Published:Updated:

தெர்மல் ஸ்கிரீனிங், விருந்தினர் மாஸ்க்கில் மணமக்கள் பெயர்... மாறி வரும் திருமண டிரெண்ட்!

Wedding
Wedding

''டைனிங் ஹாலில் தள்ளித் தள்ளி இருக்கைகளைப் போட்டிருந்தாலும் உறவினர்கள் ஒன்று சேரும்போது அருகருகே உட்காரத்தான் ஆசைப்படுவார்கள். எனவே...''

பெரிய மண்டபம், மண்டபம் நிறைய உறவினர்கள், சாப்பிடுவதற்காக டைனிங் ஹாலில் வரிசையில் நிற்கும் விருந்தினர்கள், ரிசப்ஷனில் மணமக்களுக்குப் பரிசு கொடுப்பதற்கு அங்கும் ஒரு நீண்ட க்யூ... இப்படித்தான் நம் வீட்டுக் கல்யாணங்கள் கட்டுக்கடங்கா கூட்டத்துடன் ஆரவாரமாக நடந்துகொண்டிருந்தன. எல்லாமே கொரோனாவுக்கு முன்.

Wedding trend
Wedding trend
Representational image

இப்போது, ஒரு கல்யாணத்துக்கு 50 பேரை மட்டுமே அழைக்க வேண்டும் என்பதுதான் நிலைமை. பலரும் இதனால் தங்கள் வீடுகளிலேயே எளிய முறையில் பிள்ளைகளுக்குத் திருமணத்தை நடத்திவருகிறார்கள். கிராமப்புறங்களில் குலதெய்வக் கோயில்களில் சிம்பிளாகத் திருமணத்தை முடித்துவருகிறார்கள் சிலர். நம் வீட்டுத் திருமணங்களில் மேலே சொன்ன மாற்றங்கள் மட்டுமல்ல, இன்னும் சில மாற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, மண்டபத்துக்குள் வருபவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று செக் செய்கிற தெர்மல் ஸ்கிரீனிங், பன்னீர் தெளிப்பதற்குப் பதிலாக கைகளுக்கு சானிட்டைசர் தருவது, நோ கற்கண்டு என்று கவனமாக இருக்கிறார்கள். இன்னும் என்னென்ன மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று வெடிங் பிளானர் சுப்ரியாவிடம் கேட்டோம்.

"மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் நம்மூரில், குறிப்பாக என்னிடம் வருகிற கஸ்டமர்கள் 'திருமணத்துக்கு 50 - 100 பேருதான் வருவாங்க. சாப்பாடு செலவு மிச்சம். அதனால மண்டப அலங்காரம், ரிட்டர்ன் கிஃப்டெல்லாம் ஓரளவுக்கு கிராண்டாவே பண்ணுங்க'னு சொல்றாங்க.

சில குடும்பங்களில் மாஸ்க்கில் மணமகன், மணமகள் பெயரை அச்சடித்துத் தரச் சொல்கிறார்கள்.''
வெடிங் பிளானர் சுப்ரியா
மோதிர விரலில் ஏன் மோதிரம் போடுறாங்க? - திருமண வைபோகமும் விடை கிடைத்த கேள்விகளும் #MyVikatan

மண்டப அலங்காரத்துக்கு செயற்கைப் பூக்களை வைத்து அலங்காரம் செய்தால் கண்களுக்கு இனிமையாக இருக்காது. மேலும், பூ வியாபாரிகள், மலர் அலங்காரம் செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, நாங்கள் இயற்கை பூக்களை வைத்துதான் அலங்காரம் செய்துகொண்டிருக்கிறோம். ஆட்களின் எண்ணிக்கையைக் குறைத்து, சமூக இடைவெளி விட்டு அலங்காரம் செய்யச் சொல்லியிருக்கிறேன்.

டைனிங் ஹாலில் தள்ளித் தள்ளி இருக்கைகளைப் போட்டிருந்தாலும் உறவினர்கள் ஒன்று சேரும்போது அருகருகே உட்காரத்தான் ஆசைப்படுவார்கள். எனவே, கல்யாண விருந்தை பேக் செய்து விருந்தினர்களுக்குக் கொடுத்து அனுப்பச் சொல்கிறார்கள். முகூர்த்தத்துக்குக் காலையில் வருபவர்களுக்கு டிபனும் மதியம்வரை இருப்பவர்களுக்கு சாப்பாடும் கொடுத்துவிடுகிறோம்.

வெடிங் பிளானர் சுப்ரியா
வெடிங் பிளானர் சுப்ரியா

ஈவென்ட் மேனேஜ்மென்ட் சார்பாக மண்டப வாசலில் நிற்கிற பெண்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருப்பார்கள். அனைவரும் கை வைப்பார்கள் என்பதால் கற்கண்டும் சந்தனமும் வைப்பதில்லை. ரோஜாப் பூக்களைக்கூட கிளவுஸ் அணிந்த கைகளால்தான் ரிசப்ஷனில் நிற்கிற பெண்கள் தருகிறார்கள்.

வெடிங் பேக்கேஜில் மாஸ்க், சானிட்டைசரும் அடக்கம். திருமணத்துக்கு வருபவர்கள் யாராவது மாஸ்க் அணியவில்லை என்றால் நாங்களே மாஸ்க் தருவோம். சானிட்டைசரை கைகளில் அப்ளை செய்வதைக் கட்டாயம் என்று வலியுறுத்துவோம். சில குடும்பங்களில் மாஸ்க்கில் மணமகன், மணமகள் பெயரை அச்சடித்துத் தரச் சொல்கிறார்கள். அதையும் செய்து தருகிறோம்.

Wedding Rituals
Wedding Rituals
Pixabay
ஸ்வீட் ஃபேமிலி முதல் ஜாய்ன்ட் ஃபேமிலிவரை... வாசகர்களின் `குடும்ப தின' பகிர்வு! #VikatanAlbum

மணமக்களிடையே தனிமனித இடைவெளி தேவை என்று இதுவரை மணமக்களின் குடும்பத்தினர் கேட்கவில்லை என்பதால், இருவருக்கும் பொதுவாக ஒரு சோபாவைத்தான் வைக்கிறோம். கொரோனா தொற்று அதிகரிக்க அதிகரிக்க இந்த மாற்றங்கள் இன்னுமே கூடுதலாகும். அதையும் நாங்கள் யோசிக்கத்தான் வேண்டும்" என்று சிரிக்கிறார் சுப்ரியா.

அடுத்த கட்டுரைக்கு