Published:Updated:

மகளுக்குப் பாலூட்டிய தந்தை... வைரலாகும் அப்பா பாசம்!

பசியின் காரணமாகப் படுகோபத்துடன் புருவத்தை உயர்த்தியபடி தன் தந்தையிடம் பால் குடிக்கிறாள் அந்தக் குழந்தை!

மகளுக்குப் பாலூட்டிய தந்தை
மகளுக்குப் பாலூட்டிய தந்தை ( twitter.com/_SJPeace )

தன் குழந்தை அழ ஆரம்பித்தால், அம்மா பாலூட்டியும் தாலாட்டியும் சமாதானம் செய்வார். இதுவே அப்பா என்றால், குழந்தையின் அழுகையை மாற்றுவதற்காக விதவிதமாக அங்க சேஷ்டைகள் செய்தோ, கிச்சுகிச்சு மூட்டியோ சிரிக்க வைக்க முயல்வதைத் தவிர, வேறென்ன செய்ய வேண்டும் என்று அறியாமல் தவித்துப்போவார். அமெரிக்காவில் ஓர் அப்பா தன் குழந்தைக்குப் பாலூட்டி சமாதானம் செய்திருக்கிறார். அவர் பாலூட்டுகிற வீடியோதான் கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

வைரலாகும் அப்பா பாசம்
வைரலாகும் அப்பா பாசம்
twitter.com/_SJPeace

அந்த வீடியோவில், பசியின் காரணமாகப் படுகோபத்துடன் புருவத்தை உயர்த்தியபடி தன் தந்தையிடம் பால் குடிக்கிறாள் அந்தக் குழந்தை. 'அப்பாவிடம் எப்படிங்க' என்கிற கேள்விக்கு, அந்த அப்பாவே தன் வீடியோவில் பதில் சொல்கிறார்.

``பாப்பாவின் அம்மா வெளியே போயிருக்கிறார். கைக்குழந்தையான என் மகளோ பசியில் பாலுக்காக அழுகிறாள். பாட்டிலில் பாலை ஊற்றிக்கொடுத்தால், குடிக்க மறுக்கிறாள். அதனால் நான் ஒரு ஐடியா செய்தேன்'' என்கிற அந்த அப்பா, மகள் பால் குடிப்பதற்காகச் செய்திருக்கிற ஐடியாவைப் பார்த்தால் சிரிப்பும் சந்தோஷமும் ஒன்றாக வருகிறது.

அவருடைய டி-ஷர்ட்டுக்குள் பால் பாட்டிலை நுழைத்து, அது வெளியே தெரிகிறபடி டி-ஷர்ட்டை கட் செய்து, அதன் வழியாக பாட்டிலின் நிப்பிலை தன் மகளின் வாயில் வைத்திருக்கிறார். 'வழக்கமா அம்மாதானே பால் கொடுப்பாங்க; இன்னைக்கு என்ன அப்பா தர்றாரு' என்பதுபோல ஒரு பார்வை பார்த்தபடியே, அந்தக் குட்டியும் பாலைக் குடிக்கிறது.

இந்த அப்பா - மகள் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், 'இவரல்லவோ அப்பா', 'என்னவோர் அன்பான அப்பா', 'உண்மையான அன்பு. வீடியோவை ஷேர் செய்ததற்கு நன்றி' என்று பாராட்டுகளைப் பொழிவதோடு, ரீ-ட்வீட்டும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

தந்தை
தந்தை
witter.com/_SJPeace

4 மில்லியன் வியூஸ், கிட்டத்தட்ட 70,000 ரீ-ட்வீட் என இந்த அழகான மகளும் அன்பான அப்பாவும் வைரலாகி வருகிறார்கள். இது தவிர, சென்ற வருடம் இதே முறையில் வேறொரு அப்பா தன் குழந்தைக்குப் பாலூட்டிய வீடியோ ஒன்றையும் தேடிப்பிடித்து, இரண்டு வீடியோக்களையும் இணைத்து யூடியூபில் வலம்வர விட்டிருக்கிறார்கள் சிலர்.