
கலைஞரின் முதல் காதல் அனுபவத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது.
இது கருணாநிதியின் காதல் அத்தியாயம். ஜூனியர் விகடனில் வெளியான ‘‘காதல் படிக்கட்டுகள்’’ தொடரில் அவர் பகிர்ந்துகொண்ட தன் முதல் காதல் அனுபவத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது.

கொடி ஊர்வலங்கள் - கூட்டங்களில் முழக்கங்கள் - கொள்கை பரப்பிட நாடகங்கள் என்று கோடை வெப்பத்தில் தகித்துக்கொண்டிருந்த நான், இடையிடையே திருவாரூர் உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைக்கும் சென்று திரும்பிக்கொண்டிருந்த பள்ளிப் பருவ காலமது. அப்போதுதான் அவளிடம் நானும், என்னிடம் அவளும் மனத்தைப் பறிகொடுத்த நிகழ்ச்சி நடந்தது. அவள் பெயர்... அவள் பெயர்... உண்மைப் பெயரைச் சொல்லவேண்டாம்... ஏனென்றால், அவள் இன்னும் உயிரோடு இருக்கிறாள். குறிப்பாக, ‘சாந்தா’ என்று ஓர் அடையாளப் பெயர் வைத்துக் கொள்வோமே! அந்த சாந்தா என்னுடன் அதே பள்ளியில்தான் படித்துக்கொண்டிருந்தாள். ஒருவகையில் தூரத்து உறவும்கூட!
மாலையில் பள்ளி முடிந்ததும் அவள் தட்டச்சு கற்றுக்கொள்ள கமலாலயக் குளக்கரையில் இருந்த ஒரு ‘டைப்ரைட்டிங்’ நிலையத்துக்குச் செல்வாள். நானும் தட்டச்சு கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாக என் வீட்டில் பொய்யுரைத்து மாதம் இரண்டு ரூபாய் சம்பளத்தை அந்த நிலையத்தில் வீணாக்கிக்கொண்டிருந்தேன். அவள் தட்டச்சுப் பயிற்சி முடித்துப் புறப்பட்டவுடன் நானும் புறப்பட்டுவிடுவேன். என் தட்டச்சுப் பயிற்சியில் ஆங்கில எழுத்துக்களான ‘எல் - ஓ - வி- இ’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் கற்றுக்கொள்ளவில்லை. அந்த எழுத்துக்களை மட்டுமே தட்டச்சுப் பொறிக்குப் பதிலாக என் இதயத்தில் அடித்துப் பழகி, பதியவைத்துக்கொண்டு சில நாட்கள் பைத்தியமாகத் திரிந்தேன்.
‘கண்ணோடு கண் நோக்கும் காதல்’ பிறகு கடிதக் காதலாக மாறியது. ஒருநாள் சந்தித்தே தீருவது என்று எங்கள் கடிதங்கள் உறுதி முழக்கமிட்டன. அதன்படி அந்தி மாலை நேரத்தில் அவள் அம்மன் கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்துவிட்டுத் தட்டுடன் திரும்பும்போது, அந்தக் குறுகலான சந்தில் உள்ள ‘வீரனார் கோயில்’ முன்பு, அரைகுறை இருட்டில் அருகருகே சந்தித்துவிட்டோம். ‘இந்த வீரனார் அறிய, மறக்க மாட்டேன்’ என்று கையடித்துச் சத்தியம் செய்தாள். ‘மனச்சாட்சி அறியக் கைவிட மாட்டேன்’ என்று நானும் உறுதி அளித்தேன். உடனே பிரிந்துவிட்டோம்; அச்சம் எங்களை ஓங்கி ஓங்கி உதைத்ததால்!

‘காதலுக்குக் கண்ணில்லை’ என்பது காதல் மொழி. காதலிப்பவர்கள்தான் கண்ணை மூடிக்கொண்டு காதலிப்பார்கள். ஆனால், ஊரார் கண்கள் எல்லாம் அவர்கள் மீதே இருக்கும். அப்படிச் சில கண்கள் எங்கள்மீது பட்டுவிட்டன. அதனால் அவளின் அம்மன் கோயில் அர்ச்சனை தடுக்கப்பட்டுவிட்டது. எனவே, வீரனார் கோயில் சந்திப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.
சாந்தாவுக்கு மாப்பிள்ளை தேட அவசரத் திட்டம் வகுக்கப் பெற்றது. அவளோ கடைசிவரை போராடி இருக்கிறாள் எனக்காக. அதற்குள் அந்த வீட்டில் நடக்கும் அமளி என் வீட்டுக் கதவுகளைத் தட்டிவிட்டது. என்னிடம் கேட்டார்கள். ‘ஆமாம்’ என்றேன். பகையை மறந்து சாந்தாவையே எனக்குப் பெண் கேட்க என் தந்தையும் தாயும் முதற்கட்டமாக என் உறவினர்களை அனுப்பினார்கள். அதற்குக் கிடைத்த பதில் என்ன?

“அவன் கட்சி கட்சி என்று உருப்படாமல் அலைந்துகொண்டிருக்கிறான். அவனுக்கா பெண் கொடுக்க முடியும்? அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், அவன் சுயமரியாதைக் கல்யாணமல்லவா செய்துகொள்ள வேண்டுமென்பான். சரி, பெண் கொடுக்கிறோம். புரோகிதத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிப்பானா?”
பதில், பயங்கரமான கேள்விகளாக வெடித்தெழுந்தது. அந்தக் கேள்விகள் வடிவத்து நிபந்தனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எத்தனை எத்தனை சுயமரியாதைத் திருமணங்களை நான் முன்னின்றும், நானே சென்று வாழ்த்தியும் நடத்தி வைத்திருக்கிறேன். புரோகிதத் திருமணமென்றால் முடியாது என்று மறுத்தேன். அதற்கிடையே அவள் கடிதம் வந்தது கண்ணீரால் எழுதப்பட்டு! “காதலா? கொள்கையா?” இதுதான் அந்தக் கடிதத்தின் பொருள்.
“ஊருக்குத்தான் உபதேசம்...
உனக்கும் எனக்கும்
இல்லையடியென்று கூறுவது
எத்தனின் செயல் அல்லவா?”
என்ற கருத்தமைந்த பதிலை - கண்டிப்பான பதிலை அவளுக்கு எழுதினேன். அவள் தனது பிடிவாதத்தினால் பெற்றோரை இணங்க வைப்பாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவளே இணங்கிவிட்டாள் - அவர்கள் பார்த்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட!
ஏன்; அவள்தான் அந்தக் கொள்கையை விட்டுக்கொடுத்தி ருக்கக் கூடாதா? இல்லை, நான்தான் என் கொள்கையை விட்டுக்கொடுத் திருக்கக் கூடாதா? அவளுக்குத்தான் ‘வீரனார் கோயில்’ சத்தியம் என்ன ஆயிற்று? எனக்குத்தான் நான் மனச்சாட்சிப்படி வழங்கிய உறுதி எங்கே போயிற்று? எப்படியோ இங்கே காதல் ஒரு பின்னடைவை எதிர்கொள்ள நேரிட்டுவிட்டது.
என் கோணத்தில் பார்க்கும்போது, அவள் காதல் தெய்வீகம் என்பது புளித்துப் போய்விட்டது. அவள் கோணத்தில் என்னைப் பார்த்தபோது, ‘ஈருடல் ஓர் உயிர்’ என்ற காதல் தத்துவம் பொய்த்துப் போய்விட்டது. இப்படி உலக நடைமுறையை நோக்கினால் நூற்றுக்குப் பத்து சதவிகிதம்தான் அம்பிகாபதி அமராவதிகளையும், அனார்கலி சலீம்களையும், லைலா கயஸ்களையும், ஆட்டனத்தி ஆதிமந்திகளையும் காண முடிகிறது; அதுவும் கதைகளில், காவியங்களில், இலக்கியங்களில்!
என்னுடையவளுக்காக அவள் பெற்றோர் தேடிய மணமகன், அவளைத் தன்னுடையவளாக்கிக் கொண்டான். நான் ‘தேவதாஸ்’ ஆகிவிடுவேனோ என்ற தேவை யில்லாத பயத்தில் என் வீட்டார் எனக்கும் சிதம்பரம் ஜெயராமன் தங்கையைப் பெண் பார்த்து, நானும் பெண்ணைப் பார்க்க வேண்டுமென்று அழைத்துச் சென்றார்கள். “பெண்ணைப் பார்ப்பது இருக்கட்டும். சீர்திருத்தத் திருமணத்துக்கு ஒப்புக் கொள்வார்களா? ஒப்புக்கொள்ளா விடில் பெண்ணைப் பார்த்து என்ன பயன்? முதலில் நான் காதலித்த பெண்போல ஆகிவிடப் போகிறது” என்றேன் வெறுப்புடன். பெண் வீட்டார் பழுத்த வைதீகர்கள் என்றாலும், என்னிடம் சுயமரியாதைத் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டார்கள். மணவிழாவும் நடைபெற்றது.
அதன் பின்னர் சில நாள்களில் ஒரு திகில் செய்தி. என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. எனை விடுத்து வேறொருவனை மணந்த சாந்தா விதவையாகி விட்டாள். அந்தக் கொடுமையான சம்பவத்தைக் கேள்விப்பட்டு சாந்தா எனும் கதாபாத்திரத்தை வைத்து ‘நச்சுக்கோப்பை’ நாடகம் எழுதி நடித்தேன். சாந்தா என்னைப் பிரிந்துவிடத் துணிந்ததை எண்ணியதால் ஏற்பட்ட கோபத்தையெல்லாம் உரையாடலாகத் தீட்டினேன். அவளையும் என்னையும் வெட்டிவிட்ட சமுதாயத்தையும் அந்த நாடக உரையாடல் வாயிலாகச் சாடினேன்.
“எந்தச் சமுதாயம் அவளை மூடநம்பிக்கைக்காகப் பலியிட்டதோ, அதே சமுதாயம் அவளுடைய வாழ்வைத் துண்டித்துவிட்டது! எந்தச் சமுதாயம் அவளுடைய வாழ்வைப் பிணைத்ததோ, அதே சமுதாயம் அவளுடைய வாழ்வை முறித்தது. எந்த சாஸ்திரம் அவளுக்குத் திருமணம் நடத்திவைத்ததோ, அதே சாஸ்திரம் அவளை விதவையாக்கிற்று. எந்த வைதீகம் அவள் காதலை ஏற்க மறுத்ததோ, அதே வைதீகம் அவள் தாலியை அறுத்தது.”
இப்படித் தீப்பொறி கிளம்பிற்று ‘நச்சுக்கோப்பை’ நாடகத்தில் நான் தீட்டிய வசனத்தில்.
அவள் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தொடர்ந்து இருந்துவந்த பகை, அவளுக்கு ஏற்பட்ட அந்தச் சோகத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல அகன்று- இருவீட்டார் உறவிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. அதே நேரத்தில் என் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, சாந்தாவின் மறுமணத்துக்கு அவளது வீட்டார் சம்மதம் தெரிவித்தார்கள். அவளுக்கு மறுவாழ்வு அளிக்க வந்தவனுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவளையும் வாழ்த்தினேன். அன்று என் விருப்பப்படி சீர்திருத்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாமல் எங்களைப் பிரித்த அவளின் பெற்றோர், சீர்திருத்தத்திலும் தீவிர சீர்திருத்தமான விதவைத் திருமணத்துக்கே ஒப்புதல் அளித்தார்கள் என்பது ஒரு விந்தைதானே!
அவள் இப்போது எங்கேயோ இருக்கிறாள் - எப்போதோ பார்த்த ஞாபகம் - எழுபதை நெருங்கிக்கொண்டிருக்கும் வயதுடையாள் - ஆனாலும், இளமையில் நான் ரசித்த அந்த குண்டு குண்டான கெண்டை விழிகள் இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை. அந்தக் கண்கள்மீது நான் கொண்ட காதல் அப்படியே மாறாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, இப்போது நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை.
சந்திப்பு: ரா.கண்ணன் - படங்கள்: சு.குமரேசன்
(15.01.1997 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)