ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!

தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
தம்பதி

திருமணத்துக்கு முன்னால் ‘டென்ஷன் இல்லாத கூலான நபராக’க் கொண்டாடப்படுபவர், திருமணத்துக்குப் பிறகு சலிப்பூட்டும் நபராகத் தெரியலாம்.

காமராஜ், ஷாலினி, சித்ரா அரவிந்த்
காமராஜ், ஷாலினி, சித்ரா அரவிந்த்

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதே உயிரினங்களின் இயல்பு. அந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ விழைவது மனிதர்களின் இயல்பு. மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கான கட்டளைகளை வழங்குகிறார்கள் சென்னையைச் சேர்ந்த மேரிட்டல் தெரபிஸ்ட்டும் பாலியல் மருத்துவருமான காமராஜ், மனநல மருத்துவர் ஷாலினி மற்றும் உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த் ஆகியோர்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!

1. எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!

திருமணத்துக்கு முன்பு வரை, ‘திருமணமான புதிதில் இருப்பது போல எப்போதும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்காது. சின்னச் சின்ன பிரச்னைகள் வந்து போகும்’ என்கிற உண்மை எல்லோருக்குமே புரியும். இது பொதுவான ஒரு விஷயம் என்பதை மற்றவர் களுடைய திருமண வாழ்க்கையின் மூலம் அறிந்து கொள்ளலாம். என்றாலும் தனக்கென்று வரும்போது ‘நாம் எத்தனை வயசானாலும் லவ் பண்ணிக்கிட்டே தான் இருப்போம்’ என்றுதான் நம்புவோம். ஆனால், திருமண வாழ்க்கையில் இணைந்த பிறகுதான், `எல்லோருக்கும் எதுவோ அதுவேதான் எனக்கும்’ என்கிற தாம்பத்தியத்தின் மிகப்பெரிய உண்மை புரியும். திருமணத்துக்கு முன்னால் திருமண வாழ்க்கை குறித்து நிறைய கனவுகள் காணுங்கள்.

வாழ்க்கையின் மிக அற்புதமான காலகட்டம் அல்லவா அது... அதேசமயம், `திருமணமான புதிதில் இருப்பதுபோலவே எப்போதும் நம்முடைய பார்ட்னர் கொஞ்சிக்கொண்டு இருக்க மாட்டார்; நம்மாலும் அப்படி இருக்க முடியாது' என்கிற எதார்த்தத்தையும் நினைவில் வையுங்கள். தாம்பத்திய வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறையும்போதெல்லாம், மனதின் ஓரத்தில் இருக்கிற இந்த எண்ணம் ‘இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும். இதையெல்லாம் கண்டுக்காம எப்பவும் மகிழ்ச்சியா இருக்கணும்’ என்ற தெளிவை உங்களுக்குள் ஏற்படுத்தும்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!

2. பிடித்ததெல்லாம் பிடிக்காமல் போகலாம்!

திருமணத்துக்கு முன் ‘எவ்ளோ வேடிக்கையா பேசுறார்’ என்று மகிழ்ந்தவர்கள், திருமணத்திற்குப் பின் ‘என்ன இவரு(இவ) இவ்ளோ பொறுப்பில்லாம இருக்காரே(ளே)’ என்று தோன்றலாம். திருமணத்துக்கு முன் துறுதுறுப்பாக தெரிந்த குணம், திருமணத்துக்குப் பின் ‘நிலையில்லாத புத்தியோட இருப்பதாக’த் தோன்றலாம். ‘ஸ்ட்ராங்கான மனநிலை கொண்டவர்’ என்று திருமணத்துக்கு முன்னால் பாராட்டப்பட்டவர், பிறகு ‘எதுக்கும் விட்டே கொடுக்க மாட் டேங்குறார்’ என்று கெட்ட பெயர் வாங்கலாம்.

திருமணத்துக்கு முன்னால் ‘டென்ஷன் இல்லாத கூலான நபராக’க் கொண்டாடப்படுபவர், திருமணத்துக்குப் பிறகு சலிப்பூட்டும் நபராகத் தெரியலாம். திருமணத்துக்கு முன்னால் நிறைய `ஏ' ஜோக் அடிக்கிற கிளுகிளுப்பான நபராகப் பார்க்கப்பட்டவர், திருமணத்துக்குப்பின் ‘இந்த ஆளுக்கு எப்போ பார்த்தாலும் இதே நினைப்பு’ என்று கெட்ட பெயர் வாங்கலாம். வெற்றியாளராக, பணம் பண்ணத் தெரிந்தவராகக் கொண்டாடப்படுகிற ஒரு நபர், திருமணத்துக்குப் பிறகு ‘பணம் பணம்னு ஓடுறார்; குடும்பத்துக்கு நேரம் செலவழிக்க மாட்டேங்கிறார்’ என்ற விமர்சனத்துக்கு உள்ளாகலாம். திருமணத்துக்கு முன்னால் நம்மிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்பவராகத் தெரிந்த நபர், திருமணத்துக்குப் பிறகு ‘எல்லாத்துக்கும் நம்மளையே சார்ந்து இருக்காங்க’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடலாம். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அதனால், திருமணத்துக்கு முன்னரே, இப்போது பிடிக்கிற விஷயங்கள் பின்னாளில் பிடிக்காமலும் போகலாம் என்கிற தெளிவை ஏற்படுத்திக் கொண்டால், இது போன்ற குழப்பங் களில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள். மணவாழ்க்கை எப்போதும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!

3. நோ இருட்டு ஏரியா!

திருமணத்துக்குப் பிறகு, தம்பதியரில் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் ஓர் இருட்டு ஏரியாவை தன்னுடைய வாழ்க்கையில் வைத்திருக் காமல் இருப்பது நல்லது. இது அவர்களுடைய வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அதனால், காதலிக்கும்போதோ அல்லது திருமணமான புதிதிலோ, ‘ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் வாழ்க்கை யில் எதையும் மறைக்கக்கூடாது’ என்பதை ஓர் உறுதிமொழியாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உறுதிமொழி உங்கள் மணவாழ்க்கையின் மகிழ்ச்சியை நிச்சயம் காப்பாற்றும்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!
Ridofranz

4. உங்கள் கட்டிலுக்கு ஏற்றபடி மாற்ற முயலாதீர்கள்!

புகழ்பெற்ற கதையொன்று இருக்கிறது. அதாவது, ஒரு பூதம், தன் குகை வழியாகச் செல்லும் மனிதர்களை அழைத்து விருந்து வைக்குமாம். அதன் பிறகு அவர்களை தன்னிடமிருக்கும் கட்டிலில் படுக்கச் சொல்லு மாம். கட்டிலைவிட சின்னதாக இருக்கும் மனிதர்களின் தலையையும் கால்களையும் இழுத்து கட்டிலின் நீளத்துக்குத் தகுந்தபடி மாற்றி விடுமாம்; கட்டிலைவிடப் பெரிதாக இருப்பவர்களின் கால்களை வெட்டி விடுமாம். இதுபோலதான் நம்மில் பலரும், நம்முடைய வாழ்க்கைத்துணையை நமக்கேற்றபடி இழுத்தோ, வெட்டியோ முடமாக்கி விடுகிறோம். சிறு சிறு குற்றம் குறைகளுடன் துணையை அப்படியே ஏற்றுக்கொண்டால், மகிழ்ச்சி நிச்சயம்.

5. விருந்தாளியைப் போல நடத்துங்கள்!

நம் வீட்டுக்கு வருகிற விருந்தாளி தவறுதலாக காபி கப்பை கீழே போட்டுவிட்டால், ‘பரவாயில்லை விடுங்க’ என்று சொல்வோம். இதுவே காபி கப்பை போட்டது கணவர்/மனைவி என்றால், ‘இதைக்கூட பார்த்து எடுத்துட்டு வரத் தெரியாதா’ என்று பல்லைக் கடிப்போம். இதேபோல, இன்னொருவர் வீட்டில் சாப்பிடும்போது உப்பு, காரம் சரியாக இல்லை யென்றாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்வோம். இதுவே நம் வீட்டில் என்றால், ‘ஒரு கல்லு உப்பு கூடிடுச்சு’ என்று துல்லியமாகக் குற்றம் கண்டுபிடிப்போம். வாழ்க்கைத்துணையிடம் கடுமையாக நடந்துகொள்ள நமக்கு உரிமை யிருப்பதாக நாம் அனைவரும் நினைக்கிறோம். என்றைக்கோ ஒருநாள் சந்திக்கிற விருந்தாளிகளை முகம் வாடாமல் நடத்த வேண்டுமென்று யோசிக்கிற நாம், நம் வாழ்க்கைத்துணையையும் விருந்தாளிபோலவே நடத்தலாமே... இப்படிப்பட்ட குடும்பங்களில் எப்போதும் மகிழ்ச்சி தங்கும்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!
fizkes

6. சண்டையிலும் சுவாரஸ்யம் பழகுங்கள்!

சண்டையில்லாத குடும்பம் பூமியிலேயே கிடையாது. பிரிக்க முடியாதது குடும்பமும் சண்டையும். ஆனால், அந்தச் சண்டைகளே குடும்பங்களைப் பிரிக்கவும் காரணமாகிறது. அதனால், சண்டைகளை விவாதங்களாக மாற்றிக்கொள்ளுங்கள். ‘ஒரு விஷயம், அதில் உனக்கொரு கருத்து இருக்கிறது; எனக்கொரு கருத்து இருக்கிறது’ என்பதுபோல ஆரோக்கியமாக, முடிந்தால் சுவாரஸ்யமாக சண்டை போடுங்கள். வார்த்தைகளால்கூட துணையைக் காயப்படுத்தாதீர்கள்.

7. இணைந்திருந்தாலும் இடைவெளி வேண்டும்!

உறவுகளுக்கு இடைவெளி மிக மிக அவசியம். குறிப்பாக, தம்பதி களிடையே... நீங்கள் இணைந்திருங்கள். ஆனால், இருவருக்குமிடையில் கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும். சொர்க்கத்தின் தென்றல் அதன் வழியே செல்லட்டும். ‘ஒருவர் கோப்பையை ஒருவர் இட்டு நிரப்புங்கள்; ஆனால், மற்றவர் கோப்பையிலிருந்து எடுத்துப் பருகாதீர்கள்’ என்கிற கலீல் ஜிப்ரான் கவிதை வரிகள் போல, இடைவெளியுடன் இருங்கள். தேவையான இடைவெளி இல்லாத உறவுகளிடையே வருகிற கசகசப்பு, மனக்கசப்பாகவும் மாறலாம்... கவனம்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!
kieferpix

8. பலவீனங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்!

சிலருக்கு தானொரு பர்ஃபெக்ட்டான நபர் என்கிற எண்ணம் இருக்கும். துணையின் சின்னச் சின்ன பலவீனங்களையும் சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். ‘துணையை என்னைப்போலவே பர்ஃபெக்ட்டான நபராக்குவதே என் லட்சியம். அப்படிச் செய்தால் மட்டுமே துணையின் வாழ்க்கை உருப்படும்’ என்கிற அளவுக்குப் பிடிவாதமாக இருப்பார்கள். இப்படி நினைப்பதெல்லாம் அறிவின்மை யின் உச்சம். பரஸ்பரம் சிறு சிறு பலவீனங்களை ஏற்றுக்கொண்டுதான் வாழ வேண்டுமென்கிற வாழ்க்கையின் எதார்த்தம் புரிந்துவிட்டால் என்றும் மகிழ்ச்சிதான்.

9. தடித்த வார்த்தைகள் வேண்டாம்!

சிலர், எந்த விஷயம் பேசினாலும் அதை விவாதப்பொருளாக்கி விடுவார்கள். அதையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாமல் அவர்களால் பேசவே முடியாது. அந்தக் கொந்தளிப்பில் அசிங்கமான மற்றும் ஆபாசமான வார்த்தைகளும் வந்து விழும். இது மிகவும் ஆபத்தானது. உங்கள் இயல்பு இதுதான் என்றால், எந்தவொரு விஷயத்தையும் முடிந்தவரை விவாதப்பொருளாக்காதீர்கள். விவாதமாக்கினாலும், அதைச் சண்டைவரை நகர்த்திச் செல்லாதீர்கள். சண்டை ஒரு மோசமான கோணத்தை நோக்கிப் போகப் போகிறது என்பது புரிந்துவிட்டால் கணவன்/மனைவி உடனே ‘இதைப்பத்தி நாளைக்குப் பேசிக்கலாம்’ என்று தள்ளி வைக்கலாம். விவாகரத்து கேட்டு வரும் தம்பதியரை ஓர் அறையில் தனியாக உட்காரவைத்து சோதிக்கும் உளவியல் முறையொன்று இருக்கிறது. அப்படி உட்கார்ந்திருக்கும்போது, சம்பந்தப்பட்ட தம்பதியர் பேசிக்கொள்ளும் முறையை வைத்தே, அவர்கள் விவாகரத்து செய்வார் களா, மாட்டார்களா என்பதைக் கண்டறிந்து விடலாம். அதிக சத்தமில்லாமல், சண்டையில்லாமல் பேசிக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் விவாகரத்து முடிவைக் கைவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!
shylendrahoode

10. உனது விழியில் எனது பார்வை...

ஆங்கிலத்தில் ‘எம்பதி’ என்பார்கள். அதாவது, ஒருவருடைய பிரச்னையை அவருடைய கோணத்திலிருந்து அணுகுவது. அடுத்த வர்களையே எம்பதியுடன் அணுகுவதுதான் சரியாக இருக்கும் எனும்போது, உங்கள் வாழ்க்கைத்துணையை அப்படி அணுகுவதுதானே சரியாக இருக்கும். அப்போதுதான், துணையின் கோணமும் புரியும். கவித்துவமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘உனது விழியில் எனது பார்வை’ என்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

11. முடிந்துபோனதை தோண்டி எடுக்காதீர்கள்!

காலை நேர பரபரப்பில் வந்து விழும் சிடுசிடுப்பான சில வார்த்தைகள் ஏற்படுத்தும் கோபம் அந்நேரத்துப் பரபரப்புக்கே உரியது மட்டுமே. அதை ஒன்றிரண்டு வார்த்தை மோதல்களுடன் அப்படியே விட்டுவிட வேண்டும். ‘ஆங், நீ/நீங்க அன்னிக்கு அப்படித்தான் நடந்துக்கிட்டே/நடந்துக்கிட்டீங்க... உன்/உங்க குடும்பத்துக்கே இதுதான் பொழப்பு... கல்யாணத்தன்னிக்குக்கூட இப்படித்தானே உன்/உங்க குடும்பம் நடந்துக்கிச்சு’ என்று பல வருடங் களுக்கு முன்னால் நடந்த பிரச்னைகளையெல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டு வந்து சண்டை போடாதீர்கள். இந்த வகை சண்டைகள் ஆபத் தானவை. அற்ப காரணங்களுக்காக தம்பதியர் பிரிந்து போகவும், உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் தவறான முடிவு எடுப்பதற்கும் இந்த வகை சண்டைகள்தான் பெரும்பாலும் காரணமாக இருக்கும். அன்றைய பிரச்னைக்கான சண்டையை மட்டும் போடுங்கள். முடிந்துபோன பிரச்னை களைத் தோண்டியெடுத்துப் பேச்சை வளர்க்காதீர்கள். வாழ்க்கை இதமாக இருக்கும்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!
Clovera

12. மந்திரக் கயிறு... 21 நாள்கள்...

எல்லா கணவன், மனைவியுமே, தங்கள் பார்ட்னரிடம், ‘எல்லா ஃபங்ஷ னுக்கும் லேட்டாதான் கிளம்புவா/கிளம்புவார்’ என்பது மாதிரி சில குறைகளையாவது கண்டுபிடித்து வைத்திருப்பார்கள். அதை வெளியில் சொல்லி சண்டையிடுபவர்கள் ஒரு ரகம் என்றால், மனதுக்குள் வைத்த படியே சண்டை பிடிப்பவர்கள் இன்னொரு ரகம். குறைசொல்லும் இந்த இயல்பினால்தான் வீட்டின் நிம்மதி பறிபோகிறது என்று நினைப் பவர்களுக்கு, ஒரு சமாதான டெக்னிக்... இருவரும் தொடர்ந்து 21 நாள்கள் வாழ்க்கைத்துணையின் எந்தக் குறை யையும் கண்டுபிடிக்க மாட்டேன்; அதைச் சொல்லவும் மாட்டேன் என்கிற உறுதியை எடுத்துக்கொண்டு, அதை நூறு சதவிகிதம் கடைப்பிடிக்கவும் வேண்டும். இந்த உறுதியை நினைவு படுத்திக் கொண்டே இருப்பதற்காக இருவரும் கையில் ஒரு கயிறு கட்டிக் கொள்ளலாம். கேட்பதற்குச் சற்று சினிமாத்தனமாக தெரிந்தாலும் பலன் தரும் முறையிது.

13. லவ் டெபாசிட்டும் 18 விநாடிகளும்...

தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்கிற ஒருவர் மீது தான், மனிதர்களுக்கு ஈடுபாடு, விருப்பம், காதல் எல்லாம் வரும். அப்படி தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்து கொண்டே இருக்கிற நபர் மீது காதல் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதைத்தான் ‘லவ் டெபாசிட்’ என்போம். அன்பாகப் பேசுவது, நேரம் செலவிடுவது போன்றவை இந்த டெபாசிட்டை அதிகமாக்கும். டெபாசிட் என்றாலே அது குறைவதற்கும் வாய்ப்பிருக்கிறதுதானே... கணவன் பேச்சுக்கு மனைவியோ, அல்லது மனைவியின் பேச்சுக்கு கணவனோ சரியாக செவி கொடுக்காதபோதும், சலிப்புத்தட்டுகிறது என்பதை வெளிப்படுத்தும்போதும், இந்த லவ் டெபாசிட் குறைந்து நெகட்டிவ் பேலன்ஸை நோக்கி நகரும். பொதுவாக ஒருவர் பேச ஆரம்பித்த 18 விநாடிக்குள், அதைக் கேட்டுக் கொண்டிருப்பவரின் மனதுக்குள் அந்தப் பேச்சுக்கான மறுபேச்சு தயாராகி விடும். உடனே பேசவும் ஆரம்பித்து விடுவோம். இது மனித இயல்பு. தம்பதியருக்கும் இதுவே பொருந்தும் என்றாலும், இன்னும் சில விநாடிகள் பொறுமை யைக் கடைப்பிடிக்கலாம். அதேபோல பேசிக் கொண்டிருக்கிற கணவன்/மனைவியும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பேசுவது நல்லது. போனை பார்த்துக்கொண்டே லைஃப் பார்ட்னர் சொல் வதற்கு ‘உம்’ கொட்டாதீர்கள். லவ் டெபாசிட் சுத்தமாகத் தீர்ந்துவிடும்.

14. நீயா... நானா..?

வாழ்க்கைத்துணையிடம் ஆதங்கத்தைக் கோபமாகப் பதிவு செய்வதற்கு பதில், 'நீங்க/நீ அப்படி பேசினப்போ நான் அப்படி ஃபீல் செஞ்சேன்; நீ/நீங்க நடந்துக்கிட்டது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு' என்று 'நீ... நீங்க...' என்பதை பிரதானப்படுத்திப் பேச ஆரம்பியுங்கள். கணவன்/மனைவி `நான் இனிமே இப்படி நடந்துக்கக் கூடாது' என்று முடிவெடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!

15. நீண்ட ஆயுளும் காரணம்!

200 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் மனிதர்களின் சராசரி வாழ்நாள் 26 வருடங்கள். டீன் ஏஜின் ஆரம்பத்திலேயே திருமணம், நான்கைந்து குழந்தைகள் என்று 10, 15 வருடங்கள் காதலாக வாழ்ந்துவிட்டு, போர்க்களம், நோய்ப்படுக்கை என்று இளவயதிலேயே இறந்து விடுவார்கள். சுதந்திரம் அடைந்தபோது, மனிதர்களின் சராசரி வயது 45. இன்றோ, அது 68ஆக உயர்ந்திருக்கிறது. சேர்ந்து வாழும் காலம் அதிகரிக்கையில், இறந்த கால நிகழ்வுகளையெல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டு வந்து பேசுவதும் அதிகரிக்கும். சிலர் அதில் இனிமையான நிகழ்வுகளைத் தோண்டியெடுக்க, பலர் பழைய பிரச்னைகளையெல்லாம் தூசித் தட்டியெடுத்து சண்டை போடுவார்கள். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

16. சமூகத்தின் ஆதிக்கமும் காரணம்!

அந்தக் காலத்தில் ஆண்களைச் சார்ந்தே பெண்கள் இருந்தார்கள். இன்றைக்குச் சூழல் மாறிவிட்டது. பாட்டியைப்போல அம்மா இல்லை; அம்மாவைப்போல மகளில்லை. பெண் சமூகம் முன்னேறிக்கொண்டே செல்கிறது. ‘என்னைக் கேட்காமல் இந்தச் சொத்தை ஏன் வாங்கினாய்; என் பணமும் அதில் இருக்கிறதல்லவா’ என்று கேள்வி எழுப்புகிற அளவுக்கு அவர்களுடைய பொருளாதார சுதந்திரம் மேம்பட்டிருக்கிறது. ஆனால், சமூகத்தின் அடிமனதிலோ, ‘ஆணும் பெண்ணும் சமமல்ல’ என்கிற எண்ணம் இன்றைக்கும் குறையவில்லை. இந்த எண்ண வேறுபாடுகளை உங்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருந்தால், உங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!
VSanandhakrishna

17. சேர்ந்து முடிவெடுங்கள்!

யார் அதிகம் சம்பாதிக்கிறார்களோ அவர்கள் சொல்வதுதான் குடும்பத்தில் விதிமுறையாக இருக்கும். அந்த நபர் சரியில்லாத பட்சத்தில் வீட்டின் அமைதி குறையும். இதுதான் பல காலமாக நம் சமூகத்தில் நடந்து வந்தது. இப்போது, இந்த நிலை மாறி வருகிறது. ‘இந்த பிராண்ட்ல இந்தப் பொருள் வாங்கினா நல்லாயிருக்கும்ல’ என்பதுபோன்ற விஷயங் களைக்கூட சில குடும்பங்களில் தம்பதியர் கலந்து பேசுகிறார்கள். இதுதான் சரி. இன்று தனித்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டோம். ‘நான்’ என்கிற ஈகோவும் அதிகரித்துக் கொண்டிருக் கிறது. இது தம்பதிக்குள் சலசலப்பை ஏற்படுத்துகிறது. கணவனும் மனைவியும் கிட்டத்தட்ட சரிசமமாக சம்பாதிக்கிற குடும்பங்களில் இந்த சலசலப்பு இருக்கிறது. எல்லா விஷயங்களிலும் இருவரும் சேர்ந்து முடிவெடுப்பது மட்டுமே இதற்கான தீர்வு. ஒருவரே முடிவெடுத்துச் செய்கிறார் என்றால், மற்றவர் ‘என்னை இவர்/இவள் மதிக்கல’ என்று முடிவு செய்துவிடலாம். சர்ப்ரைஸாக வாழ்க்கைத்துணைக்கு ஒரு கிஃப்ட் வாங்கித் தருவதெல்லாம் விதிவிலக்கு.

18. ரகசிய சிநேகம் வேண்டாமே!

கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் நண்பர்களாக வாய்க்கப்பெற்ற குடும்பங்கள் வரம் வாங்கியவை. ‘அந்த வரமெல்லாம் எனக்குக் கிடைக்கலை’, ‘நாங்க வழக்கமான தம்பதிங்கதான்’ என் பவர்கள், தங்களுக்குள் இருக்கிற அந்தரங்கப் பிரச்னைகளை தங்கள் சிநேகிதிகள்/சிநேகிதர்களிடம் முடிந்தவரை பகிராமல் இருப்பது நலம். குறிப்பாக, லைஃப் பார்ட்னருக்கு தெரியாமல் அந்தரங்க சிநேகிதங்கள் வேண்டவே வேண்டாம்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!

19. இரண்டு பேர்... மூன்று விஷயங்கள்!

காதலிக்கும்போதும், திருமணமான புதிதிலும் துணையைக் கொண்டாடிவிட்டு, சில வருடங்களில் துணையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால்... எதற்கும் மயங்காத மனமும் சிறு பாராட்டுக்கு சின்ன பிள்ளைபோல மயங்கி விடும். மனித மனங்கள் பாராட்டுக்கு ஏங்குபவை தானே.காதலிக்கும்போதும், திருமணமான புதிதிலும் துணையை ‘யு ஆர் த பெஸ்ட்’ என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்டிவிட்டு, சில காலம் கழித்துக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால்...

ஒரேவிதமான ரொமான்ஸ், தாம்பத்தியத்தில் புதிய புதிய உத்திகள் இல்லாமல் இருப்பது... உறவில் சலிப்பு ஏற்படுவதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால்... மணவாழ்க்கையில் நிச்சயம் மகிழ்ச்சி குறையும்.

கொண்டாடுதல், பாராட்டு, தாம்பத்தியத்தில் புதுப்புது உத்திகள்... மூன்றிலும் கொஞ்சம் கவனம் கொடுத்தாலும், உங்கள் வீடு ஆனந்தம் விளையாடும் வீடாக இருக்கும்.

20. கேலியும், கட்டுப்பாடும்...

கணவனும், மனைவியும் கேலியும் கிண்டலுமாக வாழ்கிறார்கள் என்பது நல்ல விஷயம்தான். அதே நேரம், ஒருவருடைய கேலியும், கிண்டலும் மற்றவரைக் காயப்படுத்துகிற அளவுக்கு இருந்தால், அது தவிர்க்கப்பட வேண்டியது. குறிப்பாக, அறிவுசார்ந்த அல்லது குடும்பம் சார்ந்த விஷயங்களில் ஏதோவொரு தகவலைத் தவறாகச் சொல்லிவிட்டால், ‘நீயொரு முட்டாள்’, ‘உனக்கு எதுவுமே தெரியாது’ என்கிற தொனியில் கேலி செய்யவே கூடாது. துணையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதும், காதலைச் சிதைத்து மணவாழ்க்கையின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!
Deagreez

21. ஐந்து ஸோன்களை அறிந்துகொள்ளுங்கள்!

திருமணமான புதிதில் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டு காதலும் காமமுமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் அவர்களுக்குள் பிரச்னை இருக்காது. அப்படியிருந் தாலும் அது அவர்களுக்கே தெரியாத அளவுக்கு வந்து போயிருக்கும். பல தம்பதியர் இந்த நேரத்தில் வருகிற பிரச்னைகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள். இதுதான் முதல் ஸோன்.

இரண்டாவது ஸோனில் சற்று த்ரில் குறைந்திருக்கும். பிரச்னை வந்தாலும், பெரியளவுக்கு சண்டைகள் வராது.

மூன்றாவது ஸோனில் துணையின் நெகட்டிவ் பக்கங்கள் தெரிய ஆரம்பிக்கும். பாராட்டுவது மறந்து போய், துணையின் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம் பிப்பார்கள்.

நான்காவது ஸோனில், ‘அச்சச்சோ... தவறான நபரைத் தேர்ந்தெடுத்து விட்டோமோ’ என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள்.

ஐந்தாவது ஸோனில், ‘எனக்கு வாய்ச்சது தவறான ஆளுதான்’ என்பதில் தெளிவாகி விடுவார்கள். இந்த எண்ணம் தொடர்ந்தால், பிரிந்து வாழ்வது, விவாகரத்து என திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்.

பல தம்பதிகள் தாங்கள் எந்த ஸோனில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மேலே உள்ளவற்றில் நீங்கள் எந்த ஸோனில் இருக்கிறீர்கள் என்பதை கவனித்து, முட்டல் மோதல் களைச் சரி செய்துகொண்டால், மகிழ்ச்சி உங்களைவிட்டு விலகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

22. தேடலில், இருப்பதைத் தொலைக்காதீர்கள்!

‘இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணியிருந்தா இவரைவிட/இவளைவிட பெட்டரான நபர் கிடைத்திருக்கலாம்' என்றோ, `இன்னும் பெட்டரான நபரை தேடலாம்' என்றோ, மனதுக்குள் எண்ணம் புகுந்தால் கையிலிருக்கிற வாழ்க்கையே தொலைந்து போகலாம். பொதுவாக தேடல் நல்ல விஷயம். ஆனால், இந்தத் தேடல் வேண்டவே வேண்டாம்.

23. மரியாதை இருந்தால் மகிழ்ச்சி வரும்!

தற்போது திருமண வயதில் இருக்கும் பலரிடமும் துணையை முழுமனதாக நம்புவதில் ஒரு தயக்கம் இருக்கிறது. நம்பிக்கையில்லாமல் திருமண வாழ்க்கைக்குள் நுழைய முடியாது. இதேபோல, எதிர்ப்பாலினம் மீது மரியாதையும் வேண்டும். நமக்கே நமக்கென்று ஒருவர் இருக்கிறார் என்பது தான் திருமணம். துணையைப் பரஸ்பரம் நம்பினால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!
Deepak Sethi

24. பேச்சு பேச்சா இருக்கட்டும்!

மணவாழ்க்கையின் மகிழ்ச்சியை பாதிப்பதில் உறவுகளுக்கும் பங்கிருக்கிறது. குறிப்பாக, மாமியார் மற்றும் நாத்தனார். ஆண் உறவுகளாலும் பிரச்னை வருகிறது என்றாலும், இந்த இரண்டு உறவுகள்தான் தம்பதியருக்குள் சுலபமாக பிரச்னை ஏற்படுத்தி விடுகிறார்கள் என்பதுதான் பலரும் சொல்கிற குற்றச்சாட்டு. இந்தச் சிக்கலில் மனைவி பாதிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டியது கணவருடைய பொறுப்புதான். இந்த உறவுச்சிக்கல் பேச்சோடு நிற்கிறதா, சீரியஸாக செல்கிறதா என்பதைக் கண்டறிந்து மனைவியையும், மணவாழ்க்கையையும் காப்பாற்ற வேண்டியது கணவரின் பொறுப்பு மட்டுமே.

25. பொறுப்புகளைத் திட்டமிடுங்கள்!

உண்மையில் அந்தந்த உறவுக்கான ஸ்கில் இருந்தால் மட்டுமே, அவர்களுடைய ரோலை சிறப்பாகச் செய்ய முடியும். இருவருமே படித்திருந்தாலும், வேலைக்குச் சென்றாலும் ‘குடும்பத்தைப் பேணுதல்’ முக்கியம். குடும்பப் பொறுப்புகளைத் திட்டமிடுவதில் இருவருக்குமே பங்குண்டு. இந்த ஸ்கில் இருவரிடமும் இருக்க வேண்டியது அவசியம். திருமணத்துக்கு முன்னரே ஆணும் பெண்ணும் பொறுப்புகளைத் திட்டமிட்டுக்கொண்டால், வாழ்க்கை தெளிவாக இருக்கும்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!

26. கற்பனை உலகில் வாழாதீர்கள்!

ஆண்கள் மத்தியில் `வெர்ச்சுவல் செக்ஸ்' இப்போது அதிகமாகி விட்டது. இதனால், மனைவியிடம் தேவையற்ற செக்ஸ் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டன. இந்தத் தலைமுறையில் இந்தப் பிரச்னை அதிகம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும், ஓர் இல்லறம் ஆரம்பிக்கும்போதே பிரச்னையாகிவிடலாம் என்பதால், வெர்ச்சுவல் வேறு; இயல்பான வாழ்க்கை வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

27. ஈகோ இல்லாத அட்வைஸ்!

கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு வரும்போது, அவர்களுடைய ஈகோ அச்சண்டையை இன்னும் கொஞ்சம் வலுவாக்கவே செய்யும். பிரச்னை பெரிதானாலும், மனைவியின்/கணவனின் பெற்றோரிடம் பிரச்னையைக் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது. ஏற்கெனவே கணவனின் ஈகோ, மனைவியின் ஈகோ இருக்க, கூடவே வீட்டுப் பெரியவர்களின் ஈகோவும் சேர்ந்துகொண்டால், மணவாழ்க்கையின் மகிழ்ச்சி கெடுவதோடு, பிரிவும் ஏற்படலாம். ‘வீட்டுப் பெரியவர்களிடம் பேசாமல் வேறு யாரிடம் பேசுவது’ என்றால், பிரச்னையைப் பெரிதாக்காத இயல்புகொண்ட சொந்தக்காரர்கள், நண்பர்கள் அல்லது உளவியல் ஆலோசகரை நாடலாம்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!
PeopleImages

28. எந்த போதையும் வேண்டாமே...

தம்பதியரில் ஒருவரோ அல்லது இருவருமோ, செல்போன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள், மதுப்பழக்கம் உள்ளிட்ட எதற்குமே அடிமையாகக் கூடாது. அப்படி போதையில் வீழ்ந்துவிட்டால், குடும்பத்தின் நிம்மதி கெட்டு விடும். நம் கலாசாரத்தில் குடும்ப வாழ்க்கை குழந்தைகளை மையமாகக் கொண்டது. போதைப்பழக்கத்தால் குழந்தைகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும். ஏதோவொரு போதை உங்களை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும்போதே, எச்சரிக்கையாகி விலகி விடுங்கள்.

29. மெளனம் தீர்வல்ல!

உங்கள் துணையிடம் மாற்ற முடிந்த நடவடிக்கைகள், மாற்ற முடியாத நடவடிக்கைகள் என இரண்டும் இருக்கும். மாற்ற முடிந்த தவறான விஷயங்களை மாற்ற முயற்சி செய்யலாம். தேவைப்பட்டால், அதற்கான உதவியை நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். முன்காலத்தைப் போல மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு புழுங்க வேண்டாம். ‘இவருகிட்ட/இவகிட்ட சொல்லி எந்தப் புண்ணியமும் இல்லை’ என்று மருகவும் வேண்டாம். திருமணம் செய்துகொள்வதே மகிழ்ச்சியாக இருப் பதற்குத்தான்... அதற்கொரு பாதகம் வருகிறது என்றால், உங்களால் முடிந்த எல்லை வரை சென்று அதைச் சரிசெய்யப் பாருங்கள்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்!

30. காலமெல்லாம் காதலை வளருங்கள்!

காதலுக்கு எண்ட் கார்டே கிடையாது. காதல் என்பது திருமணத்துக்கு முன்னால் மட்டுமே செய்ய வேண்டிய ஒன்று எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தெளிவான தம்பதிகள் திருமணத்துக்குப் பிறகும் காதலை வளர்த்தாலும், குழந்தைகள் பிறந்த பிறகு, அதைச் சுத்தமாக மறந்து விடுகிறார்கள். ஓர் உண்மையைச் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். குழந்தைகள் திருமண உறவில் கொஞ்சம் சிக்கலை உண்டு பண்ணக் கூடியவர்கள். குழந்தைகளுக்கு அதிக கவனம் கொடுக்கிறோம் என்ற பெயரில், உங்களுக்குள் அந்நியோன்யத்தை குறைத்துக்கொள்ளாதீர்கள்.

ஹேப்பி மேரீடு லைஃப்!