இரண்டு வருடங்களுக்கு முன் எனக்குத் திருமணம் முடிந்தது. பெற்றோர் பார்த்து நடத்திவைத்த திருமணம். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கணவர் சொந்தமாகத் தொழில் செய்கிறார். மிகுந்த ஆணாதிக்க மனோபாவம் மிக்கவர். சுதந்திரமாக வளர்ந்த, வாழ ஆசைப்பட்ட என் சிறகுகளின் இறகுகள் பலவற்றை இப்போது உதிர்த்து, அவர் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மனைவியாக வாழ்ந்து வருகிறேன்.
என் கணவரிடம் எனக்குள்ள பிரச்னை, அவரது இரட்டை வேடம். `நான் கெட்டவன்தான்...' என்று தன்னை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்திக்கொள்ளும் கெட்டவனைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், `நான் ரொம்ப நல்லவன்...' என்ற முகமூடி அணிந்துகொண்டு மனதில் அழுக்குகளுடன் இருப்பவர்கள் எத்துணை அருவருப்பானவர்கள் என்பதை நான் அறிந்துகொண்டது என் கணவரை பார்த்துத்தான்.

என் கணவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். ஆனால், அங்கு அவர் எழுதும் முற்போக்கு, பெண்களுக்கு சம உரிமை, மனிதம், சாதி மறுப்பு போன்ற கருத்துகளுக்கும் அவரது நிஜ வாழ்வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதற்கெல்லாம் நான் நேரடி சாட்சியாக இருப்பதாலும், `சாட்டையடி பதிவு தோழி' கமென்ட் செய்துவிட்டு வந்து என்னை வீட்டில் அடிமையாக நடத்துவது அவருக்கே அசிங்கமாக இருந்ததாலும், ஒரு கட்டத்தில் என்னை சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறச் சொன்னார், கட்டாயப்படுத்தினார். இப்போது நான் எந்தச் சமூக வலைதளத்திலும் இல்லை.
என்னுடன் பணிபுரியும் தோழி ஒருத்தி, சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவள். அவள் நான் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறியது குறித்து மிகவும் வருத்தப்படுவாள். ஏன் என்று காரணம் கேட்டபோது, `இல்ல... எனக்கு அதுல ஆர்வம் இல்ல...' என்று சமாளித்தேன். இதில் நான் என் கணவரின் இமேஜை காப்பாற்றினேன் என்பதில்லை. ஒரு சுதந்திரப் பறவையாக இருந்த என்னை அவள் அறிவாள் என்பதால், இப்போது இப்படி கணவருக்கு அடங்கிக் கிடக்கும் என் நிலையை அவளிடம் வெளிப்படுத்த எனக்கு விருப்பமில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், லன்ச் டைம், டீ டைம் போன்ற நேரங்களில் என் தோழி சமூக வலைதள சுவாரஸ்யங்களை என்னிடம் பகிர்ந்துகொள்வாள். என் கணவர் அவளது நட்பு இணைப்பில் இருப்பதால், `நேத்து உன் ஹஸ்பண்ட் ஒரு போஸ்ட் போட்டிருந்தார்... சான்ஸே இல்ல...' என்று சொல்லி அந்த போஸ்ட்டை பற்றி என்னிடம் சிலாகிப்பாள். அது, பெண்களின் ஆடை சுதந்திரத்தை ஆதரிக்கும், ஆராதிக்கும் ஒரு போஸ்ட்டாக இருக்கும். ஆனால் உண்மையில், நான் ஜீன்ஸ் போடுவதை அவர் அனுமதிப்பதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கும். அதை என் தோழியிடம் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் எனக்கு அவஸ்தையாக இருக்கும்.

சமீபத்தில், பெண்களுக்கு கிச்சனிலிருந்து விடுதலை வேண்டும் என்று அவர் எழுதியிருந்த ஒரு போஸ்ட்டையும், அதற்கான கமென்ட்களில் பலர், குறிப்பாகப் பெண்கள் அவரை கொண்டாடியிருந்தையும் என் தோழி என்னிடம் காட்டி, `நான் வர வர உன் ஹஸ்பண்டோட ஃபேன் ஆகிட்டேன்' என்றாள். எனக்கு அவள் மீதும், அந்தப் பெண்கள் மீதும் பரிதாபமாக வந்தது. காரணம், சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களைப் பதிவிடும், தங்கள் கருத்துகளை முன்வைக்கும் பெண்களைப் பற்றிய அவர் எண்ணம், `லைக்குக்காக என்னலாம் செய்யுறாளுங்க....' என்பதாகவே இருக்கும். ஆனால், அந்தப் பெண்களின் பதிவுகளில் வண்டி வண்டியாக கமென்ட் செய்வார், அதை ஷேர் செய்வார். இதேபோல்தான், அவரது சாதி மறுப்புப் பதிவுகளும். ஆனால், உண்மையில் அவருக்குத் சுயசாதி பெருமை உண்டு. சாதி ஆதிக்க மனோபாவமும் உண்டு.
அவர் நல்ல உழைப்பாளி. தன் தொழிலைச் சிறப்பாகச் செய்கிறார். சிகரெட், குடி போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லை. அவர் வில்லன் எல்லாம் இல்லை. `ஆணாதிக்கவாதி என்று சொன்னீர்களே...' என்று கேட்டால், நம் நாட்டில் 90% ஆண்கள் ஆதிக்கவாதிகள்தான். அது ஒட்டுமொத்த சமுதாயமாகவே மாற்றப்பட வேண்டிய நோய். எனவே, வீட்டில் என் மீது இவர் செலுத்தும் ஆதிக்கத்தை கூட, பெரும்பாலான மனைவிகளையும் போலவே சகித்துக்கொண்டு என்னால் வாழ்க்கையை நகர்த்த முடிகிறது. ஆனால், சமூக வலைதளத்தில் அவர் அணிந்துகொண்டிருக்கும் முகமூடிதான், அந்த நடிப்புதான் எனக்கு மிகவும் அருவருப்பாக இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு `நான் ரொம்ப நல்லவன்...' வகை பதிவை என் தோழி மூலம் நான் படிக்க நேரும்போதும், அன்றைய தினம் வீடு திரும்பும்போது அவரது முகத்தைப் பார்க்கவே எரிசலாக இருக்கிறது.

̀எதுக்கு இந்த வேஷம்...' என்று இது பற்றி அவரிடமே கேட்டுவிடலாம் என்றால், நான் அவர் பதிவுகளை என் தோழி மூலம் படிப்பது கூட அவருக்குத் தெரியாது. தெரிந்தால், என் தோழியை பிளாக் செய்வது போன்ற, அந்த வழியையும் அடைப்பதற்கு அவர் ஏதாவது செய்வாரே தவிர, அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை இல்லை. இந்த நாடகத்தை, நடிகனை சகித்துக்கொண்டு வாழவும் என்னால் முடியவில்லை. என்ன செய்வது நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.