Published:Updated:

`வயிற்றிலிருக்கும்போதே என் புகைப்பழக்கத்தை நிறுத்தியவள் நீ!’- மகளுக்கு அப்பாவின் நெகிழ்ச்சிக் கடிதம்

அப்பா
அப்பா

`பெண் குழந்தை’ என்று மருத்துவர் சொன்னதும் வெளியே வந்து வெடித்து அழுதது இனி ஆயுசுக்கும் திரும்பக் கிடைக்காத நொடி!

உன் அப்பாவுக்கு உன் அம்மாவைக் கைப்பிடிப்பதற்கு முன் இருந்தே பெண் குழந்தைகள் மீது அவ்வளவு ப்ரியம். தமிழ்நாடு முழுக்க பயணித்து பெண் குழந்தைகளை மட்டுமே புகைப்படம் எடுத்திருக்கிறேன். என் முகநூல் முதலிலிருந்தே தேவதைகளுக்கானதாகவே இருந்து வந்திருக்கிறது. என் டைம்லைன் முழுவதும் பெண் குழந்தைகளின் புகைப்படம் இருப்பதை நீ எப்போதேனும் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்வாய். தேவதைகளோடு வாழ வேண்டும் என்பதுதான் என் வாழ்நாளுக்கான ஜெபம். நீ என் எதிர்காலத்துக்கான வரம். அப்போது நான் சென்னையிலிருந்தேன். நீ உருவானதை அலைபேசியில் சொன்னபோது உன் அம்மா அழுதிருந்தாள், அதில் நான் நனைந்திருந்தேன். கண்ணம்மா நீ கருவான முதல் நாளே பெயரானவள்.

மகள்
மகள்

அப்பாவாக நான் வளரத் தொடங்கிய காலத்தை என்றாவது உன் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வாய். நீ பூமிக்கு வருவதற்கு முந்தைய பத்து நாள்கள் உன் அம்மாவைப் பார்த்துக் கொண்டது போல இனி என் வாழ்நாளில் அவளைப் பார்த்துக் கொள்வேனா எனத் தெரியாது, அந்தப் பத்து நாள்கள்தான் என் வாழ்வில் இமையா காலம். நீ வருவதற்கு பத்து நாள்களுக்கு முன் வயிற்றில் கை வைத்து சத்தியம் செய்யச் சொன்ன உன் அம்மாவுக்கு நானொரு சத்தியம் செய்து கொடுத்தேன். யார் யாரோ சொல்லியும் நான் விடாத புகைப்பழக்கத்தை வயிற்றில் இருக்கும்போதே விடுவதற்கு நீ காரணமாய் இருந்திருக்கிறாய் என்பதை என்றேனும் உனக்குச் சொல்லுவேன். அதில் அவ்வளவு பெருமை எனக்கு.

கண்ணே கலைமானே பாடல் ஒலிக்கும்போதெல்லாம் நான் உன்னோடு இருந்திருக்கிறேன். உன்னோடு பேசியிருக்கிறேன். கருவில் நீ இருக்கும்போது பாடலின் இசையை மட்டும் ஒலிக்கவிட்டு யேசுதாஸ் போல உன்னையும் உன் அம்மாவையும் தாலாட்டிக் கொண்டிருந்ததை எப்போது படிக்க நேர்ந்தாலும் நீ சிரிப்பாய். மூவராக நாம் எங்கு பயணித்தாலும் கண்ணே கலைமானே பாடலும் நம்மோடு பயணிக்கும். உன் அம்மாவை அழைத்துக்கொண்டு நடைப்பயிற்சி செல்லும்போதெல்லாம் உன்னைப் பற்றி அத்தனை கதைகள் பேசியிருக்கிறோம். உண்மையில் உன்னோடு பேசுவதைவிட உன்னைப்பற்றி பேசுவதில் அவ்வளவு அலாதி உன் அம்மாவுக்கும் எனக்கும்.

மகள்
மகள்

டிசம்பர் மாதம் குளிர்காலம் என்பதைவிட நீ பிறந்த நீலகிரியில் அது உறைபனிக்காலம். மழைத் தூறலின் டிசம்பர் மாத ஓர் இரவு வேளையில் நீ பிறக்க இருந்தாய். பிரசவ அறையிலிருந்து வந்த உன் அம்மாவின் சத்தம் என்னைக் கூனிக் குறுகச் செய்தது. மருத்துவமனையின் வாசலில் சருகாகக் கிடந்தேன். தாத்தா, பாட்டி, என எல்லோருமே ஒரு பதற்றத்தில் இருந்தார்கள். அப்போதும்கூட பின்னணியில் கண்ணே கலைமானே பாடல்தான் ஒலித்துக்கொண்டிருந்தது. திடீரென செவிலியர் ஓடி வந்து என்னைப் பிரசவ அறைக்குள் அழைத்தார். பதறியடித்து ஓடியதெல்லாம் நினைவிலில்லை... என் நரம்புகளில் இருக்கிறது. நிசப்தம் மட்டுமே நிரப்பியிருந்த அறையில் உன் அம்மாவின் சத்தம் என்னை உலுக்கியெடுத்தது. அடுத்த நொடி அழுதுவிடுவேன் எனத்தெரிந்து மருத்துவர் என்னை, ``அழுவதாக இருந்தால் வெளியே போய்விடுங்கள்" என்றார். சிரிப்பைவிட அழுகையை அடக்குவதுதான் ஆகப் பெரிய துயரமே. வந்த அழுகையை அடக்கிக்கொண்டு உன் அம்மாவின் முகம் பிடித்தபடி நின்றிருந்தேன்.

என்ன நடக்கிறதெனத் தெரியாமல் நின்றிருந்த எனக்கு அடுத்த பத்து நிமிடங்கள் என்ன நடந்தது எனத் தெரியாமல் போனது. உன் அம்மா அடக்கி வைத்திருந்த மொத்த வலியையும் உள்ளே இழுத்து, உன்னை பூமிக்குக் கொடுத்தாள். நீ பிறந்திருந்தாய். நீ முதலில் அழுததும் அப்போதும்தான். நான் கடைசியாய் அழுததும் அப்போதுதான். அப்பா பிறந்த பெருமையைவிட, ஆண் என்ற அகந்தை ஒழிந்த இடம் அந்தப் பிரசவ அறை. உன் அம்மா நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு உனக்காகக் காத்திருந்தேன்.

நீ பிறக்கும்வரை பெண் குழந்தைதான் என்றவன், நீ பிறந்த பிறகும் பார்க்காமலே பெண் குழந்தைதான் என்றேன். `பெண் குழந்தை’ என்று மருத்துவர் சொன்னதும் வெளியே வந்து வெடித்து அழுதது, இனி ஆயுசுக்கும் திரும்பக் கிடைக்காத நொடி.

மகள்
மகள்

நீ பிறந்த ஆறாம் நாள் உனக்கு மஞ்சள் காமாலை இருப்பதற்கான அறிகுறி தென்பட நானும் அம்மாவும் உன்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். பரிசோதித்துவிட்டு உறுதி செய்த கணநேரம் மறக்கவே முடியாத நேரம். உன்னைக் கொண்டாட ஓர் ஊரே இருந்தும் உன்னையும் உன் அம்மாவையும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் தனியாக நின்ற இடம் இப்போதும் என்னை பயமுறுத்துகிறது கண்ணம்மா. பிறந்த ஆறு நாள்களேயான உன்னை இன்குபேட்டரில் வைத்திருந்தார்கள். மஞ்சள் காமாலை குறைய வேண்டுமானால் வெளியே எடுக்கவே கூடாதெனச் சொல்லியிருந்தார்கள்.

உனக்கு உடுத்திப் பார்க்க அவ்வளவு உடையிருந்தும் உடையே இல்லாமல் இன்குபேட்டரில் நீ குளிரில் நடுங்கியதை நினைத்துப் பார்த்தால் இப்போதும் எனக்கு உடல் நடுங்குகிறது. நீ யாராக வருவாய் என்கிற எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. எப்போதும் வரப் போவதுமில்லை. டாக்டர், இன்ஜினீயர், பைலட் என உன் எதிர்காலம் குறித்த எந்தக் கனவும் இல்லாமல்தான் நீ வளர்வாய். என்னுடைய கனவெல்லாம் இந்த உலகத்தை நீ சுற்றி வர வேண்டும். உன்னை நானும் என்னை நீயும் புகைப்படம் எடுக்கிற காலத்துக்குள் நுழையும் அந்த ஒரு நொடிக்காகக் காத்திருக்கிறேன்.

பள்ளி செல்லும் வயதுவரை எப்போதும் என்னோடு இருப்பாய். அதற்குள் உன்னைப் பற்றிய என் கனவுகளை நான் நனவாக்கி விட வேண்டும். யானை, மான், குரங்கு, கரடி, புழு, பூச்சி என உனக்கு என்னென்றே தெரியாத உயிர்களை நான்தான் உனக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பது பெருங்கனவு. பேரன்பும் கூட.

உனக்கு அறிமுகம் செய்கிற ஒவ்வோர் உயிரையும் உன்னோடு சேர்த்து நிழல் படங்களாகச் சேர்த்து வைத்திருக்கிறேன். உனக்கே தெரியாமல் உன்னைப் புகைப்படம் எடுத்து வைத்திருப்பதெல்லாம் உன்னைப் பற்றிய கதைகளை மீண்டும் உனக்கே சொல்லத்தான். உலகிலுள்ள அப்பாக்கள் எல்லோரும் ஏன் எப்போதும் மகள் மீதே பாசத்தைப் பொழிகிறார்கள் என்பதற்கான காரணத்தை, நீ பிறந்த பிறகே உணர முடிந்தது. இப்போதெல்லாம் நீ மட்டுமே எனக்கு ஒரு போதையாகிவிட்டதென நினைக்கிறேன்.

``உன் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்வாள் உங்களால பாப்பாவைத் தூங்க வைக்க முடியுமா" என்று. உண்மையில் அதற்காக அவ்வளவு ஏங்கியிருக்கிறேன். அம்மாவின் ஸ்பரிசம் அப்பாவிடம் இல்லையோ என்னவோ உன்னைத் தூங்க வைக்க அவ்வளவு போராடித் தோற்றிருக்கிறேன். ஒன்பது மாதங்கள் கழித்து ஒரு பயணத்தில் காரில் உன்னைத் தூங்க வைத்து, தோளில் அள்ளிப் போட்டுக் கொண்டதை என் வாழ்நாள் சாதனையாக எண்ணிக் கொள்கிறேன்.

மகள்
மகள்

இரவில் என் தூக்கம் கலைந்த பொழுதுகளிளெல்லாம் உன்னைத் தொட்டுப் பார்ப்பது எனக்கு அனிச்சை செயலாகிவிட்டது. `கண்ணே கலைமானே’வில் ஆரம்பித்த உன் தாலாட்டு `கண்ணாணே கண்ணே’வில் வந்து நிற்கிறது.

உன்னைப் பற்றி உன் அம்மா பேசும்போதெல்லாம், தொலை தூரத்தில் இருந்தாலும் சிலிர்த்துப் போகும். `யப்பா மக சிரிக்கிறாப்பா' `ரெண்டு எட்டு எடுத்து வச்சி நடக்குறாப்பா' `அப்பா சொல்றாப்பா' என உன் அம்மா சொல்லும்போதெல்லாம் எனக்குள் இருக்கிற அப்பாவை, தள்ளி இருந்து ரசித்திருக்கிறேன்.

உன் பாதம் தரை தொட்டதிலிருந்து, உன் தாத்தா, பாட்டிகள் யாரும் இப்போதுவரை தரையிலேயே இல்லை. எந்நேரமும் ஏதாவது உன்னோடு பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். நீயும் ஏதோ பேசிக் கொண்டேயிருக்கிறாய். என்னைப் பற்றிக் கனவு கண்டவர்கள் உன்னைப் பற்றி எவ்வளவு கண்டிருப்பார்கள். உன்னோடு சேர்ந்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். என்னை எப்படி வளர்த்திருப்பார்கள் என்கிற காட்சியை, என் அம்மா உன்னைக் கொஞ்சும்போதெல்லாம் காண்கிறேன். அம்மாக்கள் இப்படித்தான் எல்லோருக்கும் அம்மாவாகவே மாறிவிடுகிறார்கள்.

மகள்
மகள்

உலகம் சுற்று. உன் அப்பாவின் ஆகப்பெரிய ஆசையே நீ உலகம் சுற்ற வேண்டுமென்பதுதான். பயணங்கள் மட்டுமே உனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். இவ்வுலகத்தில் உன்னை பயப்படுத்த எவ்வளவோ இருக்கிறது. அதைவிடவும் உன்னை தைரியப்படுத்தவும் ஆறுதல் கொடுத்து அள்ளி அணைக்கவும் எவ்வளவோ இருக்கிறது. மெல்ல நட, ஆழ யோசி, முட்டி மோது. காயம் ஏற்படும், தழும்புகள் தோன்றும், அனுபங்கள் கிடைக்கும். அதில் வாழ்க்கை கைகூடும் கண்ணம்மா!

``என் மகளும் எதிர்காலத்தில் பெண்மைக்கேயான வலிகளைத் தாங்கணுமானு நினைக்கும்போது..!"
- மாரி செல்வராஜ்
அடுத்த கட்டுரைக்கு