நாங்கள் ஒரு சிறு நகரத்தில் வசிக்கிறோம். அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பெண். நாங்கள் வசிப்பது என் தாத்தா வீட்டில் என்பதால், அப்பாவின் ஒரே தம்பியான சித்தப்பாவும் எங்களுடன் வசிக்கிறார். நான் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு, உள்ளூரிலேயே பணிபுரிந்துகொண்டிருக்கிறேன்.
என் சித்தப்பாவுக்கு 45 வயதாகிறது. டிகிரி படிக்கவில்லை. 10,000 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலைபார்க்கிறார். தன் செலவுகளை அந்தப் பணத்தில் சமாளித்துக்கொள்வார். அது போக மிஞ்சும் பணத்தை சேமித்துக்கொள்வார். புகை, மது என எந்தப் பழக்கமும் இல்லை.

அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. என் தாத்தா, பாட்டி உயிரோடு இருந்தவரை சித்தப்பாவுக்கு நிறைய பெண் பார்த்தார்கள். 35 வயது வரை அவருக்குப் பெண் எதுவும் அமையவில்லை என்பது உண்மைதான். ஆனால், தாத்தா, பாட்டியின் மறைவுக்குப் பிறகு, என் அப்பாவும் அம்மாவும் சித்தப்பாவுக்குத் திருமணம் செய்துவைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எங்கள் உறவினர்கள் சித்தப்பாவுக்குத் திருமணம் செய்யப் பரிந்துரைக்கும் பெண்களையும், `இந்தக் குடும்பம் சரியில்லை', `ஜாதகம் பொருந்தவில்லை', `அந்த ஊர் நமக்கு சரிவராது' என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தட்டிக்கழிக்க ஆரம்பித்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆரம்பத்தில் எங்கள் உறவினர்கள் சிலர், `தம்பிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா தம்பி சொத்தையும் தானே எடுத்துக்கலாம்னு அவன் கணக்குப் போட்டிருப்பான், அதான் வர்ற பொண்ணுங்களை எல்லாம் தட்டிக் கழிக்குறான்' என்று என் அப்பாவைப் பற்றிச் சொன்னபோது, எனக்கு அவர்கள் மேல் எல்லாம் கோபமாக வந்தது. ஆனால், இந்த ஐந்து வருடங்களில் அவர்கள் சொல்வது உண்மைதான் என்பது எனக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.

நாங்கள் வசிக்கும் வீடு, ஊரில் இருக்கும் ஒரு தோப்பு... இவை இரண்டும்தான் எங்கள் பூர்வீக சொத்து. ஊரில் இருக்கும் தோப்பை விற்று என் திருமணத்தை நடத்தவும், நாங்கள் வசிக்கும் வீட்டை சித்தப்பாவுக்குப் பின் வீட்டின் ஒரே வாரிசான நான் எடுத்துக்கொள்வதும்தான் என் அப்பா, அம்மாவின் பங்காளி துரோகத் திட்டமாக இருக்கிறது. கடைசியில், அவர்கள் செய்யும் இந்தப் பாவத்தின் பங்கனைத்தும் எனக்காகத்தான் என்று நினைக்கும்போது, அந்தக் குற்ற உணர்வு என்னைக் கொல்கிறது.
என் சித்தப்பா மிகவும் நல்லவர். தன் அண்ணன், அண்ணி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். என் மீது கொள்ளை அன்புடன் இருப்பவர். அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை எனும் அளவுக்கு நானும் அவர் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளேன். ஊர், உறவெல்லாம் பேசும் ஒரு விஷயம் அவர் காதுக்குப் போகாமல் இருக்குமா அல்லது அவருக்கும்தான் அப்பா, அம்மாவின் எண்ணம் புரியாமல் இருக்குமா? என்றாலும், `பரவாயில்ல... எங்க அண்ணன் மகள் எனக்கும் மகள்தான்... என் பங்கு சொத்து என் மகளுக்குப் போறதுல உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்னை?' என்று சில உறவினர்களிடம் என் அப்பாவை விட்டுக் கொடுக்காமல் பேசியிருக்கிறார். அந்தளவுக்குப் பாசக்கார தம்பி. அது சித்தப்பாவின் பெருந்தன்மை அல்லது முட்டாள்தனம். ஆனால், என் அப்பா, அம்மா செய்வது பாவம் இல்லையா?!

நான் இது குறித்து என் அப்பா, அம்மாவிடம் பல முறை பேசிப் பார்த்துவிட்டேன், சில முறை சண்டைகூட போட்டிருக்கிறேன். `உன் சித்தப்பாவுக்கு நாங்க எத்தனை பொண்ணு பார்த்திருக்கோம், பார்த்துட்டு இருக்கோம் தெரியுமா? அவன் ஜாதகத்துலேயே கல்யாண அமைப்பு இல்லனு சொல்றாங்க. இருந்தும் முயற்சி பண்ணிட்டுதான் இருக்கோம். அவன்தான் எங்களுக்கு மூத்த புள்ள' என்றெல்லாம் ஊர், உறவிடம் சொல்லும் அதே வார்த்தைகளைத்தான் என்னிடமும் பேசுகிறார்கள்.
என் சித்தப்பாவிடம் பேசினேன். `இறுதிக் காலத்தில் உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு துணை வேண்டும் சித்தப்பா. அப்பா, அம்மாவை நம்பாமல் காதல் திருமணம் அல்லது திருமணத் தகவல் மையம்/மேட்ரிமோனியல் சைட் என நீங்களே உங்களுக்குப் பெண் பாருங்கள். அல்லது நான் பார்க்கிறேன்...' என்று புரியவைக்க முயன்றேன். அவருக்குப் புரியாமல் இல்லை. என்றாலும், `சரி என் விதி இதுதான்னா இப்டியே இருந்துடுறேன். அதுல எனக்குப் பெரிய வருத்தமும் இல்ல. நான் பெத்தாதான் புள்ளையா? நீ என் மகளா இருந்து கடைசி காலத்துல என்னைப் பார்த்துக்க மாட்டியா?' என்று எமோஷனலாகப் பேசுகிறாரே தவிர, தனக்கென ஒரு துணை இருக்க வேண்டியதன் அவசியத்தை என் பெற்றோரிடம் அவர் அழுந்த வெளிப்படுத்த, வலியுறுத்தத் தயங்குகிறார், மறுக்கிறார்.

இந்நிலையில்தான் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். `சித்தப்பாவுக்குக் கல்யாணம் முடிக்காமல் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்' என்று என் பெற்றோரிடம் கூறிவிட்டேன். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. என்றாலும், சின்ன பெண்தானே சமாளித்துவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், நான் என் முடிவில் மிக உறுதியாக இருப்பதை அவர்களிடம் செயலிலும் காட்டினேன். என் சித்தப்பாவும், `நீ பெண் பிள்ளை, நல்ல வரன் வரும்போதே திருமணத்தை முடித்துவிட வேண்டும். பின்னர் நீயும் உன் கணவருமாகச் சேர்ந்துகூட சித்தப்பாவுக்குப் பெண் பாருங்கள், நான் திருமணம் செய்துகொள்கிறேன், என்ன இப்போது..?' என்று என்னை கரைக்கப் பார்க்கிறார். ஆனால், என் உறுதியில் எந்த மாற்றமும் இல்லை.
என் முடிவு சரிதானே?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.