Published:Updated:

குடும்பத்தில் நாத்தனார் கணவரின் ஆதிக்கம்; அடிமை கணவரை மீட்க என்ன வழி?! #PennDiary - 48

Penn Diary
News
Penn Diary

எனக்கும், என் நாத்தனார் கணவருக்கும் பல முறை பேச்சுவார்த்தைத் தடித்துள்ளது. அவரது ஆதிக்கத்தை நான் விரும்பவில்லை என்பதை அவருக்கு என் நடவடிக்கைகளால் பல முறை உணர்த்திவிட்டேன். `நேற்று வந்தவள் உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும்...' என்றுதான் அவர் என்னை டீல் செய்துவருகிறார்.

நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி. திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. என் கணவர் வீட்டில் அவர் அக்கா, இவர் என இரண்டு பிள்ளைகள். என் கணவருக்கும் அவர் அக்காவுக்கும் 12 வருடங்கள் வித்தியாசம். என் நாத்தனார் கணவர்தான், இப்போது நான் நிம்மதியிழக்கக் காரணம்.

என் நாத்தனாருக்குத் திருமணமானபோது, என் மாமனார், மாமியார் தங்கள் உடல்நிலையின் காரணமாகவும், என் கணவர் அப்போது சிறுவனாக இருந்ததாலும், சொத்துகள் பராமரிப்பு முதல் குடும்பத்தில் ஒரு முக்கிய விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமை வரை அனைத்தையும் என் நாத்தனார் கணவரிடம் ஒப்படைத்தனர். தன் மாமனார் வீட்டின் மொத்த அதிகாரத்தையும் எடுத்துக்கொண்டார் என் நாத்தனார் கணவர்.

Marriage (Representational Image)
Marriage (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என் கணவரின் பள்ளி, கல்லூரி, கோர்ஸை தேர்ந்தெடுத்த திலிருந்து, அவருக்கு பாக்கெட் மணி தருவது வரை, என் நாத்தனார் கணவரின் ஆதிக்கத்திலேயேதான் என் கணவர் வளர்ந்தார். எங்கள் காதல் திருமணத்துக்கு என் மாமனார், மாமியார் சம்மதித்தபோதும்கூட, என் நாத்தனார் கணவர்தான் மிகவும் எதிர்ப்பு தெரிவித்தார். குடும்பத்தினர் அனைவரும் அவரை மிகவும் சிரமப்பட்டு சமாதானப்படுத்திதான், எங்கள் திருமணத்துக்கு சம்மதம் வாங்கியதாக என் கணவர், திருமணத்தின்போது கூறினார்.

`வீட்டு மாப்பிள்ளையா இருந்தாலும், அவர் ஏன் உங்க குடும்பத்து விஷயத்துல இந்தளவுக்குத் தலையிடணும்' என்று என் கணவரிடம் அப்போதே அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் கேட்டேன். `எங்க அக்கா கல்யாணத்தப்போ எனக்கு 8 வயசு. அதனால, அவர் என்னை ஆரம்பத்துல இருந்தே சின்ன பையனாதான் டீல் பண்ணுவார். எனக்கும் பழகிடுச்சு. எங்க வீட்டு அதிகாரத்தை எல்லாம் அவர் கையில கொடுத்து நாங்கதான் அவரை பழக்கிட்டோம். இனி அவரை மாத்த முடியாது' என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திருமணத்துக்குப் பின்னர், என் நாத்தனார் கணவர் மேல் எனக்கிருந்த அதிருப்தி அதிகமாகிக்கொண்டே வந்தது. குறிப்பாக, என் கணவர் அவர் முன் `மாமா, மாமா...' என்று கைக்கட்டி நிற்பதையும், அன்பினால் ஆன அந்த மரியாதையை அவர் புரிந்துகொள்ளாமல், ஓர் அடிமையாக என் கணவரை அவர் நடத்துவதையும் பார்த்தபோது, அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது.

நாத்தனார் கணவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். என் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். என் கணவரின் குடும்ப சொத்துகளில் இருந்து வரும் வருமானத்தை என் நாத்தனார் கணவர்தான் நிர்வாகம் செய்கிறார். `இதுவரை அவர் பார்த்து வந்தது சரி. இப்போ உங்களுக்குக் கல்யாணம் ஆகி, குழந்தையும் இருக்கு. இனியாச்சும் அதையெல்லாம் உங்ககிட்ட ஒப்படைக்கலாம்ல?' என்று நான் என் கணவரிடம் கேட்டால், `அதை இப்போ நாம கேட்டா வீணா பிரச்னை ஆகும். அந்தக் கோபத்தை என் அக்காகிட்டதான் காட்டுவார்...' என்கிறார்.

Couple / Representational Image
Couple / Representational Image

எனக்கும், என் நாத்தனார் கணவருக்கும் பல முறை பேச்சுவார்த்தை தடித்துள்ளது. அவரது ஆதிக்கத்தை நான் விரும்பவில்லை என்பதை அவருக்கு என் நடவடிக்கைகளால் பல முறை உணர்த்திவிட்டேன். `நான் எவ்வளவு பெரியவன், நேற்று வந்தவள் உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும்...' என்றுதான் அவர் என்னை டீல் செய்துவருகிறார்.

என் நாத்தனாருக்குத் தன் கணவரின் நியாயமில்லாத நடவடிக்கைகள் புரியாமல் இல்லை என்றாலும், அவரால் தன் கணவரை எதிர்த்துப் பேச முடியாத நிலை. என் கணவர் மீது அவருக்குப் பாசம் அதிகம். `அவனை நான் தம்பியா நினைக்கல, புள்ளையாதான் நினைக்கிறேன். அவனுக்கும் என் வீட்டுக்காரருக்கும் ஏதாச்சும் பிரச்னைனா, ரெண்டு பேருக்கும் நடுவுல நான் தவிச்சுப் போயிடுவேன். நீ கொஞ்சம் பொறுமையா போ...' என்று என்னிடம் சொல்கிறார். என் மாமனார், மாமியார், `அவர் பெரியவர், இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளை மாதிரி. நீதான் பொறுமையா போகணும்' என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போதும் என் கணவர், வீட்டை ஆல்டர் செய்வதில் இருந்து, எங்கள் குழந்தைக்கான பள்ளியைத் தேர்ந்தெடுப்பது வரை, எங்கள் குடும்பத்தின் எந்த முடிவையும் என் நாத்தனார் கணவரை கேட்டுத்தான் எடுக்க வேண்டும். பெரும்பாலும், என் நாத்தனார் கணவரின் முடிவே இறுதி முடிவாக இருக்கும்... அதில் எங்களுக்கு விருப்பமில்லை என்றாலும்கூட. நாங்கள் ஒரு டூர் போக வேண்டும் என்றால்கூட அதை ஒரு தகவலாக என் நாத்தனார் வீட்டுக்காரரிடம் சொல்ல முடியாது. `அடுத்த மாதம், இத்தனை நாள்கள், இங்கே செல்லலாம் என்று இருக்கிறோம்...' என்று அவரிடம் முன்னரே கூறி, அவர் ஆலோசனைகளைப் பெற்றே அந்த டிரிப்பை பிளான் செய்ய வேண்டும். ஷேர் முதல் இடம் வாங்குவது வரை, என் கணவர் செய்யும் எல்லா முதலீடுகளிலும் அவரது தலையீடு இருக்கும். இவ்வளவு ஏன்... என் குழந்தைக்குப் பெயர் வைத்ததுகூட அவர்தான்.

இப்போது சொல்லுங்கள். என் நாத்தனார் கணவரின் ஆதிக்கத்தில் இருந்து என் கணவரையும் குடும்பத்தையும் மீட்பது எப்படி?!

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.