Published:Updated:

மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண் தேவதை’ மாதேஷ்!

மாதேஷ்

"சொந்தக்காரங்க, 'முட்டாள்தனமா முடிவெடுக்காத, உனக்கும் கொரோனா வந்துரும்'னு சொன்னாங்க. என்னோட உசுருக்காகப் பையன் எப்படிப் போனாலும் பரவாயில்லைனு எப்படி இருக்குறது? போற உசுரு புள்ளைக்காகப் போகட்டும்னுதான் துணிஞ்சு முடிவெடுத்தேன்."

Published:Updated:

மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண் தேவதை’ மாதேஷ்!

"சொந்தக்காரங்க, 'முட்டாள்தனமா முடிவெடுக்காத, உனக்கும் கொரோனா வந்துரும்'னு சொன்னாங்க. என்னோட உசுருக்காகப் பையன் எப்படிப் போனாலும் பரவாயில்லைனு எப்படி இருக்குறது? போற உசுரு புள்ளைக்காகப் போகட்டும்னுதான் துணிஞ்சு முடிவெடுத்தேன்."

மாதேஷ்

மொத்த உலகமும் இயக்கத்தை நிறுத்தி, நிம்மதியை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறது. காரணம் கொரோனா. கொரோனாவைவிடக் கொடிய ஒன்றாகக் கொரோனா குறித்த பயம் உலகை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தன் மகனுக்காக 10 நாள்கள் கொரோனா வார்டில் தங்கி, கொரோனா என்ற கொடிய அரக்கனிடமிருந்து மகனின் உயிரை மீட்டெடுத்துள்ளார் ஒரு தந்தை. சென்னை, தண்டையார்பேட்டையில் வசித்து வரும் அந்தத் தந்தையை ஒரு காலை வேளையில் சந்தித்தோம்.

மாதேஷ் குடும்பம்
மாதேஷ் குடும்பம்

வீடு முழுவதும் அமைதி. ஆங்காங்கே சில விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்கள் கலைந்து கிடந்தன. இன்முகத்துடன் வரவேற்கிறார் மாதேஷ்.

"வெளியுலகத்தையும் மனிதர்களையும் பார்த்து முழுசா ஒரு மாசம் ஆகப்போகுது. என் மனைவிக்கும் பையனுக்கும் கொரோனா. சிகிச்சை முடிஞ்சு வந்த பிறகும்கூட, தெருவில் இருக்கவங்க சகஜமா பழக கொஞ்சம் பயந்தாங்க. அடுத்தவங்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம்னு, வீட்டுக்குள்ளயே இருந்துட்டோம். இந்தப் பாழாப்போன கொரோனா எங்களுக்கு எப்படி வந்துச்சுனு தெரியல. ஆனா, என் பொண்டாட்டியும் பிள்ளையும் சாவோடு போராடி மீண்டு வந்துருக்காங்க. இவங்க இன்னைக்கு உசுரோட இருக்கிறதே நிம்மதியா இருக்கு.

கொரோனா வார்டில் எந்தச் சூழ்நிலையிலும் சக மனிதர்களுக்கு உதவக்கூட முடியாது. எழுந்துருச்சு நிக்கவே முடியலைன்னாலும் பாத்ரூம் போறது, குளிக்குறதுனு தனிப்பட்ட வேலைகளை அவங்களேதான் பார்த்துக்கணும். என்னோட பையனால தனிச்சு இயங்க முடியாதுங்கிறதால் நான் ரிஸ்க் எடுத்தேன். எனக்கு கொரோனா இல்லைன்னாலும் அவனைப் பார்த்துக்கிறதுக்காக கொரோனா வார்டில் தங்கி இருந்தேன். இது என்னோட கடமை. கருவறையில சுமக்குற அம்மாவை மட்டுமல்ல, வாழ்க்கை ழுழுக்க தோளில் சுமக்கும் அப்பாவை நம்பியும்தான் குழந்தைகள் பிறக்குறாங்க...” - அறையிலிருந்து கால்களை இழுத்துக்கொண்டே நடந்து வரும் 16 வயது மகனை ஓடிச் சென்று தூக்கி தோளில் சாய்த்துக்கொள்கிறார் மாதேஷ்.

மாதேஷ்
மாதேஷ்
வீட்டுல சிரிப்பு சத்தத்தைக் கேட்டே ஆறு வருஷம் ஆச்சு.
மாதேஷ்

"எங்களுக்கு மூணு பிள்ளைங்க. பெரியவன் சந்தோஷ். ரெண்டாவது பையன் விக்னேஷ். இவரு கடைக்குட்டி. பேரு யுவராஜன். நான் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்துக்கிட்டு இருக்கேன். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சேன். ஆனா, சோதனைக்கு மேல சோதனை வருது. 'ஃபிரெண்ட்ஸ்கூட பட்டினப்பாக்கம் பீச்சுக்கு போறேன்'னு சொல்லிட்டுப் போன எங்க பெரிய பையனை, 15 வயசில் கடலுக்குப் பலிகொடுத்துட்டோம். எங்கெங்கேயோ தேடுனோம். ஒரு வாரம் கழிச்சு ஸ்டான்லி ஆஸ்பத்திரி மார்ச்சுவரியில் பொணமாதான் பார்த்தோம். அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வர்றதுக்குள்ள, கடைசிப் பையனுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. வீட்டுல சிரிப்பு சத்தத்தைக் கேட்டே ஆறு வருஷம் ஆச்சு. எங்க ரெண்டாவது பையன் காலேஜ் போக ஆரம்பிச்சுருக்கான். எங்க குடும்பத்துக்கான சின்ன வெளிச்சம் அவன்தான்" - கண்களில் ததும்பும் கண்ணீரைக் கட்டுப்படுத்தி மகனின் கைகளைப் பற்றிக்கொகொள்கிறார் மாதேஷ்.

மூன்றாவது பையனுக்குத்தான் கொரோனா பாதிப்பு வந்துச்சு. ஆறாவது படிக்கிறவரை ஆரோக்கியமாகத்தான் இருந்தான். திடீர்னு ஒரு நாள் வயிறு வலிக்குதுனு அழுதான். பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி ஊசி போட்டுட்டு வந்தோம். ரெண்டு நாள் கழிச்சு உடம்பு நடுக்கம் கொடுக்க ஆரம்பிச்சுது. எக்மோர் சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டுப் போனோம். நரம்பு பாதிக்கப்பட்டிருக்குறதா சொல்லி, பத்து நாள் சிகிச்சை கொடுத்தாங்க. எல்லாம் சரியா போச்சுனு நம்பிக்கையா வீட்டுக்கு வந்தோம். ஆனா, ஒரே வாரத்தில் திரும்பியும் பிரச்னை வந்துச்சு. காலையில தூங்கி எழுந்திருக்கும்போது தோள்பட்டை ஒரு புறம் ஏத்தியும், ஒரு புறம் கீழ இறங்கியும் வித்தியாசமா இருந்துச்சு. 'கழுத்து வலிக்குது'னு சொன்னான். உடனே ஸ்டான்லி ஹாஸ்ப்பிட்டலுக்குத் தூக்கிட்டுப் போனோம். 'டிஸ்பேனியா பேனல்'ங்கிற நரம்பியல் நோய் வந்துருக்குனு சொன்னாங்க. அவனால கழுத்தை இயல்பா திருப்ப முடியாது. நிமிர்ந்து பார்க்க முடியாது. ரொம்ப நேரம் உட்கார்ந்தும் இருக்க முடியாது. அஞ்சு வருஷமா எழுந்து உட்கார்ந்து சாப்பிடகூட முடியாம போராடிக்கிட்டு இருக்கான்.

காசு, பணம், மரியாதை, கெளரவம்னு வாழ்ந்தவங்க எல்லாரும் எல்லாத்தையும் மறந்து உசுருக்காகப் போராடிக்கிட்டு இருக்காங்க. கொரோனா வார்டிலிருந்து வெளிய வந்தவங்க எல்லாருக்குமே, வாழ்க்கையில் இந்த நிமிஷம் மட்டும்தான் நிலையானதுங்கிறது புரிஞ்சுருக்கும்.
மாதேஷ்

நோயோட தாக்கம் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சு உடம்பு இப்போ 'L ' மாதிரி வளைஞ்சு போயிருக்கு. ஆபரேஷன் பண்ணா சரி பண்ண முடியும்னு சொன்னாங்க. அந்த அளவு வசதியில்லாததால், இப்போதைக்கு மருந்து மாத்திரை மட்டும் வாங்கிக் கொடுத்துக்கிட்டு இருக்கோம். கணக்கு அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தத்துறையில் படிச்சு பெரிய ஆளா வரணும்னு ஆசைப்பட்டான். இப்ப ஒரு இடத்துல முடங்கிக் கெடக்கான். எப்ப பார்த்தாலும், 'படிக்கணும்ப்பா'னு சொல்லிக்கிட்டே இருப்பான். 'ஸ்கூலுக்கு அனுப்பு'னு கெஞ்சுவான். ஒவ்வொரு நிமிஷமும் அவன் சிரமப்படுறதைப் பார்த்து மனசு அவ்வளவு வேதனைப்படுது. இவனைக் குணப்படுத்த உதவிகள் கேட்டு அலைஞ்சுக்கிட்டுதான் இருக்கோம்.

நாங்க சோர்ந்து உட்கார்ந்தா, அவனாலதான் நாங்க கஷ்டப்படுறதா நினைச்சுக்கிட்டு அவனும் அழுகிறான். உடம்புல இருக்க வேதனையோட சேர்த்து, மன அழுத்தத்தையும் அவனுக்கு கொடுக்க கூடாதுனு அவன்கிட்ட நாங்க எந்தக் கஷ்டத்தையும் சொல்றது இல்ல. இந்த அஞ்சு வருஷத்துல வேண்டாத சாமி இல்ல. என் சக்திக்கு மீறி உழைக்கிறேன். ஆனாலும் ஆபரேஷன் பண்ண காசு சேர்க்க முடியல. வீட்டுக்குள்ள ஆடிப்பாடி ஜாலியா இருந்த பையன் ஒரே இடத்துல அடைஞ்சு கிடக்குறதை எந்தத் தகப்பனால் தாங்க முடியும்" - மாதேஷ்க்கு கண்கள் கலங்குகின்றன.

சில நிமிட அமைதிக்குப் பிறகு தளர்வான குரலில் பேச ஆரம்பித்தார்.

"கொரோனா வந்ததிலிருந்து வீட்டில் சாப்பாட்டுக்கே பயங்கர கஷ்டம். அதுவே மனஅழுத்தமாதான் இருந்துச்சு. இந்த நிலைமையில ஜூன் மாசம் என் மனைவிக்கு கொரோனா அறிகுறி இருந்துச்சு. டெஸ்ட் எடுத்தப்போ பாசிட்டிவ்னு வர, சென்னை, டிரேட் சென்டரில் இருக்க கொரோனா வார்டில் சேர்த்திருந்தோம். அந்த நிமிஷமே நிலை குலைஞ்சு போயிட்டேன். இவனை நான் பார்த்துக்கிட்டாலும், அம்மா பக்கத்துல இருந்து பாத்துக்கணும்னு நினைப்பான். மனைவிக்கு கொரோனா வந்ததும், வீட்டிலிருந்த எல்லாருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து தனிமைப்படுத்தி வெச்சுருந்தாங்க. ரிசல்ட்ல இவனுக்கும் கொரோனா பாசிட்டிவ்னு வந்துச்சு. தண்டையார்பேட்டையில் இருக்க கொரோனா வார்டுக்கு கூட்டிக்கிட்டுப் போகணும்னு சொல்லி ஆளுங்க வந்தாங்க.

உடம்பு முடியாத பையனை கொரோனா வார்டுக்கு தனியா அனுப்புறது சாத்தியம் இல்லாதது. தனியா சாப்பிடக்கூட தெரியாத பையனை யார் பார்த்துப்பாங்க? வீட்டிலேயே தனிமைப்படுத்தி வெச்சுக்கிறோம்னு சொன்னேன். ஆனா, மாநகராட்சியிலிருந்து வந்தவங்க சம்மதிக்கல. அதான், `என் உசுரு போனாலும் பரவாயில்லை... பையன் கூடவே இருந்து அவனைப் பார்த்துக்கணும்’னு முடிவு எடுத்தேன். ஆரம்பத்தில் மருத்துவர்கள் கொரோனா வார்டுக்குள்ள என்னை அனுமதிக்க சம்மதிக்கவே இல்ல. 'பாதுகாப்பு இல்லை'னு சொன்னாங்க. தம்பியோட சூழலை சொன்னதும் புரிஞ்சுக்கிட்டு, கொரோனா வார்டில் தங்க அனுமதிச்சாங்க. சொந்தக்காரங்க, 'முட்டாள்தனமா முடிவெடுக்காத, உனக்கும் கொரோனா வந்துரும்'னு சொன்னாங்க. என்னோட உசுருக்காகப் பையன் எப்படிப் போனாலும் பரவாயில்லைனு எப்படி இருக்குறது. போற உசுரு புள்ளைக்காகப் போகட்டும்னுதான் துணிஞ்சு முடிவெடுத்தேன். என் மனைவிகிட்ட சொன்னா ஹாஸ்பிட்டலில் தனியா கஷ்டப்படுவாங்கனு அவங்ககிட்ட சொல்லவே இல்ல.

யுவராஜன்
யுவராஜன்

கொரோனா வார்டிலிருந்த பத்து நாளும், இவனுக்கு சாப்பாடு ஊட்டுறதிலிருந்து டாய்லெட் கூட்டிட்டு போறவரை எல்லாத்தையும் நான்தான் பார்த்துக்கிட்டேன். அந்த 10 நாளும் நரகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு. காசு, பணம், மரியாதை, கெளரவம்னு வாழ்ந்தவங்க எல்லாரும், எல்லாத்தையும் மறந்து போராடிக்கிட்டு இருக்காங்க. கொரோனா வார்டிலிருந்து வெளிய வந்தவங்க எல்லாருக்குமே வாழ்க்கையில் இந்த நிமிஷம் மட்டும்தான் நிலையானதுங்கிறது புரிஞ்சுருக்கும்.

பத்து நாள் கழிச்சு, எனக்கும் யுவராஜ்க்கும் திரும்பி டெஸ்ட் எடுத்துப் பார்த்தாங்க. ரிசல்ட் நெகட்டிவ்னு வந்ததும், வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. என் புள்ளைய நான் காப்பாத்திட்டேன். நாங்க வீட்டுக்கு வரும்போது என் மனைவியும் கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருந்தாங்க. வீட்டுக்கு வந்து ஒரு மாசம் தனிமைப்படுத்தலும் முடிஞ்சுருச்சு. இனி மருத்துவ செலவுக்காக ஓட ஆரம்பிக்கணும். தோளில் மகனைத் தூக்கி, "இந்த உசுரு உனக்கானது சாமி" என முத்தமிடுகிறார் மாதேஷ்.

ஆண் தேவதை!