Published:Updated:

`ஆல்பா, உனக்கான அன்பு கிடைத்துவிட்டது!' -இத்தாலியைக் கலங்கவைத்த பாசத் தந்தை

பெற்ற தாயில் ஆரம்பித்து பல பேரின் ஒதுக்கல்களை ஆல்பா சந்தித்துக்கொண்டிருந்தபோது, அவள் பிறந்து வெறும் 13 நாள்கள் மட்டுமே ஆகியிருந்தன.

ஆல்பாவும் அப்பாவும்
ஆல்பாவும் அப்பாவும் ( instagram.com/trapaluca )

இந்த இத்தாலி அப்பாவின் அன்பில் தெய்வங்கள்கூட தோற்றுதான் போகும்போல. அப்படியென்ன சிறப்பானவர் இந்த அப்பா என்பவர்கள் 'லூகா டிராபனீஸ்' (Luca Trapanese) என்ற இவருடைய இன்ஸ்டா பக்கத்தைச் சென்று பாருங்களேன். லூகாவும் அவர் மகள் ஆல்பாவும் கொஞ்சிக் கொண்டிருக்கும் படங்களைப் பார்த்தால், ஆனந்தத்தில் அழவே ஆரம்பித்துவிடுவோம்.

alba and luca
alba and luca
instagram.com/trapaluca

அப்பாவும் மகளும் கொஞ்சிக் கொண்டிருக்கும் அந்தப் படங்களை அழுத்தமாக உற்றுப்பார்த்தால் மட்டுமே, ஆல்பா டவுண் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தை என்பது நமக்குத் தெரியும். அந்தளவுக்கு அந்த ஒன்றரை வயதுக் குழந்தையின் முகம் புகைப்படத்தின் எல்லாக் கோணங்களிலும் சந்தோஷமாக மட்டுமே இருக்கும்.

ஆல்பா டவுண் சிண்ட்ரோம் பிரச்னை உள்ள குழந்தையென்பது தெரிந்ததுமே, அவளைப் பெற்ற அம்மா, `இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம்' என்று ஒதுக்கிவிட்டிருக்கிறார். ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்தில் அடைக்கலமான ஆல்பா, அதன்பிறகு அந்த இல்லத்தில் இருக்கிற குழந்தைகளைத் தத்தெடுக்க வந்த பல பெற்றோர்களால் ஒதுக்கப்பட்டிருக்கிறாள். பெற்ற தாயில் ஆரம்பித்து பல பேரின் ஒதுக்கல்களை ஆல்பா சந்தித்துக்கொண்டிருந்தபோது, அவள் பிறந்து வெறும் 13 நாள்கள் மட்டுமே ஆகியிருந்தன.

alba and luca
alba and luca
instagram.com/trapaluca

இப்போது அப்பா லூகாவின் கதைக்கு வருவோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் நண்பனின் மருத்துவப் போராட்டம், அதில் அவன் தோல்வியடைந்தது, அவனுடைய கடைசி நேரத்து மரண பயம் என எல்லாவற்றிலும் உடனிருந்த ஓர் அற்புதன்தான் லூகா.

40 வயதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிற லூகாவுக்கு, குறைபாடுள்ள ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பதுதான் நீண்ட கால ஆசை. ஆனால், 2017-ம் வருடம் வரைக்கும் இத்தாலியில் சிங்கிள் பேரன்ட்ஸ் குழந்தையைத் தத்தெடுக்க முடியாத சூழ்நிலைதான் நிலவி வந்தது. அதன்பிறகு சட்டமும் அனுமதித்து, லூகாவின் விருப்பப்படியே ஆல்பாவும் கிடைக்க... இதோ, அப்பாவும் மகளும் தங்கள் புகைப்படங்களால இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

alba and luca
alba and luca
instagram.com/trapaluca

`நீ லக்கி ஆல்பா. கடைசியில் உனக்கான அன்பை நீ அடைந்துவிட்டாய்'; 'நீங்கள் எங்களுக்கு முன்மாதிரி லூகா' என்று அப்பாவையும் மகளையும் நெட்டிசன்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் இந்தத் தந்தையின் அன்பில் தெய்வங்கள் தோற்றுப்போகும்தானே...!