Published:Updated:

பெருங்காதலின் தூது, அன்பின் மன்றாட்டு - இரு கடிதங்களின் கதை! #ValentineDay

love letter
love letter

`காற்றுவெளியில் உரையாடத்துடிக்கும் இரு உயிர்களுக்கிடையில் பறந்து திரிந்திருக்கிறேன் தாகங்கொண்ட பறவையாய்!’

மடிந்து கசங்கி பழுப்பேறிப்போய்விட்ட மடலுக்கு...

கடிதங்கள், நிர்வாண சொற்கள் புணருமிடம். கடிதங்கள், காலத்தில் ஏதோவொரு கண்ணியின் உறைபடம். கடிதங்கள், ஆழ்கடலில் தேங்கிப்போய்விட்ட உடலுக்குக் கிடைத்த ஒருபிடி காற்று. கடிதங்கள், இறுகிப்போன கல்லறை மேல் வீழ்ந்து நெகிழச்செய்யும் மெல்லிய இதழ். கடிதங்கள், போரின்பால் பசிக்கும் உண்மைநிலை. கடிதங்கள் தணலில் வாடும் இரும்பைச் செதுக்கும் கரியினாலான கல். நீயும் நானும் இவை யாவும்!

love letter
love letter

பேரலைக் காதலின் போக்கில் உருளும் சரளைகளாய் வார்த்தைகள் என்னின்றும் வந்து விழுந்திருக்கின்றன. காற்றுவெளியில் உரையாடத்துடிக்கும் இரு உயிர்களுக்கிடையில் பறந்து திரிந்திருக்கிறேன் தாகங்கொண்ட பறவையாய்! உருவம் கரையும் நிழலானபின், விஞ்சி நின்ற பெயரை மட்டும் மடியில் அணைத்தபடி கூடடைந்திருக்கிறேன் தாய்ப் பட்சியாய்! பிரிவின் கனம் துடிக்கும் தமனிகளின் வெப்பத்தை அப்படியே கடத்தியிருக்கிறேன் என்னைத் தாங்கிய நகக்கணுக்களின் வழியே! பேச்சற்றுப்போன மெளனப்பெருவெளியின் சூன்யத்தைப் படபடத்து, பேரிசையாய் மீட்டெடுத்திருக்கிறேன் பெருங்காதலின் மூலம்.

உணர்வுகளைச் சுமந்து வெடித்திறக்கி வெளிவந்து, மீண்டும் உணர்வுவயப்படும் மனித வாழ்க்கையே நமக்கும் வாய்த்திருக்கிறது. முன்னொரு காலத்தில், மழலையைப் போல கையில் தவழ்ந்து, இப்போது முதுமையைப் போல பார்ப்பவற்று தரையில் வீழ்ந்துகிடக்கும் நானே அதற்கு சாட்சி. ஆகப்பெரும் பாறை மெள்ள இளகி சருகாய்த் தடம்புரள்வதைப் போல... விழிகளில் வானம் நிறைத்த காற்றாடி துளையிட்டு வண்ணத் தாளாய் சிக்குண்டுகிடப்பதைப் போல... பகலில் வியப்பைப் பரிசளிக்கும் மாமலை இருளில் வெற்றுக்கோடாய் நெளிவதைப் போல... படையலிட இப்போது ஆளின்றி மக்கிப்போன துண்டுகளை பசி வழியக் காணும் சிறுதெய்வத்தைப்போல... மெள்ளப் பரவி வேட்கை கொண்டாடி, முற்றிலுமாய் வடிந்து தொலையும் காமத்தைப் போல மெதுவாய் நிகழ்ந்தது இம்மாற்றம்.

Love letter
Love letter

நித்தமும் தொடர்ந்த இவ்விளையாட்டின் கடைசிப் புள்ளியில் வெளிர்ந்து எஞ்சியிருக்கிறேன் நான். ஏனைய உயிர்களுக்கிணையாய் காதலைச் சுமந்து, காதல்சூழ் வெளியில் திளைத்த நமக்கு, தனிமை மட்டுமே அந்திமப் புகலிடமானதன் விடையறியவே இவ்விறுதி மடல். கடந்த நூற்றாண்டின் ஏதோ ஒரு நாளில், வெவ்வேறு பெயர்களைத் தாங்கியபடி சந்தித்த நமக்குள் சில தசமவிநாடிகளே நிலவிய காதலுக்கும் கொண்ட உறவுக்கும் சாட்சியாய் இது இருக்கக்கூடும்.

இப்படிக்கு,

காதலின் வெளிறிய நிறம் தாங்கிய கடிதம்.

காதலின் வெளிறிய நிறம் தாங்கிய கடிதத்திற்கு...

கடிதங்கள், கட்டுகளை உடைக்கும் பெருமழை. கடிதங்கள், புற்களின் வழி நிலம்பாயும் பனி. கடிதங்கள், பழகிய இருளினூடே தென்படும் சித்திரங்கள். கடிதங்கள், தாபதம் குலைக்கும் உதிரவெம்மை. கடிதங்கள், கோடையின் மத்தியில் கானுயிர் சென்றடையும் கடைசி நீர் ஊற்று. கடிதங்கள், தவம் நிகழ்த்தி புத்தன் கண்டடைந்த தகாதகர் நிலை. இவை யாவும், நீயும் நானும்!

love letter
love letter

ஊடல் கொண்டாடும் முன்றிலில், நிலவுக்கீற்றாய் ஒளிபரப்பியிருக்கிறேன். கண்டங்களும் கோட்பாடுகளும் எல்லை வகுத்திடாத வெளியில் சிறகுபரப்பிய காகிதப்பருந்தாய் தூது சென்றிருக்கிறேன். வரலாறு நெடுகிலும் பல்லாயிரம் உயிர்களைச் செலுத்திய பிழை புவிசையாய் இருந்திருக்கிறேன். ஓடுடைத்து வெளியேறும் சின்னஞ்சிறு குஞ்சின் உட்புகுந்து ஊட்டியிருக்கிறேன் முதல்வளியை. சகலமும் பொய்த்துப்போன வெறுமைப் பரப்பில் உழலும் உளத்திற்கு விளங்கியிருக்கிறேன் இருத்தலின் பிடிப்பாய்!

மனித வாழ்க்கையே நமக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. தீண்டல் நிகழும் நொடியிலேயே எழுதும் உடலின் ஒருபகுதியாகிறோம். ஆண்டுகள் பல கழிந்தபின்னும் என்னைத் தேடியெடுத்து மூப்பின் விளைவால் கண்களைச் சுருக்கியபடி படிக்கும் முகத்தை இன்றும்கூட பார்க்கிறேன். அவ்விழி தொட்டிறங்கிய துளி அழித்த வார்த்தைகள் இனி, காலத்திற்கும் நான் மட்டுமே அறிந்த ரகசியம். அப்போது, நடுங்கும் விரல்களுக்கு மூப்பு காரணமல்ல! என்றோ நைந்து உதிர்ந்துபோன என்னின் ஒருபகுதியைப் பதற்றமாய் மீண்டும் உருப்பெறச்செய்த எச்சிலின் ஈரம் இன்னமும் மிச்சமிருக்கிறது. என்னையறியா இத்தலைமுறையின் முன் கடந்த காலப் புதையலாய் விரிபடும்போது நாணம் நிறைக்கிறது. தொடுதல் நிகழாப் பொழுதுகளில் தனிமை சூழ்கிறதுதான். பாலையில் ஒற்றையாய் பரப்பி நிற்கும் மரம் சிலருக்கு தனிமையின் குறியீடு. சிலருக்கு வாழ்தலின் விதை.

Love letter
Love letter

குறையொன்றுமில்லை. சுற்றிலும் படர்ந்திருக்கும் காதலே தன்வழி கடத்தும்... தனக்கென பெருங்காதல் வாய்க்கப்பெறாத மாந்தர்களின் உருவகமே நீயும் நானும்! அடித்து வீழச்செய்யும் காற்றிலோ, சட்டெனப் பற்றிக்கொள்ளும் பொறியிலோ, துறுதுறுப்பான குழந்தையின் பிசுபிசுத்த கையிலோ இருக்கிறது நமக்கான முடிவுரை. அதுவரை, அதன்பின்னும்கூட காதலின் தடங்களாய் எஞ்சியிருப்போம் நீயும் நானும், இதுவரை எழுதப்பட்ட எல்லா மடல்களும்! காதலின் வாழ்த்துகள்!

இப்படிக்கு,

மடிந்து கசங்கிப் பழுப்பேறிப்போய்விட்ட மடல்.

அடுத்த கட்டுரைக்கு