Published:Updated:

மனுஷின் `பாய் பெஸ்ட்டி' கவிதை... எழுத்தாளர்களின் ரியாக்‌ஷன் என்ன?

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

`அகநானூற்றில் தலைவன், தலைவி களவு வாழ்க்கைக்குத் தூது சென்ற தோழன், தோழியின் மாடர்ன் வெர்ஷன்தான் இன்றைய பெஸ்டீஸ்.'

``நீங்க நினைக்கிற மாதிரி லவ்வெல்லாம் ஒண்ணுமில்ல. அவன் என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட் அவ்ளோதான்...''

`அதென்ன பெஸ்ட் ஃப்ரெண்ட்..? பாய் ஃபிரெண்ட்னா லவ்வர்னுதானே அர்த்தம்...'

`அய்யோ... லவ்வர் வேற, பாய் ஃபிரெண்ட் வேற!'

10 வருடங்களுக்கு முன் பெண்கள் மத்தியில் இதுபோன்ற உரையாடல்கள் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கும். இந்த உறவுக் குழப்பத்தை, லவ்வருக்கும் பாய் ஃபிரெண்டுக்குமான வித்தியாசத்தை `பாய் பெஸ்ட்டி' என்ற ஓர் உறவு குறியீட்டுக்குள் கொண்டு வந்தார்கள் 2K கிட்ஸ். இதற்கு பெண்பாலாய் `கேர்ள் பெஸ்ட்டி'யும் வந்தார்கள்.

Representational Image
Representational Image

`அகநானூற்றில் தலைவன், தலைவி களவு வாழ்க்கைக்குத் தூது சென்ற தோழன், தோழியின் மாடர்ன் வெர்ஷன்தான் இன்றைய பெஸ்டீஸ்' என்று சிலர் மரியாதை சேர்க்க, `லவ்வர்ஸ் நடுவுல தூது போவாங்க; அவங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்னை வந்துட்டா இவங்க லவ்வராயிடுவாங்க' என்று சிலர் கேலியும் செய்தார்கள். எப்படியோ, பெஸ்ட்டி என்கிற வார்த்தையைக் கேட்காமல் ஒரு நாளைக் கடந்துவிட முடியாது என்கிற அளவுக்கு அது நம் உறவு வட்டத்துக்குள் ஒன்றாகிவிட்டது.

சிறந்த பெஸ்ட்டி கிடைக்கப்பெற்றவர்கள் `என் ஃபிரெண்டைபோல யாரு மச்சான்' என்று உற்சாகமாகச் சொல்ல, அதற்கு நேர் எதிரான அனுபவங்களைப் பெற்றவர்கள் `இவனால/இவளால என் வாழ்க்கையே போச்சு' என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம், தனி மனித இயல்புகளைப் பொறுத்த விஷயம்.

Representational Image
Representational Image

கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் `பாய் பெஸ்ட்டி' கவிதைதான் பேசுபொருள். `பாய் பெஸ்டிகளின் கதை' என்கிற பெயரில், இந்த உறவை வர்ணித்து விதமாக அவர் கவிதை ஒன்றை எழுத, அதை ஆதரித்து, எதிர்த்து எனக் கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக எழுத்தாளர்களும் முகநூல் பிரபலங்களுமான சிலர், தங்களின் கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பானு இக்பால்

``மனுஷ் எழுதிய `பாய் பெஸ்ட்டி' கவிதை நீங்கள் நினைப்பதுபோல் பெண்ணிடம் குழைந்து பேசும் சில ஆண்களை பற்றியது அல்ல. பெண்ணிடம் வரம்பு மீறக் காத்திருக்கும் அந்த சில ஆண்களைப் பற்றியதும் அல்ல. சிலர் நினைப்பதுபோல், மனுஷ் தன்னைத் தானே பாய் பெஸ்ட்டியாகப் பாவித்துக்கொண்டு எழுதிய கவிதையும் அல்ல. அந்தக் கவிதை முழுக்க முழுக்க நிஜத்தில் நடமாடும் சில அரிய வகை ஆண்களைப் பற்றியது. அவர்கள் கற்பனைகளில், காத்திருப்புகளில், தங்களுடைய நிகழ்காலம் தங்களால் களவாடப்படுகிறது என்பதை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் தங்களை மாற்றிக்கொள்ள விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாய் பெஸ்ட்டிகள் தன்னுணர்வு பெற்று தன் சரி, தவறுகளை அலசி ஆராய்ந்து, தன் வாழ்க்கையை இனியாவது செம்மைப்படுத்திக்கொள்ள முயலமாட்டார்களா என்ற ஆதங்கம்தான் கவிஞரை இப்படி கவிதை பாட வைத்திருக்கிறது.

பானு இக்பால்
பானு இக்பால்
www.facebook.com/banu.iqbal.9

ஃபேஸ்புக் முழுக்கவும், ஃபேஸ்புக் தாண்டியும் `பாய் பெஸ்ட்டி' கவிதை அதிக விமர்சனத்தைப் பெற்று வருகிறது. ஒரு கவிதையை அல்லது ஒரு கட்டுரையை வாசிக்கும்போதே நாம் முழுமையாகப் புரிந்துகொண்டால், அதைப் பற்றிய விவாதங்கள், அது சென்றடையும் தூரங்கள் மிகக் குறைவாக இருக்கும் என்பது என் கருத்து. அதனால், மனுஷின் `பாய் பெஸ்ட்டி' கவிதை விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவதை நான் வரவேற்கிறேன். விமர்சனங்களின் வழி உண்டாகும் கருத்துகள் தனி மனித மேம்பாட்டுக்கு, சமூக வளர்ச்சிக்கு, ஏன் சமூக மாற்றத்துககுக்கூட வித்தாக அமையும் என்பதில் எனக்கு ஆணித்தரமான நம்பிக்கை உண்டு.''

போகன் சங்கர்

``மனுஷ் அந்தக் கவிதையை இந்தக் கால ஆண்களின் மனநிலை என்று சொல்லியிருக்கிறார். உண்மையில் அவருடைய பாய் பெஸ்ட்டியில் பிளாக் & ஒயிட் கால கதைநாயகன்தான் தெரிகிறார். `ஆண்கள் எல்லாம் மோசமானவர்கள்' என்று ஒரு சில பெண்கள் சொல்வார்கள் இல்லையா? அதனுடைய ஆண் வெர்ஷன்தான் இது. பெண்கள் மோசமானவர்கள், ஆண்களை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள், அவர்கள் நயவஞ்சகிகள், ஆண்கள் பெண்களிடம் நாய்க்குட்டி மாதிரி ஆகிவிட்டார்கள், இந்த மாடர்ன் யுகத்தில் இது இன்னும் அதிகமாகிவிட்டது என்கிற அர்த்தத்தில்தான் அந்தக் கவிதை செல்கிறது. இதுதான் பெஸ்ட்டி, இப்படித்தான் இன்றைய இளைஞர்களின் பெஸ்ட்டி உறவு இருக்கிறது என்று மனுஷ் நினைக்கிறார் என்றால், அவர் இன்றைக்கு இருக்கும் ஆண், பெண் உறவு பற்றியே தெரியாமல் இருக்கிறார் என்றுதான் அர்த்தம். இது பெஸ்ட்டி கிடையாது, இந்தக் கவிதை என்னைப் பொறுத்தவரை வொர்ஸ்ட்டி.

`உங்க லவ்வருக்கு எத்தனை ரோஸ் கொடுக்கணும் தெரியுமா?!' - `ரோஸ் டே' காதல் கணக்குகள்  
#RoseDay

முன்பெல்லாம் தமிழ் சமுதாயத்துப் பெண்களை, `அவர்கள் ஆண்களை அண்ணன் என்று அழைப்பார்கள் அல்லது அத்தான் என்று அழைப்பார்கள். அவர்களுக்கு நண்பர்களே இருப்பதில்லை' என்று குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த நிலை கடந்த 15 வருடங்களில் மெல்ல மெல்ல மாறியிருக்கிறது. அதையும் இப்படி, `நண்பனெல்லாம் காதலர்கள்' என்றால் பெண்கள் என்ன செய்வார்கள்? எல்லா நட்பும் காமம் நோக்கிச் செல்லும் என்று நினைத்தால், அதை `உண்மை' என்று எடுத்துக்கொள்வதா, அல்லது `நீங்கள் நிகழ வேண்டும் என்று ஆசைப்படுகிற உண்மை' என்று எடுத்துக்கொள்வதா என்பதையும் யோசிக்க வேண்டும். இவற்றை தனி மனித இயல்புகள் சார்ந்தவை என்று எடுத்துக்கொண்டாலும், இந்தக் கவிதையைப் பொறுத்தவரை `அவள் பறந்துபோனாளே' என்கிற பழைமை வாடையும் பிற்போக்குத்தனமும்தான் அதிகம் இருக்கிறது.''

விநாயக முருகன்

விநாயக முருகன்
விநாயக முருகன்
www.facebook.com/vinayaga.murugan.7

``சென்ற தலைமுறையினர் இந்தக் கவிதையை கல்ச்சுரல் ஷாக்காகத்தான் பார்ப்பார்கள். 2K கிட்ஸ் என்றாலுமே, பழைமைவாதங்களில் விருப்பம் கொண்டவர்கள் என்றால், அவர்களுக்குமேகூட கல்ச்சுரல் ஷாக் ஏற்பட்டிருக்கும். இந்தக் கவிதை வரிகளைப் பொறுத்தவரை, சமகாலத்தில் இருக்கிற ஓர் உறவுநிலை பற்றி, அதன் பிரச்னையைப் பற்றி மனுஷ் தன்னுடைய கருத்தை, தன்னுடைய கவிதையில் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். இதை நான் எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. இந்தக் கவிதையால் சமூகத்தில் எந்த முன்னேற்றமும் நிகழப்போவதில்லை, சமூகம் அழியப்போவதும் இல்லை."

அடுத்த கட்டுரைக்கு