Published:Updated:

ஆணின் திருமண வயது 18 ஆக்கப்பட்டால்.... ப்ளஸ், மைனஸ் என்னென்ன? - மருத்துவ விளக்கம்

Young adult marriage
Young adult marriage ( pixabay )

ஓர் ஆணுக்கு 18 வயதில் உடலியல் ரீதியாகப் பல மாற்றங்கள் நிகழும். இந்த வயதில் ஆண்கள் உணர்வுபூர்வமாக இருப்பார்கள். எதிர்பாலின ஈர்ப்பு, பாலியல் கவர்ச்சி, இனக்கவர்ச்சியே அவர்களிடம் மேலோங்கி இருக்கும். தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய, பிரச்னைகளை சரிசெய்யக்கூடிய பக்குவம் இருக்காது.

ஆணின் திருமண வயதை 18 ஆகக் குறைக்கலாம் என மத்திய அரசு பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஓர் ஆணுக்கு 18 வயது என்பது துடிப்பான இளமைப் பருவம். பல கனவுகள் இருக்கும். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பும் அதை நோக்கிய பயணமும் தொடங்கும் பருவமும்கூட. அந்தச் சமயத்தில் திருமணம் என்பது அவனுடைய கனவுகளைச் சிதைத்துப்போட்டுவிட வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதுமட்டுமன்றி குடும்பம், மனைவி, குழந்தை எனப் பொறுப்புகளைச் சுமக்கும் அளவுக்குப் பக்குவமும் இருக்காது. இந்த வயதில் திருமணம் எந்த வகையில் சாத்தியம்... இதிலிருக்கும் ப்ளஸ், மைனஸ் என்னென்ன என்பன குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம்.

wedding
wedding
pixabay

மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் பேசினோம்

``இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது நிலையான ஒரு கான்செப்ட்டாக இல்லை. முன்பு இருந்ததுபோல நீடித்த தன்மையுடையதாகவும் இல்லை. அதற்குக் காரணம் இல்லறத்தில் கணவன் - மனைவியின் பொறுப்பு, பங்களிப்பு, புரிந்துணர்வு, பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவை குறைந்துகொண்டே வருகின்றன என்பதுதான். ஒருவருக்கு எந்தளவுக்குப் பக்குவப்பட்ட, முதிர்ச்சியான மனநிலை வருகிறதோ அப்போதுதான் நீடித்த உறவையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

வெளிநாட்டில் எல்லாம் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்கள்; பின் பிரிகிறார்கள். தேவைப்பட்டால் மீண்டும் இணைந்து கொள்கிறார்கள். அங்கே வளரிளம் பருவத்திலேயே இது நடக்கிறது. அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் முடிவைத் தாமதமாகவே எடுக்கிறார்கள். அங்கே உடனடித் திருமணம் என்பது இல்லை. தங்களுடைய ரிலேஷன்ஷிப்பில் இருவருக்குமே புரிந்துணர்வு ஏற்பட்டால் மட்டுமே திருமணத்தை நோக்கி நகர்வார்கள். அவர்களிடம் திருமணம் என்பது ஒரு மேம்பட்ட உணர்வாக இருக்கிறது.

wedding
wedding
pixabay

ஆனால், நம் நாட்டில் ஆணும் பெண்ணும் பழகுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. சமூகம் சார்ந்து பல கோட்பாடுகள், கற்பிதங்கள், நெருக்கடிகள் இருக்கின்றன. திருமணத்துக்கு முன்னர் ஆணும் பெண்ணும் பழகுவதை நம் சமூகம் அனுமதிப்பதில்லை. முதிர்ச்சியான மனநிலையுடன் ஆணும் பெண்ணும் பழகுவது என்பது, பெரும்பாலானவர்களுக்குத் திருமணத்துக்குப் பிறகே சாத்தியமாகிறது.

திருமணத்துக்குப் பின்னரே இருவரும் தங்களுக்கிடையேயான சிக்கல்களை, பிரச்னைகளை முதன்முதலாகச் சந்திக்கின்றனர். என்றாலும், அந்தச் சிக்கல்களையும் பிரச்னைகளையும் தீர்ப்பதற்குப் பெற்றோர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் திருமணம் என்பது நம்மிடம் நீடித்த உறவாக இருந்து வந்திருக்கிறது.

Dr. Sivabalan Elangovan
Dr. Sivabalan Elangovan

தற்போது நம் சமூகத்தில் பெற்றோரின் நேரடிக் கட்டுப்பாடு குறைந்திருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு, பலரும் தனிக் குடித்தனம் சென்றுவிடுகின்றனர். அதேபோல இன்றைய இளைய தலைமுறை பிரச்னைகளைப் பக்குவத்தோடும் முதிர்ச்சியோடும் அணுகுவதில்லை. தோல்வியைத் தாங்கும் பக்குவம்கூட அவர்களிடம் இருப்பதில்லை. கூட்டுக் குடும்ப அமைப்பும் சிதைந்துவிட்டது. இதனால் மூத்தவர்களின் வழிகாட்டுதலும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்தச் சூழலில்தான் தற்போது நம் சமூகம் இருக்கிறது. இந்நிலையில், ஆணின் திருமண வயதை 18 ஆகக் குறைப்பது பல சிக்கல்களையே உருவாக்கும்.

ஓர் ஆணுக்கு 18 வயதில் உடலியல்ரீதியாகப் பல மாற்றங்கள் நிகழும். இந்த வயதில் ஆண்கள் உணர்வுபூர்வமாக இருப்பார்கள். எதிர்பாலின ஈர்ப்பு, பாலியல் கவர்ச்சி, இனக்கவர்ச்சியே அவர்களிடம் மேலோங்கி இருக்கும். தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய, பிரச்னைகளை சரிசெய்யக்கூடிய பக்குவம் இருக்காது. இந்த வயதில் திருமணம் என்பது திருமண முறிவுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகளே அதிகம்.

wedding
wedding
pixabay

ஆகவே, இன்றைய சூழலில் 18 வயதிலேயே திருமணம் என்பது நீடித்த உறவுக்கு ஆபத்தானதாகவே அமையும். மேலும், இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் அவர்களுடைய விருப்பு, வெறுப்பின் அடிப்படையிலேயே செயல்படுகிறார்கள். பிறரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. குடும்ப அமைப்பும் மாறிவிட்டதால் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும்போது, அது சிக்கலானதாகவே இருக்கும்.

இளம் வயது திருமணத்தில் பாசிட்டிவ் அம்சம் ஒன்று இருக்கிறது.

இன்றைய வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம், சூழலியல் பிரச்னைகளால் குழந்தையின்மை என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த காலத்தைவிட இப்போது ஏன் இந்தப் பிரச்னை அதிகரித்திருக்கிறது என்று அலசினால், காலம் கடந்து திருமணம் செய்துகொள்வதும் ஒரு காரணமாக நிற்கிறது. கருவுறுதலுக்கான வாய்ப்புகள் 20 வயதிலிருந்து 25 வயதில்தான் அதிகமாக இருக்கும்.

wedding
wedding
pixabay

ஒரு பெண் 35 வயதைக் கடந்ததும் அவர் கருத்தரித்தலுக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கும். ஓர் ஆணின் விந்தணுக்கள் 30 வயதுக்கு மேல் குறையத்தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, குழந்தையின்மை பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வகையில் மட்டும் வேண்டுமானால், ஆணின் திருமண வயது குறித்த இந்த முடிவு ப்ளஸ் ஆக அமையலாம்'' என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.

பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் பேசினோம்.

“18 வயது என்பது ஓர் ஆணின் கல்லூரிப் பருவம். அவர் அந்த வயதில் படிப்பையே முடித்திருக்க மாட்டார். படிப்பை முடித்துவிட்டு வாழ்க்கையில் ஒரு நிலையான தன்மை வந்த பிறகே திருமணம் என்பது சரியாக இருக்கும்.

Dr. D. Narayana Reddy
Dr. D. Narayana Reddy

ஆகவே, 21 வயது என்பதே திருமணத்துக்குச் சரியானது. மருத்துவ ரீதியாக வேறு எந்தப் பிரச்னையும் இல்லை!” என்கிறார்.

பின் செல்ல