Published:Updated:

`இந்தக் கனவிலிருந்து என்னை எழுப்பி விடுங்கப்பா' - இரான் விமான தாக்குதலில் பலியானவரின் மகன் உருக்கம்

ரியான் பௌர்ஜம்
ரியான் பௌர்ஜம் ( CNN )

`துயரங்களில் துவண்டுபோகாமல் இருப்பது எப்படி எனச் சிறுவனிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'.

கடந்த 8-ம் தேதியன்று, இரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானத்தின்மீது, இரான் அரசு தாக்குதல் நடத்தியது. தாக்குதலின் விளைவாக, விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஈரான் விமானத் தாக்குதல்
ஈரான் விமானத் தாக்குதல்
Ebrahim Noroozi

உயிரிழந்தவர்களுக்கான நினைவு நிகழ்ச்சி, கடந்த வார இறுதியில் கனடாவின் கார்லிடான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் குறித்த தங்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகள் யாவும் கனவாக இருக்கணும்!
- ரியான் பௌர்ஜம்

அப்படிப் பகிர்ந்துகொண்டவர்களில், 13 வயது ரியான் பௌர்ஜமும் ஒருவன். விபத்தில் இறந்த தன் 53 வயது தந்தை மன்சூர் பௌர்ஜம் குறித்துப் பேசியிருந்தான் ரியான். ``கொஞ்சம் கூட எதிர்மறை எண்ணங்கள் இல்லாத நபர் என் அப்பா'' எனக்கூறி உரையைத் தொடங்கிய ரியான், ``வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை அனுபவித்த பின்னரும், பல துயரச் சம்பவங்களுக்குப் பின்னரும், கொஞ்சம்கூட துவண்டுபோகாமல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துகொண்டே இருந்தார் என் அப்பா.

சிறுவயதில், தந்தையுடன் ரியான் பௌர்ஜம்
சிறுவயதில், தந்தையுடன் ரியான் பௌர்ஜம்
Facebook

அந்த வகையில், `வலிமையானவர்' என்ற ஒற்றை வார்த்தையில் அவரை அடக்கிவிடலாம். நானும் இப்போது அவரைப்போலவே அடுத்தகட்டத்துக்கு நகரவேண்டுமென நினைக்கிறேன்" என்று கூறியுள்ளான். ரியானின் இந்தப் பேச்சுக்கு, மொத்த கூட்டமும் கைதட்டிப் பாராட்டு தெரிவித்துள்ளது.

நான் எதிர்மறையாக எதுவும் பேசப்போவதில்லை.
ரியான் பௌர்ஜம்

``விபத்து நடந்து ஒரு வாரம் ஆனபிறகும், இப்போதும் என்னால் எதையுமே நம்ப முடியவில்லை. என்னைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்வுகள் யாவும் கனவாக இருக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன். ஒருவேளை கனவாக இருந்தால், அப்பாவே வந்து என்னை எழுப்பட்டும்.

கார்லிடான் பல்கலைக்கழக நிகழ்ச்சி
கார்லிடான் பல்கலைக்கழக நிகழ்ச்சி
Carleton Newsroom

அப்படி அவர் என்னை உலுக்கி எழுப்பினால், என்னைச் சுற்றி நிகழும் அனைத்தும் எப்போது சரியாகும் என அவரே கூறுவார். அவர் கூறப்போகும் அந்த ஆறுதலான தருணத்துக்காக நான் காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளான் சிறுவன் ரியான்.

`ஒரு மணிநேரத் தாமதம்; ஒருவர்கூட பிழைக்கவில்லை!' - இரானில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம்

தாக்குதல் குறித்தும், விபத்தில் இறந்தவர்கள் குறித்தும் பேசும்போது, ``ஒருவேளை என் அப்பா இன்றைக்கு இங்கு இருந்திருந்தால், எதிர்மறையாக எதுவுமே பேசியிருக்க மாட்டார். ஆகவே, நானும் அப்படி எதுவும் பேசப்போவதில்லை" என்று கூறிய ரியானின் முதிர்ச்சியான பேச்சைக் கேட்டு, பார்வையாளர்கள் அனைவரும் சில நிமிடங்கள் மவுனத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சிறுவனின் மழலை மாறாத குரலில் வந்த இந்த முதிர்ந்த பேச்சு பலரையும் உலுக்கியுள்ளது. துயரங்களில் துவண்டுபோகாமல் இருப்பது எப்படி என சிறுவனிடமிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென பலரும் கூறிவருகின்றனர்.

பின் செல்ல