Published:Updated:

80-களின் காலம்தான் காதலின் பொற்காலம்... இளையராஜா பாடல்களே சாட்சி! #80sLove

காதலின் பொற்காலம்

'என்னை உனக்குப் பிடித்திருந்தால் உனக்குப் பிடித்த நீல தாவணியில் நாளை காலையில் வரவும்' என மறக்காமல் குறிப்பிடுவான். எல்லோருமே தங்களின் காதலிக்கு, தன் நண்பனிடம் பேசிக்கொள்வதற்காகவே ஒரு சங்கேதமான புனைப்பெயரை வைத்திருப்பார்கள்.

Published:Updated:

80-களின் காலம்தான் காதலின் பொற்காலம்... இளையராஜா பாடல்களே சாட்சி! #80sLove

'என்னை உனக்குப் பிடித்திருந்தால் உனக்குப் பிடித்த நீல தாவணியில் நாளை காலையில் வரவும்' என மறக்காமல் குறிப்பிடுவான். எல்லோருமே தங்களின் காதலிக்கு, தன் நண்பனிடம் பேசிக்கொள்வதற்காகவே ஒரு சங்கேதமான புனைப்பெயரை வைத்திருப்பார்கள்.

காதலின் பொற்காலம்

இந்த உலகம் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து வருவது, காதல். யுகம்தோறும் அதன் பரிமாணங்கள் மாறிவந்தாலும், அசலான அன்பே அதன் ஆன்மா. இன்று நாம் பார்க்கிற காதலுக்கும் 80-களின் காதலுக்கும் ஆறு வித்தியாசங்கள் அல்ல, 1,000 வித்தியாசங்கள் உள்ளன. 80-களின் காதல்... ஒரு ரீவைண்டு டூர் போகலாமா!

Kamal and Rajni
Kamal and Rajni

என்னதான் ஊர்த்திருவிழாக்களிலும் கல்யாண வீடுகளிலும் ஸ்பீக்கர் கட்டி காதல் பாட்டுகள் போட்டாலும், உண்மையில் 'காதல்' என்ற வார்த்தையை அப்போதெல்லாம் பேச்சுவழக்கில்கூட யாரும் பயன்படுத்தத் துணியமாட்டார்கள். நல்ல காதலைக்கூட கள்ளத்தனமாகத்தான் வளர்த்தாக வேண்டிய சூழலிருந்த காலம் அது. 'காதலாவது கத்திரிக்காயாவது' என்கிற சிந்தனைதான் மக்களுக்கு இருக்கும். ஆனால், ஒரு விசித்திர மனநிலையாக, எல்லாருக்குமே காதல் பிடிக்கும். காதலிக்கிறவர்களைத்தான் பிடிக்காது.

அப்போதெல்லாம் தாவணிதான் இளம்பெண்களின் ஆல்டைம் உடை. கல்லூரிக்கு மாணவிகள் தாவணியில்தான் வருவார்கள். எல்லா பெண்களிடமும் ஸ்கை புளூ நிறத்தில் ஒரு தாவணி நிச்சயம் இருக்கும். சாம்பல் நிற தாவணிக்கு கறுப்பு நிற பிளவுஸ், பிரவுன் நிற தாவணிக்கு சந்தன நிற பிளவுஸ், அதற்கேற்ற நிறங்களில் வளையல்கள், சிங்கார் மெரூன் கலர் பொட்டு, ஒரு முழம் பூவை இரண்டாகக் கத்தரித்த அளவில் மல்லிகைப் பூ, சின்னதாக ஒரு ரோஜா என... எல்லாம் ஒரு ஆர்டரில் அணிந்து வருவார்கள். அப்போது சுடிதார், மிடியெல்லாம் கிடையாது. சொல்லப்போனால், டைரக்டர் ஸ்ரீதர்தான் முதன்முதலில் மாடர்ன் உடைகளிலும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்களிலும் பெண்களைப் படங்களில் காண்பித்தார். அப்போது அது மிகப் பெரிய ஆச்சர்யம். நிஜத்தில், மேல்தட்டுப் பெண்களிடம் மட்டுமே அந்த உடை வழக்கங்கள் இருந்தன.

Kamalhasan
Kamalhasan

கல்லூரி இளைஞர்கள் 40 இன்ச் பெல்பாட்டம் பேன்ட், பாபி காலர் சட்டை, ஸ்டெப் கட்டிங், யார்ட்லி சென்ட், ஹை ஹீல்ஸ் ஷூ என உலகத்தையே காலில் போட்டு மிதித்தபடி வலம்வருவார்கள். அதிலும் 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'சட்டம் என் கையில்' படங்களில் கமல் அணிந்துவரும் ஒயிட் அண்ட் ஒயிட் பேன்ட், ஷர்ட் மற்றும் பட்டையான பிளாக் பெல்ட் எல்லோரிடமும் தவறாமல் இருக்கும். அப்போது அது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். காலேஜில் இவன் ஒரு முக்கியமான ஆள் என்பதற்கான குறியீடு. காதலிப்பதற்கான முக்கியத் தகுதி.

இத்தனையும் இருந்தாலும், இவர்களுக்கு எல்லாம் காதல் என்பது அப்போது ஒரு மௌன வசந்தமாகத்தான் இருந்தது. காதலை அத்தனை எளிதாக சொல்லிவிட முடியாது. ஏன், பேசவே முடியாது. பெரும்பாலும் ஆண்கள் கல்லூரிகள், பெண்கள் கல்லூரிகள்தான் இருக்கும். இருபாலர் கல்லூரிகள் அரிதரிது. முதுகலையில், அதுவும் அரசுக் கல்லூரிகளில்தான் கோ-எஜுகேஷன் இருக்கும்.

தற்செயலாகச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள்தான் அன்று காதலாக மாறியது. பஸ் ஸ்டாப்பில், ரயில்வே ஸ்டேஷனில், பயணங்களில்தான் காதல் பயிரைக் கருத்தாக வளர்க்க முடியும். இப்போதுபோல் எளிதாகப் பெண்களிடம் பேசிவிட முடியாது இவனுக்கும் பேச வராது. தொண்டைக் குழியிலேயே வார்த்தைகள் நிற்கும். பத்து முறை எச்சில் விழுங்குவான். அது வந்து... அது வந்து... அதுவந்து... என்பதையே பத்து முறை சொல்லிக்கொண்டு நிற்பான். அதைக் கண்களை அகலமாக விரித்து அந்தப் பெண் பருகுவாள். இப்படித்தான் இருந்தது 80-களின் காதல்.

80sLove
80sLove

இப்போதுபோல அப்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மொபைல் எல்லாம் கிடையாது. ஏன்... லேண்ட்லைன்கூட ஊரிலேயே அரிதாக ஒருவரின் வீட்டில்தான் இருக்கும். அவளுக்கு ஒரு லெட்டர் கொடுக்கலாம் என முடிவு பண்ணவே நீண்ட நாள்களாகும். எழுதுவான் எழுதுவான் எழுதிக்கொண்டே இருப்பான். அவள் மறுத்துவிடக் கூடாது என்பதற்காக வார்த்தைகளை முத்துகளாகக் கோப்பான். அதன் பிறகு ஒருவழியாய் எழுதிக்கொண்டு போய் கொடுப்பான். 'என்னை உனக்குப் பிடித்திருந்தால் உனக்குப் பிடித்த நீல தாவணியில் நாளை காலையில் வரவும்' என மறக்காமல் குறிப்பிடுவான். எல்லோருமே தங்களின் காதலிக்கு, தன் நண்பனிடம் பேசிக்கொள்வதற்காகவே ஒரு சங்கேதமான புனைப்பெயரை வைத்திருப்பார்கள்.

எல்லா கல்லூரிகளிலுமே எல்லோரும் பார்த்து பிரமிக்கக்கூடிய ஒரு பேரழகி இருப்பாள். அவளை எல்லோருக்குமே பிடிக்கும் (ஆனால், அவளுக்குப் பிடித்தமானவன் நிச்சயம் அந்தக் கல்லூரியில் இருக்க மாட்டான்). அவளை எண்ணி கவிதைகளாக எழுதிக் குவிப்பார்கள் பலர். சிலர் ஒரு பெண்ணை விரும்பினால், அவளைத் தவிர பாக்கி எல்லோரிடமும் சொல்லி முடித்துவிடுவார்கள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடம் சொல்லும்போது, அவள் கல்யாணப் பத்திரிகை கொடுப்பாள்.

80sLove
80sLove

பெரும்பாலான காதல்கள் இப்படித்தான் அந்தக் காலத்தில். அந்தளவுக்கு மனசுக்குள் ஒரு பயம். அந்தளவுக்கு ஒரு கூச்சம். இவற்றையெல்லாம் தாண்டி சொன்னவுடன் ஒருவேளை அவள் குடும்ப சூழ்நிலை காரணமாகவோ, உண்மையில் பிடிக்கவில்லை என்பதாலோ காதலை மறுத்துவிட்டால், அதை எளிதாக எடுத்துக்கொள்ளும் மனம் அவர்களுக்கு இருக்காது. 'அவள் எனக்குத்தான் என்கிற கற்பனையில் என்னால் ஆயுள் முழுவதும் சுகமாக வாழ முடியும். அவள் எனக்கு இல்லையென்றால் என்னால் ஒரு நிமிஷம்கூட வாழ முடியாது' என்று தாடி வளர்ப்பார்கள். மௌன குருவாகவே வாழ்ந்துவிடுவார்கள் சிலர்.

கல்லூரிக் காலத்தில் காதலிக்கத் தொடங்கியவர்கள், படிப்பு முடிந்த பிறகு, வேறு வேறு திசைகளில் பயணிக்க வேண்டிய நிலை. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகும். திருமணப் பத்திரிகை கொடுப்பாள். இவனே போய் திருமண வேலைகளை இழுத்துப்போட்டு செய்வதும் உண்டு. தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, தான் விரும்பிய பெண் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர். 'எனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது' என்று, இப்போது ஆங்காங்கே காணப்படும் மிருக குணத்தையெல்லாம் ஆண்கள் கற்பனையிலும் நினைத்திடாத காலம் அது.

80sLove
80sLove

ஏதோ ஒரு குடும்பச் சிக்கல், அவளால் தடையைத் தாண்டி வர முடியவில்லை எனத் தாடி வளர்த்து, தண்ணி அடித்துவிட்டு காதலை மறப்பவர்களும் உண்டு. இதுதான் மேக்ஸிமம் லிமிட். அதன் பிறகு வீட்டார் ஒரு கால்கட்டுப் போடுவார்கள். அதற்கு உண்மையாக வாழ்ந்துவிட்டுப் போவான். இப்படித்தான் இருந்தது 80-களின் காதல். ஆம்... அது ஒரு சைலன்ட் ஸ்பிரிங்.

ஆனால், இத்தனை தடைகளையும் தாண்டி அவர்கள் காதல் வாழ்வில் இணைந்திருந்தால், ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதிகளாக, வெற்றித் தம்பதிகளாக, லட்சிய தம்பதிகளாக வாழ்வை இனிக்க இனிக்க வாழ்வார்கள் என்பது நிச்சயம்.

கொடுத்த கடிதத்தை பிரின்ஸ்பாலிடம் கொடுத்து மெமோ வாங்க வைத்ததில் இருக்கிறது 80-களின் காதல். கையெழுத்திடாத பொங்கல் வாழ்த்து அட்டையில் மறைந்து கிடக்கிறது 80-களின் காதல். கைமுறுக்கும் கடலை மிட்டாயும் காதலியின் தம்பிக்கு வாங்கிக் கொடுத்ததில் மறைந்து கிடக்கிறது 80-களின் காதல். நண்பனுடன் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு ஆறு மைல் டபுள்ஸ் மிதித்துப் போய் பார்த்ததில் இருக்கிறது 80-களின் காதல்.

Ilayaraja
Ilayaraja

60-களில் ஆயிரம் பேரில் ஒருவர் லவ் பண்ணினால் ஆச்சர்யம். 70-களில் நூறு பேரில் ஒருவர், 80-களில் பத்து பேரில் ஒருவர் என மாறி, இன்று காதல் இல்லாதவர்களே இல்லை என்னும் நிலை.

90'ஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் காதல் பற்றி உருகி உருகிப் பேசிக்கொள்ளலாம். காதலில் கரைய கரையக் கிடக்கலாம். ஆனாலும், 80-கள்தான் காதலர்களின் பொற்காலமாகவும் காதலின் பொற்காலமாகவும் இருந்தது. அதற்கு, வீட்டு ரேடியோக்கள் முதல் பேருந்து ஸ்பீக்கர்கள்வரை அவர்கள் சுவாசித்துக் கிடந்த இளையராஜாவின் காதல் பாடல்களே சாட்சி!