Published:Updated:

ஒரு முகூர்த்தம்... ஒரு நாள்... 4 மகள்களின் திருமணம்..! - இது கேரளா விசேஷம்

கேரளா
கேரளா

"எந்தப் பண்டிகையாக இருந்தாலும் நாங்கள் நால்வரும் ஒரே நிறத்தில், ஒரே மாடல் ஆடைதான் அணிவோம். திருமணத்தின்போதும் ஒரேவித ஆடையில், ஒன்றாக மணமேடை ஏற வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.''

ஒரே நாளில், ஒரே முகூர்த்தத்தில், ஒரே மணமேடையில் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த நான்கு மகள்களுக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது என்பதுதான், கடந்த சில நாள்களாக எல்லோராலும் பேசப்பட்டு வருகிற பாசிட்டிவ் செய்தி. அந்தக் குடும்பத்தினருடன் பேசியவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு முன்னால், அந்தக் குடும்பத்தைப் பற்றி சிறு அறிமுகம்.

குழந்தைகளாக இருந்தபோது
குழந்தைகளாக இருந்தபோது

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேமகுமார் - ரமாதேவி தம்பதிக்கு 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி, ஒரே பிரசவத்தில் ஓர் ஆண், நான்கு பெண் என ஐந்து குழந்தைகள் பிறந்தார்கள். இந்தச் சம்பவம் கேரள மீடியாக்களில் அப்போது முக்கியச் செய்தியானது. உத்திர நட்சத்திரத்தில் பிறந்த அந்தக் குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா, உத்ரஜன் எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஐந்து குழந்தைகளையும் ஐந்து ரத்தினங்களாகப் பாவித்தனர். இதனால் அவர்களை பஞ்சரத்னம் என அழைக்கத்தொடங்கினர். பஞ்சரத்னா வீடு எனக் கேட்டால்தான், அவர்களுடைய வீட்டுக்கு அப்பகுதியினர் வழிகாட்டுகிறார்கள்!

குழந்தைகளின் தந்தை பிரேமகுமார் சிறு வியாபாரிதான். கூடவே மனைவி ரமாதேவிக்கு இதயத்தில் ஏற்பட்ட பிரச்னையால் கடன் சுமையும் சேர்ந்துகொள்ள, மனமுடைந்த பிரேமகுமார் 2004-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். ஐந்து குழந்தைகளுடன் கஷ்டப்பட்ட ரமாதேவிக்கு கேரள அரசு, கூட்டுறவு வங்கியில் வேலை வழங்கியது. அதன்பிறகுதான் அந்தக் குடும்பம் முன்னேற்றப்பாதையில் செல்ல ஆரம்பித்தது. தற்போதுவரைக்கும் பேஸ் மேக்கருடன் தானும் வாழ்ந்து, தன் பிள்ளைகளையும் படிக்க வைத்து ஆளாக்கிவிட்ட ரமாதேவி, மகள்கள் நால்வருக்கும் அடுத்த வருடம் ஏப்ரல் 28-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயத்திருக்கிறார். பேட்டிக்காக ரமாதேவியைத் தொடர்பு கொண்டபோதுகூட, திருமண வேலைதொடர்பாக குருவாயூர் கிருஷ்ணன் கோயில் சந்நிதியில்தான் இருந்தார். இனி ஓவர் டு பஞ்சரத்னக் குடும்பம்.

முதல் பிறந்த நாளின்போது
முதல் பிறந்த நாளின்போது

"நாங்கள் குழந்தையாக இருந்தபோது, இரவு நேரங்களில் திடீரென அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அப்போது, அம்மா மருத்துவமனைக்குப் போகும்போதும் எங்கள் ஐந்துபேரையும் உடன் அழைத்துக்கொண்டுதான் செல்வார். அவ்வளவு கஷ்டத்திலும் அம்மா எங்களை நல்லபடியாக வளர்த்ததை ஒருபோதும் மறக்க மாட்டோம். இன்றைய எங்கள் நிலைமைக்கு அம்மாவின் மன உறுதியும் உழைப்பும்தான் காரணம்'' என்கிற உதாராவின் கண்களில் அம்மா மீதான பாசத்தில் கண்ணீர்த்துளிகள் உதிர்கின்றன.

"நாங்கள் அனைவரும் லூர்து மவுன்டன் ஸ்கூலில் ஒரே வகுப்பில்தான் படித்தோம். பதினோராம் வகுப்பில்தான் அவரவர்க்குப் பிடித்த பாட வகுப்பில் சேர்ந்தோம். எங்கள் நால்வருக்கும் 24 வயதாகிவிட்டது. திருமணம் செய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது, ஒரே நாள், ஒரே சுப முகூர்த்தத்தில்தான் எங்கள் நால்வருக்கும் திருமணம் நடத்த வேண்டும் என்று அம்மா சொன்னார். அம்மாவின் இந்த விருப்பம் எங்களுக்கும் ஏற்கெனவே தெரியும் என்பதால், நாங்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தோம். எங்கள் பாசப்பிணைப்புப்பற்றிப் புரிந்துகொண்ட மாப்பிள்ளை வீட்டார்களும் அமைந்துவிட்டனர்.

பள்ளிக்கூடத்தில்
பள்ளிக்கூடத்தில்
Vikatan

எந்தப் பண்டிகையாக இருந்தாலும் நாங்கள் நால்வரும் ஒரே நிறத்தில், ஒரே மாடல் ஆடைதான் அணிவோம். திருமணத்தின்போதும் ஒரேவித ஆடையில், ஒன்றாக மணமேடை ஏற வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. தந்தை ஸ்தானத்தில் சகோதரன் உத்ரஜன் இருக்கிறான்'' என்கிறார் நெகிழ்ச்சியுடன் உத்ரா.

அடுத்து பேசியவர் உத்ரஜன். ''எங்கள் அம்மாவின் மனதைரியத்தால்தான் நாங்கள் இந்த நிலையை எட்டியிருக்கிறோம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் எங்கள் அம்மா தைரியமாக எதிர்கொள்வார். அப்பாவை நினைத்தால் கண்களில் கண்ணீர் மட்டுமே வரும். வேறொன்றும் சொல்ல வார்த்தை வரவில்லை. சகோதரிகளுக்குத் திருமணம் செய்துவைக்கும் பொறுப்பை அப்பா ஸ்தானத்தில் இருந்து நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இன்ஜினீயரிங் படித்து முடித்த எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டது. சகோதரிகளின் திருமணம் முடிந்ததும் நான் வேலைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறேன்'' என்பவரின் குரலில் சந்தோஷம்.

உத்ரஜன்
உத்ரஜன்

மகள்களின் திருமண ஏற்பாட்டில் பிஸியாக இருந்த ரமாதேவியிடமும் பேசினோம், "ஐந்து குழந்தைகளையும் நான் வளர்த்து ஆளாக்கியதை இப்போது நினைத்தாலும் எனக்கு பிரமிப்பாகத்தான் இருக்கிறது. அவ்வளவு கஷ்டத்தில்தான் நான் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினேன். என்னுடைய உடல் நலப்பிரச்னை, குழந்தைகளுக்கு வருகிற சின்னச்சின்ன ஆரோக்கியப் பிரச்னைகள் எனக் கடும் சிரமங்களை அனுபவித்திருக்கிறேன். ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்றாலும் குழந்தைகள் அனைவரையும் அழைத்துக்கொண்டுதான் செல்வேன்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், என் வாழ்க்கை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. என்னுடைய ஐந்து குழந்தைகளும் திறமைமிக்கவர்கள். அதே நேரம், அவர்களிடமும் மற்றப்பிள்ளைகள்போல சேட்டை, அடம் எல்லாம் உண்டு, அந்த நேரத்தில் ஒருவரின் தலையில் குட்டு வைத்தால்போதும். மற்ற நால்வரின் தவறுகளும் வெளியே வந்துவிடும். அப்புறமென்ன, வரிசையாக ஐந்து பேருக்கும் குட்டுதான். அதோடு பிரச்னை முடிந்துவிடும். குழந்தைகளைக் கையாள்வது ஒரு தனி டெக்னிக்தான்'' என்று சிரிப்பவர், ''இந்த 24 வயது வரைக்கும் என்ன பிரச்னை வந்தாலும் என்னுடைய குழந்தைகள் சண்டை போட்டுக்கொண்டு ஒருவரிடம் ஒருவர் பேசாமல் இருந்ததேயில்லை'' என்கிறார் பெருமிதமாக.

''மகள்கள் நான்கு பேருக்கும் மாப்பிள்ளை தேடும் படலம் கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. என் மகள்களை இரட்டையர்களுக்குத்தான் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவேயில்லை. அவரவர்க்கு ஏற்ற வரன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் மட்டும் தீர்மானமாக இருந்தேன். மேட்ரிமோனியல் மூலமும் பத்திரிகைகளில் வருகிற விளம்பரங்கள் மூலமும்தான் வரன்களை தேடிப்பிடித்தோம்'' என்கிற ரமாதேவி, ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ள உத்ராவிற்கு ஆயூரைச் சேர்ந்த, தற்போது மஸ்கட்டில் ஹோட்டல் மேலாளராக வேலைபார்க்கும் அஜின் குமாரை மணமகனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ரமாதேவி, உதாரா, உதரஜன்
ரமாதேவி, உதாரா, உதரஜன்

கொச்சி அமிர்தா மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் டெக்னீஷியனாகப் பணிபுரியும் உத்ரஜாவுக்கு, பத்தணம் திட்டாவைச் சேர்ந்த மயக்கவியல் டெக்னீஷியன் ஆகாஷைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர் குவைத்தில் பணிபுரிகிறார். ஆன்லைன் ஊடகத்தில் செய்தியாளராகப் பணிபுரியும் உதாராவிற்குக் கோழிக்கோடைச் சேர்ந்த பத்திரிகையாளர் மகேஷையும், திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீஷிசியனாகப் பணிபுரியும் இன்னொரு மகள் உத்தமாவிற்கு மஸ்கட்டில் அக்கவுன்டன்டாகப் பணிபுரியும் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த வினீத்தை வரனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

''மகள்களின் திருமணத்திற்குப் பிறகு மகன் உத்ரஜன் வேலைக்காக வெளிநாட்டுக்குச் செல்வது வருத்தமாகத்தான் இருக்கிறது. அதே நேரம், சமூகத்தில் அவன் நன்றாக வாழவேண்டும் என்பதால் இதுபோன்ற பிரிவுகள் அவசியம்தானே.

ஐந்துபிள்ளைகளுடன் ரமாதேவி
ஐந்துபிள்ளைகளுடன் ரமாதேவி
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்... 4 சகோதரிகளுக்கு ஒரே தேதியில் திருமணம்! - உற்சாகத்தில் கேரள குடும்பம்

இத்தனை வருடங்களாக நான் பட்ட கஷ்டங்களை மறக்க முயற்சி செய்துவருகிறேன். இதுநாள் வரைக்கும் எங்களைத் தாங்கிப்பிடித்தவர்களுக்கும் நிழல் தந்தவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். எல்லோரும் அவசியம் கல்யாணத்துக்கு வர வேண்டும்'' என விடைபெற்றார்.

அடுத்த கட்டுரைக்கு