கட்டுரைகள்
Published:Updated:

அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்!

அன்பை வெளிப்படுத்த ஐந்து 
வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்!

மற்ற எல்லாவற்றையும்விட மிக முக்கியம், வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது... சாரி, தேங்க்ஸ், லவ் யூ, மிஸ் யூ போன்ற வார்த்தைகள்தான் உறவில் இருக்கும் ஈகோவை உடைத்து, நெருக்கத்தை வளர்க்கும்.

‘எப்போ பார்த்தாலும் சண்டை, ஏன்டா ரிலேஷன்ஷிப்ல கமிட் ஆனோம்னு இருக்கு’ என்று ஃபீல் செய்பவரா நீங்கள்? உங்கள் ரிலேஷன்ஷிப்பை அழகாக்கவும், அன்பைப் பெருக்கவும் ஆலோசனைகளைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் ப்ரீனு...

‘‘காதலில் பிரச்னைகள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்னவென்றால், புரிந்துணர்வு இன்மை, நாம் அன்பு செலுத்தியவர் நம்மை விட்டுப் போய் விடுவாரோ என்ற பயம், உறவில் நம்பிக்கையின்மை, நாம் அன்புக்குரியவரின் மீதான பொசசிவ்னெஸ்ஸில் அவரைக் கட்டுப்படுத்துதல் போன்றவைதான். இவை காதலில் மட்டுமல்ல, நட்பு, சகோதர உறவு, பெற்றவர்களுடனான உறவு என எதிலும் வரலாம். இதுபோன்ற சண்டைகள் வராமல் இருக்க, உங்களைப் பற்றியும் உங்கள் அன்பு பற்றியும் சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியவைப்பது அவசியம். ரிலேஷன்ஷிப்பில் விரிசல் விழாமல் இருக்க, அன்பு வைப்பது மட்டும் போதாது. அதனை வெளிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

ப்ரீனு
ப்ரீனு

செயல் மூலம் அன்பை வெளிப்படுத்துதல், பரிசுகள் கொடுத்து அன்பை வெளிப்படுத்துதல், வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துதல், ஸ்பரிசம் மூலம் அன்பை வெளிப்படுத்துதல், நேரம் செலவிடுதல் மூலம் அன்பை வெளிப்படுத்துதல் என அன்பை வெளிப்படுத்துவதில் ஐந்து வகைகள் இருக்கின்றன. இதில் உங்கள் பார்ட்னருக்கு எது பிடித்திருக்கிறது, அவர் எந்த வகையான அன்பை எதிர்பார்க்கிறார் என்பதை முதலில் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

செயல் மூலம் அன்பை வெளிப்படுத்துதல் என்பது, பார்ட்னரின் பணிகளைப் பகிர்ந்து கொள்வது, அவரது உடல்நலனில் அக்கறை காட்டுவது போன்றவை. இப்படி செயல் மூலம் அன்பை வெளிப்படுத்தும்போது, உங்கள் பார்ட்னர் எப்போதும் பாதுகாப்பாக இருப்பது போன்று உணர்வார்.

அன்பை வெளிப்படுத்த ஐந்து 
வழிகள்!

எதிர்பாராத நேரத்தில் நெற்றியில் முத்தமிடுதல், கைகளை இறுகப்பற்றுதல் போன்றவை தொடுதல் மூலம் அன்பை வெளிப்படுத்துவதில் சேரும். இவை, உங்களின் பார்ட்னருக்கு, ‘எது நடந்தாலும் நாம் சேர்ந்து பயணிப்போம், உன்னுடன் நான் இருக்கிறேன்’ என்பது போன்ற மன தைரியத்தை விதைக்கும்.

ரிலேஷன்ஷிப்பில் தவிர்க்க முடியாதவை அன்பளிப்புகள். சின்னச் சின்ன சர்ப்ரைஸ் மற்றும் பரிசுகள் கொடுப்பதன் மூலம ரிலேஷன்ஷிப்பில் நெகிழ்ச்சி நிறைந்த நிமிடங்களையும், நினைவுகளையும் உருவாக்கலாம். பார்ட்னரின் சின்னச் சின்ன முயற்சிகளையும் பாராட்டுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம். பாராட்டுகள் உறவில் உள்ள வெறுப்புகளை அகற்றி, உறவை நீட்டிக்கச் செய்யும்.

நேரம் செலவிடுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்துவது, மற்றொரு வகை. ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உங்கள் பார்ட்னருடன் இருக்கிறீர்கள் என்பதைவிட, இருக்கும் நேரத்தில் அவரை எப்படிப் பார்த்துக்கொள்கிறீர்கள், எப்படி அன்பைப் பரிமாறுகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம்.

மற்ற எல்லாவற்றையும்விட மிக முக்கியம், வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது... சாரி, தேங்க்ஸ், லவ் யூ, மிஸ் யூ போன்ற வார்த்தைகள்தான் உறவில் இருக்கும் ஈகோவை உடைத்து, நெருக்கத்தை வளர்க்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சாரி, தேங்க்ஸ் போன்ற வார்த்தைகளைச் சொல்லத் தயங்காதீர்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் லவ் யூ, மிஸ் யூ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் பார்ட்னர் கோபத்தில் இருக்கும் சூழலில் நீங்கள் சொல்லும் இந்த மேஜிக் வார்த்தைகள் அவரை கூல் செய்யும். கோபத்தைத் தணித்து உங்கள்மீது மதிப்பை ஏற்படுத்தும்.

அன்பை வெளிப்படுத்த ஐந்து 
வழிகள்!

இப்படிச் செய்வதால் சுயமரியாதையை இழக்கிறோமோ என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். நெருக்கமான உறவுகளிடம் நாம் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்பதிலோ அவர்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்வதிலோ உங்கள் மரியாதை கெடப்போவதில்லை.

சில நேரங்களில், பிரேக் அப் ஆன பிறகும்கூட நீங்கள் பயன்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகள் வெறுப்பை நீக்கி, அன்பை வளர்க்கலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.