Published:Updated:

`எண்பதிலும் ஆசை வரும்!' - டாக்டர் நாராயண ரெட்டியின் ஆய்வு முடிவுகள்

``கடந்த 10 வருடங்களாக 50 வயது முதல் 91 வரையான வயதுகளில் இருப்பவர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டேன்.''

Aged couple
Aged couple

`தம்பதிகளின் வயதுக்கும் செக்ஸுக்கும் சம்பந்தமே இல்லை' - செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டியின் சமீபத்திய இந்த ஆய்வு முடிவைப் படிக்கும்போது, எப்போதோ படித்த கதையொன்று தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்துவிட்டது. அந்தக் கதையில் வருகிற இளம் கணவன், தன் மனைவியிடம், தன் பெற்றோர் இந்த வயதிலும் தாம்பத்ய உறவுகொள்கிறார்கள் என்பதை `இந்த வயசுல இதெல்லாம் தேவையா...' என்று கோபப்படுவான். அந்த மனைவியோ, `என்னை நீங்க இப்போ லவ் பண்ற மாதிரியே வயசானதுக்கப்புறமும் லவ் பண்ணுவீங்களா' என்று கேள்வி கேட்பாள். அதற்கு அந்தக் கணவன், `வயசானாலும் நாம லவ்வபிள் தாத்தா பாட்டியா இருப்போம்' என்பான். இதே நியாயம்தானே உங்கள் பெற்றோருக்கும் என்ற மனைவியின் அடுத்த கேள்விக்கு, அந்தக் கணவனிடம் பதில் இருக்காது. ஆனால், டாக்டர் நாராயண ரெட்டியின் ஆய்வு முடிவு, வயதான தம்பதிகளின் தாம்பத்ய தேவைகளுக்கு மிகச் சரியான தீர்வைச் சொல்லியிருக்கிறது. அவரிடம் பேசினோம்.

தாம்பத்ய உறவுகொள்கிற அளவுக்கு உங்கள் வீட்டு அம்மாவும் அப்பாவும் ஆரோக்கியமாக இருக்கிறபட்சத்தில், `இந்த வயசுல இது எதுக்கு' என்று கேட்பதற்கு நீங்கள் யார்?''
செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி

``நான் பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்ததில் இருந்தே இந்த ஆய்வு தொடர்பாக இயங்கிக்கொண்டே இருக்கிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், 2005 முதல் 2015 வரையான 10 வருடங்களும் 50 வயது முதல் 91 வரையான வயதுகளில் இருப்பவர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டேன். இந்த வயதுகளில் தாம்பத்ய உறவுதொடர்பான பிரச்னைகளுடன் என்னைச் சந்திக்க வருபவர்களிடம், இதற்கு முன் வேறு டாக்டர்களைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்பேன். அவர்கள் சிலருடைய பெயர்களைச் சொல்லிவிட்டு, `அவங்க எல்லாம் இந்த வயசுல உடம்புல இருக்கிற சர்க்கரையை செக் பண்ணுங்க; உப்பை செக் பண்ணுங்க. செக்ஸுக்கெல்லாம் என்ன அவசியம்'னு கேட்கறாங்க டாக்டர்' என்பார்கள்.

வயதானால் செக்ஸ் தேவையில்லை என்கிற நம்முடைய சமுதாயக் கண்ணோட்டம் இன்னமும் மாறவேயில்லை.
Aged couple
Aged couple

ஒரு பெரிய பணக்காரர். கடல் மாதிரி வீடு என்பது அவருடைய வீட்டுக்குத்தான் பொருந்தும். அவர் மகனுக்குத் திருமணம் முடிந்து பேரக்குழந்தை பிறந்து, கொஞ்சம் பெரியவளாக வளர்ந்ததும், பாட்டியுடன் படுக்க வைத்திருக்கிறார்கள். வேறு வழியில்லாத அந்தப் பணக்காரர் இன்னோர் அறையில் படுத்து உறங்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால், குழந்தை உறங்கிய பிறகு தாம்பத்ய உறவைத் தொடர்ந்திருக்கிறார்கள். ஒரு நாள், வழக்கம்போல பேத்தி உறங்கிய பிறகு கணவர் அறையை நோக்கிச் சென்ற அந்தப் பாட்டி கால் இடறி கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு எழுந்த மகனும் மருமகளும் விஷயத்தைப் புரிந்துகொண்டு, `இந்த வயசுல இதெல்லாம் தேவையா' என்று திட்டியிருக்கிறார்கள்.

வயதானால் செக்ஸ் தேவையில்லை என்கிற நம்முடைய சமுதாயக் கண்ணோட்டம் இன்னமும் மாறவேயில்லை. இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்தான். தாம்பத்ய உறவுகொள்கிற அளவுக்கு உங்கள் வீட்டு அம்மாவும் அப்பாவும் ஆரோக்கியமாக இருக்கிறபட்சத்தில், `இந்த வயசுல இது எதுக்கு' என்று கேட்பதற்கு நீங்கள் யார்? இந்த விஷயம் ரொம்ப நாளாகவே என் மனதுக்குள் இருந்துவந்தது. ஆனால், எதையும் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டுமில்லையா?

Aged couple
Aged couple

அதனால்தான், இதை ஆராய்ச்சியாகச் செய்ய ஆரம்பித்தேன். என் ஆய்வின் முடிவின்படி, 50 முதல் 59 வயது வரை இருப்பவர்கள் மாதத்துக்கு 10 முறையாவது உறவு வைத்துக்கொள்கிறார்கள். 50 வயதாகிவிட்டாலே, அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிற கருத்தில் உண்மையில்லை'' என்றவர் தன் ஆய்வுக்காக பத்து முதல் பதினைந்தாயிரம் பேரிடமாவது பேசியிருப்பேன் என்கிறார்.

``அத்தனை பேரிடம் பேசியிருந்தாலும் முழுக்க முழுக்க வெளிப்படையாகப் பேசியவர்கள் வெறும் 2017 பேர்தான். மற்றவர்கள் எல்லாம் `இந்தக் கேள்வி எதுக்கு டாக்டர்'; `இந்தக் கேள்வி வேண்டாமே டாக்டர்' என்று அட்லீஸ்ட் ஒரு கேள்வியையாவது தவிர்த்துவிட்டார்கள். ஆய்வுக்கான என் கேள்விகளை ஆன்லைனில் கேட்டிருந்தால் ஒரு லட்சம், இரண்டு லட்சம் பேர்கூட பதில் சொல்லியிருப்பார்கள். ஆனால், அவற்றில் எந்த அளவுக்கு உண்மையிருக்கும் என்பது தெரியவில்லை. தவிர, நேருக்கு நேராகப் பேசி செய்ய வேண்டிய என் ஆய்வுக்கு அந்த முறை சரிவராது என்பதால்தான், அதை நான் செய்யவில்லை'' என்றவர், திருமணம் தாண்டிய உறவு குறித்தான தன் ஆய்வு பற்றியும் சொன்னார்.

Doctor Narayana Reddy
Doctor Narayana Reddy
facebook.com

``ஆண்களில் 30 சதவிகிதம் பேர், பெண்களில் 17 சதவிகிதம் பேர் திருமணம் தாண்டிய உறவில் இருக்கிறார்கள். நான் 1982-ல் பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தபோது இந்த மாதிரி உறவுகளை `அய்யய்யோ... பெரிய தப்பாச்சே' என்ற மனப்பான்மையில் சமூகம் இருந்தது. சில வருடங்களில் `அது பெரிய தப்பொன்றும் இல்ல... ஆனா, நான் செய்ய மாட்டேன்' என்றார்கள். சில வருடங்களுக்கு முன்னிருந்து `எல்லாரும் செய்றாங்க. நானும் செஞ்சா தப்பென்ன' என்றார்கள். இப்போது 'நானும் செய்வேன்' என்ற நிலையில் வந்து நின்றிருக்கிறது.

ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். 15 வருடங்களுக்கு முன்னால், அந்தத் தம்பதியை முதல் தடவையாகச் சந்தித்தேன். அந்தக் கணவருக்கு விந்து முந்துதல் பிரச்னை இருந்தது. அந்தக் காலத்தில் இதற்கு மருந்து, மாத்திரையெல்லாம் கிடையாது. செக்ஸ் தெரபிதான் ஒரே வழி. இரண்டு சிட்டிங் சேர்ந்து வந்தவர்கள், அதன்பிறகு மனைவி மட்டுமே வந்தார். காரணம் கேட்டதற்கு, `கணவருக்கு இதில் இன்ட்ரஸ்ட் இல்ல டாக்டர்' என்றார். `அவரில்லாம ட்ரீட்மென்ட் தர முடியாதும்மா' என்று நான் சொன்னவுடன், அந்தப் பெண்மணி ட்ரீட்மென்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார். அதே பெண்மணியை சில வருடங்களுக்கு முன்னால் மறுபடியும் சந்தித்தேன், அவருடைய பாய் ஃப்ரெண்டுடன். இந்தப் பெண்மணிக்கு வந்ததுபோன்ற சூழ்நிலையில், திருமணம்தாண்டிய உறவைத் தப்பென்று எப்படி சொல்ல முடியும் ?

50 வயதாகிவிட்டாலே, அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிற கருத்தில் உண்மையில்லை!

தனக்கான செக்ஸ் கிடைக்காதபட்சத்தில் டிப்ரஷனில் விழுந்துவிடுவார்கள். இதையும் தாண்டி ஏமாற்றத்தில் (frustration) விழுந்து விடுபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள்தான் தெரிந்தவர்களின் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்பவர்கள். எல்லோரும் இப்படிச் செய்வார்கள் என்றில்லை. அப்படி நடந்துகொள்பவர்களின் பிரச்னை இதுவும்தான் என்கிறேன். செக்ஸ் உணர்வுகளுக்கு வடிகால் வேண்டும். அது எத்தனை வயதானாலும்...'' - அழுத்தமாகச் சொல்லி முடித்தார் செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

Vikatan