Published:Updated:

`தவதி ஸ்கூலுக்குப் போகணும்னு அடம் பிடிக்கிறா!' - ஒரு தாயின் ஆனந்தக் கண்ணீர்

தவதி அம்மாவுடன்
தவதி அம்மாவுடன்

`` `இத்தனை நாள் லீவு போட்டா எனக்கு நிறைய ஹோம்வொர்க் கொடுப்பாங்க'ன்னு சொல்றா. கேட்கவே சந்தோஷமா இருக்கு.''

``என் மகள் தவதியின் பிறந்த நாளுக்குள் உயிர் பிழைக்க உதவி தேவை' - இந்த வருடம் மார்ச் மாதம் தவதியின் அம்மா தீபிகா கண்ணீருடன் இந்த வேண்டுகோளை நம் விகடன் வாசகர்களிடம் வைத்தார். மூளையில் கட்டியுடன் நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி சைல்டு டிரஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது தவதிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

தவதி
தவதி

ஆபரேஷன், ஐசியூ, மருந்து, மாத்திரை என சிங்கிள் பேரன்ட்டாக தவதியின் அம்மா போராடிக்கொண்டிருக்க, விகடன் வாசகர்களும், விகடன் நிறுவனமும் ஜி.ஆர்.டி.யும் இணைந்து நடத்தி வருகிற 'அறம் செய விரும்பு' புராஜெக்ட்டும் இணைந்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார்கள்.

இது நடந்து ஒரு மாதம் கழித்து, தவதியின் அம்மா தீபிகாவைத் தொடர்பு கொண்டபோது, ``தவதிக்கு ரேடியேஷன் சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது. என்னை அம்மா என்று கூப்பிட ஆரம்பித்திருக்கிறாள். என் மகளைக் காப்பாற்ற உதவிசெய்த அத்தனை பேருக்கும் நன்றி'' என்று உருகியிருந்தார். குழாய் மூலம் உணவு எடுத்துக்கொண்டிருந்த சிறுமி தவதி தற்போது எப்படியிருக்கிறார் என்று அறிந்துகொள்ள மீண்டும் தீபிகாவைத் தொடர்புகொண்டோம்.

தவதி
தவதி

``பாப்பாவுக்கு ட்ரீட்மென்ட் முடிஞ்சிடுச்சு. அவளா சாப்பிட ஆரம்பிச்சுட்டா. இப்போதைக்கு என்னோட பெரிய நிம்மதியே இதுதான். ஆனா, பாப்பாவோட ரெண்டு கண்களோட கருவிழிகளும் மூக்குகிட்டே வந்து நிக்குது. அவளால கண்களை மேலே, கீழே அசைக்க முடியுதே தவிர்த்து பக்கவாட்டுல அசைக்க முடியலை. அதுக்குச் சின்னதா ஒரு ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லியிருக்காங்க. அதை செஞ்சுட்டா தவதி பழையபடியே ஆரோக்கியமாகிடுவா. 'ஸ்கூலுக்குப் போகணும்'னு அடம்பிடிக்கிறா.

'இத்தனை நாள் லீவு போட்டா எனக்கு நிறைய ஹோம்வொர்க் கொடுப்பாங்க'ன்னு சொல்றா. கேட்கவே சந்தோஷமா இருக்கு. ஆனா, அவளை வெளியிடங்களுக்கு அழைச்சிட்டுப் போனப்போ சில குழந்தைங்க பயந்துட்டாங்க. அதனாலதான், மறுபடியும் ஸ்கூலுக்கு அனுப்ப யோசனையா இருக்கு.

தவதி தன் தங்கையுடன்
தவதி தன் தங்கையுடன்

தவிர, நானும் பழையபடி வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கேன். ஜாயின் பண்ண உடனே லீவு கேட்க முடியாது. பாப்பா ட்ரீட்மென்ட்டுக்கும் பணம் சேர்க்கணும். அவளும் இன்னும் கொஞ்சம் ஹெல்த்தியாகணும். எல்லாம் சரியானதும் அடுத்த வருஷம்தான் தவதியை மறுபடியும் ஸ்கூலுக்கு அனுப்பணும். அதுவரைக்கும் அவ தங்கச்சிப் பாப்பாவோட நிம்மதியா விளையாடிட்டு இருக்கட்டும்'' - தவதியின் அம்மாவின் குரலில் நிம்மதி தெரிகிறது. அது அவருடைய வாழ்க்கையிலும் பற்றிப் படரட்டும்.

அடுத்த கட்டுரைக்கு