலும், “நீங்க குடிங்க கண்ணுகளா” என்று கூறிவிட்டு படுக்கையில் சாய்ந்தார் கிருஷ்ணம்மாள்.

ஐந்து தலைமுறைகளைக் கரைசேர்த்த 106 வயது அனுபவச் சிங்கம் ஓய்வில் இருக்கிறது.