Published:Updated:

`காதல் நிகழ்த்தப்படுவதல்ல, அது தானாக நிகழ்வது!' - ஒரு 90'ஸ் கிட்டின் காதல் கடிதம்

Love letter
News
Love letter

நாம் காதல், உரையாடல், ஊடல், மெளனம், முத்தம் என எல்லாவற்றையும் வாட்ஸ்அப்புக்குள் பூட்டிவைத்துவிட்டு, கைப்பேசியின் பொறுப்பில் அன்பைவிட்டுவிட்டோம்.

பேரன்பின் வல்லாதிக்கத் தோழிக்கு,

நமக்குள் ஓர் உரையாடல் நிகழ்ந்து மாதங்களாகிவிட்டன. ``நேற்றுதானே வாட்ஸ்அப்பில் பேசினோம்" என்பது உன் பதிலாக இருந்தால் உரையாடலுக்கான அர்த்தத்தை உனக்கு விளக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்றே நம்புகிறேன்.

என் அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் செய்துகொண்ட கதையை உன்னிடம் பலமுறை கூறியிருக்கிறேன். நாமும் அப்படிச் செய்துகொள்ளலாம் என்ற ஆசையில் சொன்ன கதை. அதைச் சொன்னவன், ஏனோ அவர்களுடைய `காதல் செய்த கதை'யைச் சொல்ல மறந்துவிட்டேன். சொல்லியிருந்தால் நாமும் அப்படிக் காதலித்திருக்கலாம். என் அம்மா அப்பாவின் காதல் அத்தனை வியப்பானது. நம்மைப்போல நாளொன்றுக்கு ஆறு முறை சண்டையிட்டு, பத்து முறை கட்டி அணைத்து முத்தங்கள் பகிர்ந்து சமாதானமாகும் அளவுக்கு, அவர்கள் காதல் கதையில், காதல் அன்றாடத்தின் அங்கமாக இல்லை. ஆனால், எப்போதுமே காதல் இருந்துகொண்டேதான் இருந்திருக்கிறது. இப்போதும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அடிக்கடி பார்த்துக்கொள்ள முடியாது என்ற ஒற்றைக் காரணத்தைத் தவிர, திருச்சிக்கும் நாகர்கோவிலுக்கும் இடையே இருந்த தூரம் அவர்கள் காதல் மீது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், சென்னையின் இருவேறு மூலைகளில் இருக்கும் நமக்கு, நம் காதலுக்கு, இந்தச் சிறிய தூரமே முதல் எதிரியாகிவிட்டது. ஒரு பெருநகரக் காதல் கதை இப்படித்தான் இருக்கும் என்ற மூடநம்பிக்கை நம்மைச் சூழ்ந்துகொண்டது என்பதை என்னால் ஏற்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. அதைவிடக் கொடிய நம்பிக்கை, `காதல் என்றால் இப்படித்தான் இருக்கும்', என்ற வட்டத்துக்குள் காதலை நாம் அடைத்துவிட்டதுதான். நம்மையறியாமல் காதலுக்குக் கட்டுப்பாடுகள் விதித்துவிட்டோம். காதலின் கட்டுப்பாட்டிலல்லவா நாம் இருந்திருக்க வேண்டும்.

அப்பா, அன்று ஒரு கடிதம் எழுதி அனுப்பினால், அது அம்மாவின் கைகளில் சேர மூன்று நாள்களாகுமாம். அதைப் படித்துவிட்டு அடுத்த நாள் அம்மா எழுதும் கடிதம் அப்பாவைச் சென்றடைய மேலும் ஒரு மூன்று நாள்கள். இதற்கிடையில் வார இறுதி, பண்டிகை என விடுமுறை நாள்கள் வந்துவிட்டால், மேலும் இரண்டு மூன்று நாள்கள் ஆகிவிடும். அப்படிப் பார்த்தால் ஒரு வாரத்துக்கு அப்பாவின் கடிதம் ஒன்று, அம்மாவின் கடிதம் ஒன்று எனக் கணக்கிடலாம். எந்த வாரத்தையும் விடாமல் மாறிமாறி இருவரும் எழுதிக்கொண்டாலும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஐம்பது கடிதங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எண்ணிப்பார் ஒரு முறை. ஒரு முக்கியமான விவாதம் நம்மிடையே நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, சில நிமிடங்களுக்குத் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டால், நம் மொபைல் நிறுவனத்தை எப்படியெல்லாம் சபித்திருப்போம்... ஆனால், வாரத்துக்கு ஒரு முறை கடிதம் வாயிலாகப் பேசிக்கொண்ட காதலர்கள் என்றுமே அஞ்சல்காரர்களைச் சபித்ததில்லை. மாறாக, அவர் வருகைக்காவே காத்துக்கொண்டிருப்பார்கள். காதல் அவர்களிடம், கடிதம் மட்டுமே அஞ்சல்காரர்களிடம். நாமோ காதல், உரையாடல், ஊடல், மெளனம், முத்தம் என எல்லாவற்றையும் வாட்ஸ்அப்புக்குள் பூட்டிவைத்துவிட்டு, கைப்பேசியின் பொறுப்பில் அன்பைவிட்டுவிட்டோம்.

ஊடல் எப்படியெல்லாம் நம் காதலில் இடம்பெறுகிறது என்று எப்போதேனும் யோசித்துப்பார்த்திருக்கிறாயா? வாக்குவாதங்களில் ஈடுபட்டு, மெளனம் காத்து, பிறகு சமாதானம் செய்துகொள்வது மட்டும்தான் ஊடல் என்ற மனநிலை நம்மிடையே நிலவுகிறது. தவிர்க்கமுடியாததுதான். நினைத்த நேரங்களிலெல்லாம் சண்டையிட்டு, சில மணித்துளிகளிலேயே சேர்ந்துவிடுவதால்தான் என்னவோ ஊடலின் மகத்துவம் தெரியாதிருக்கிறோம் என்றே நினைக்கிறேன்.

வாரத்துக்கு ஒரு முறை கடிதம் வாயிலாகப் பேசிக்கொண்டவர்களுக்கிடையே ஊடல் எப்படியிருந்திருக்கும். அவசரத்தில் சில வார்த்தைகளை எழுதி அனுப்பிவிட்டு, அதன் பொருளை உணர்ந்து `டெலிட் ஃபார் ஆல்' செய்யும் வாய்ப்பெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஒரு செய்தியைப் படித்துவிட்டு அதை அசைபோட, அதற்கான பதில் எழுத, அவர்களுக்கு வாய்த்த கால அவகாசமே அவர்களுடைய காதலைப் பக்குவப்படுத்தியது. அந்த அவகாசம் நமக்கு இருக்கிறதா என்றால் இல்லைதான். அதேவேளையில் நினைத்தவுடன் பேசிவிடமுடியும் என்ற வசதி நம் காதலை வளரவிடாமல் வைத்திருப்பது கொடிதினும் கொடிதல்லவா?

`நம்ம அம்மா, அப்பாகிட்ட வாட்ஸ்அப் இருந்திருந்தா அவங்களும் இப்படித்தான் காதலிச்சிருப்பாங்க...', `அதுக்காக நானும் கடிதம் எழுதி காதலிக்க முடியுமா...' என்ற எண்ணங்கள் வருவதையும் தடுக்கமுடியாதுதான். ஆனால், இங்கே 'வாட்ஸ்அப்பா, கடிதமா?' என்பதெல்லாம் பேசுபொருளல்ல. நம் காதலின் அடிப்படைக் கட்டமைப்பைப் பற்றித்தான், என் கவலையெல்லாம். நம் சூழல், வாழ்க்கைமுறை, பணியிடத்தின் தன்மைகள் எல்லாம் நம் காதலின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றனவோ என்ற அச்சம்...

இலக்குகளால் பின்னப்பட்ட நம் பணிச்சூழல், வணிகமயமாக்கப்பட்ட வாழ்க்கைமுறைகள் எனப் பல புறக்காரணிகள் நம் காதலின் இயல்பை மாற்றிவிட்டன என்றே நினைக்கிறேன். அவற்றின் பண்புகள்தாம் நம் உறவுமுறையிலும் அவ்வப்போது வெளிப்படுகின்றன. வாரத்துக்கு ஒருமுறையேனும் பார்த்துக்கொள்ள வேண்டும், நாள்தோறும் இரண்டு மணிநேரம் தொலைபேச வேண்டும் என்றெல்லாம் காதலுக்கு இலக்குகள் வைத்துக்கொள்வதெல்லாம் என்ன விதமான கட்டுப்பாடு என்று சில நேரங்களில் எனக்கு விளங்குவதில்லை. இது இப்படியே நீடித்தால், வருங்காலத்தில் 'ஆண்டுக்கு அறுபது முறை சண்டை போட்டுக்கொள்ள வேண்டும்', `மாதத்துக்கு முப்பதுமுறை முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்' என்றெல்லாம் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டாலும், வியப்பதற்கில்லை.

காதலுக்குக் கால அட்டவணை கிடையாது. நாம் திட்டமிட்டு, அது வரவில்லை. நமக்கிடையே காதல் எப்போது நிகழ்ந்ததென்றே இருவருக்கும் தெரியாது. என்றோ நம்மையும் அறியாமல் அது சூழ்ந்துவிட்டது. அதுதானே காதலின் அழகு. நம்மை அறியாமல் நேர்ந்த காதல், நம்மையும் அறியாமல் நம்மைச் சிரிக்கவைக்கும், அழவைக்கும், கோபித்துக்கொள்ளும், பேசவைக்கும், முத்தங்கள் பரிமாறவைக்கும், ஊடலுக்குள்ளாக்கும், கூடலுக்குள்ளாக்கும். காதலின் இயற்கை அத்தகையது. தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் வல்லமையுடையது. அது நம்மையும் சேர்த்தே பார்த்துக்கொள்ளும். காதலை, அதன் போக்கில் விட்டுவிடுவோம். நாம் பின்தொடர்வோம். மீண்டும் சொல்கிறேன் நம் கட்டுப்பாட்டில் காதலை எடுத்துக்கொள்ளவேண்டாம், காதலிடம் நாம் சரணடைந்துவிடுவோம். அப்படித்தான் காதலிக்கமுடியும். அதுவே காதலர்களின் கடப்பாடு.

இதை உனக்குக் கடிதமாக எழுதவேண்டுமென்ற கட்டாயத்திலெல்லாம் நான் எழுதவில்லை. ஆனால், இதைக் கடிதமாக எழுதும்போது என்னிடமிருந்த பொறுமை, படிக்கும் உன்னிடத்திலும் இருக்குமென்பதில் எனக்கு ஐயமில்லை. அந்தப் பொறுமையிலேயே எனக்குப் பதில் எழுது. கடிதமென்றாலும் சரி, வாட்ஸ்அப் என்றாலும் சரி. ஆனால், காலநிலைக்குள் அடக்கப்படாத பதிலாக எழுது. காதல் நிகழ்த்தப்படுவதல்ல, அது தானாக நிகழ்வது.

இப்படிக்கு,

வல்லாதிக்கத்தை வரவேற்கும் பேரன்புடைய காதலன்!