Published:Updated:

அக்காவுக்குப் பேசிய மாப்பிள்ளை, எனக்குத் திருமணம் செய்யும் சூழல்; இது சரி வருமா? #PennDiary - 58

#PennDiary

`எந்தப் பரிகாரம் பண்ணினாலும், இந்த ரெண்டு ஜாதகத்துக்கும் பொருந்தாது' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் ஜோசியர். எங்கள் இருவீட்டுக் குடும்பங்களும், இன்னும் சில ஜோசியர்களிடம் சென்றபோதும், அவர்களையும் அதையே சொல்லியதால், வேறு வழி இல்லாமல் திருமண முடிவை கைவிட்டோம்.

Published:Updated:

அக்காவுக்குப் பேசிய மாப்பிள்ளை, எனக்குத் திருமணம் செய்யும் சூழல்; இது சரி வருமா? #PennDiary - 58

`எந்தப் பரிகாரம் பண்ணினாலும், இந்த ரெண்டு ஜாதகத்துக்கும் பொருந்தாது' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் ஜோசியர். எங்கள் இருவீட்டுக் குடும்பங்களும், இன்னும் சில ஜோசியர்களிடம் சென்றபோதும், அவர்களையும் அதையே சொல்லியதால், வேறு வழி இல்லாமல் திருமண முடிவை கைவிட்டோம்.

#PennDiary

எங்கள் வீட்டில் நான், அக்கா என இரண்டு பெண் பிள்ளைகள். அக்காவுக்கும் எனக்கும் ஒன்றரை வருடங்கள் வித்தியாசம். அக்காவுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் மாப்பிள்ளை பார்த்தபோது, நெருங்கிய சொந்தத்தில் இருந்தே ஒரு வரன் வந்தது. எங்களுக்கும் மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் குடும்பம் என அனைவரையும் பிடித்திருந்தது.

ஆனால், அப்போது மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்தார், கொரோனா முடக்கத்தால் பயணம் செய்ய இயலாமல் சிக்கிக்கொண்டார். இன்னொரு பக்கம், அப்போது படிப்பை முடித்திருந்த என் அக்காவும், சில காலம் வேலைக்குச் சென்றுவிட்டு பிறகு திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னாள். எனவே திருமணத்தை, வெளிநாட்டு விமானப் பயணங்கள் எல்லாம் சீராகும் வரை காத்திருந்து, பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

Marriage (Representational Image)
Marriage (Representational Image)

கிட்டத்தட்ட எட்டு மாதங்கள், அக்காவும் அந்த மாப்பிள்ளையும் `டு பி என்கேஜ்டு' ஜோடியாக போனில் பேசிப் பழகினார்கள். இந்நிலையில், மாப்பிள்ளை இந்தியா திரும்பிய பிறகு, மீண்டும் கல்யாண வேலைகளை ஆரம்பித்தனர். ஜாதகப் பொருத்தம் பார்க்கச் சென்றபோது, அக்காவுக்கும் அந்த மாப்பிள்ளைக்கும் பொருந்தவில்லை. `வீட்ல பொண்ணும் மாப்பிள்ளையும் ஆசையா பேசிப் பழகிட்டாங்க, ஏதாச்சும் பரிகாரம் பண்ணிட்டு கல்யாணம் பண்ணலாமா?' என்று வீட்டில் கேட்டுப் பார்த்தார்கள்.

`எந்தப் பரிகாரம் பண்ணினாலும், இந்த ரெண்டு ஜாதகத்துக்கும் பொருந்தாது' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் ஜோசியர். எங்கள் இருவீட்டுக் குடும்பங்களும், இன்னும் சில ஜோசியர்களிடம் சென்றபோதும், அவர்களும் அதையே சொல்லியதால், வேறு வழி இல்லாமல் திருமண முடிவை இரண்டு குடும்பங்களும் கைவிட்டோம்.

என் அக்கா, `ஜாதகத்தை முதல்ல பார்க்காம, இதுதான் மாப்பிள்ளைனு ஏன் என்கிட்ட சொல்லி, பேச விட்டீங்க?' என்று என் பெற்றோரிடம் சண்டை போட்டார். இருந்தாலும், அதிலிருந்து வெளிவருவது அவருக்கு சிரமமாக இல்லை. அந்த மாப்பிள்ளையும்கூட, `ரொம்ப ஆசைப்பட்டேன் நான் இந்தக் கல்யாணத்துக்கு. ஆனா, வீட்டுப் பெரியவங்க பண்ணின தப்புக்கு இப்போ பிரிய வேண்டியதாகிடுச்சு' என்று வருத்தப்பட்டார்தான் என்றாலும், அதிலிருந்து மூவ் ஆன் ஆகிச் சென்றுவிட்டார்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Nandhu Kumar from Pexels

தொடர்ந்து, என் அக்காவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் முடித்துவிட்டோம். அந்த மாப்பிள்ளைக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் எதுவும் செட் ஆகாததால், மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். இது நடந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், இப்போது அந்த மாப்பிள்ளை மீண்டும் இந்தியா திரும்பியிருக்கிறார். அவருக்கு மீண்டும் பெண் பார்க்க ஆரம்பித்த அவர் குடும்பத்தினர், `உங்க மூத்த பெண்ணைத்தான் பண்ண முடியாம போச்சு. ரெண்டாவது பொண்ணை எங்க பையனுக்குக் கொடுங்க' என்று என் பெற்றோரிடம் வந்து மிகவும் வற்புறுத்திக் கேட்டார்கள்.

என் பெற்றோருக்கும், அந்தக் குடும்பத்தையும் மாப்பிள்ளையையும் ஏற்கெனவே மிகவும் பிடித்துப் போயிருந்ததால், விட்டுப் போன அந்த சொந்தத்தை இப்போது நிகழ்த்திவிடலாம் என்று, எனக்கும் அவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்தனர். பொருந்தியிருக்கிறது. இப்போது, `இந்த மாப்பிள்ளை உனக்கு ஓ.கேயா?' என்று என்னிடம் கேட்கிறார்கள்.

எனக்கோ, என் அக்காவும் அந்த மாப்பிள்ளையும் பேசிய, பழகிய நாள்கள் நெருடலாக உள்ளது. என் அக்காவிடமே இதைப் பற்றிக் கேட்டபோது, `வாழ்க்கையில எதிர்பாராத சில விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். அது ஒரு திருமண அரேஞ்மென்ட்தான் என்பதால, நான் அந்த பீரியட்ல அவர்கிட்ட பேசினது ஒரு ஃபார்மல் சாட்தான். அவரும் அப்படித்தான் பேசினார்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Marinko Krsmanovic from Pexels

இப்போ எனக்குக் கல்யாணம் பண்ணி, குழந்தை பிறந்து, ஹேப்பியா இருக்கேன். நீ அவரை கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு எந்த நெருடலும் இல்ல. உனக்கு யோசனை, தயக்கம் இல்லாம இருந்தா நீ தாராளமா பண்ணிக்கோ' என்கிறாள்.

அந்த மாப்பிள்ளையிடம் பேசினேன். `உங்க அக்கா சொன்னதைத்தான் நானும் ஆமோதிக்கிறேன். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு; நம்ம குடும்பங்கள் சேர்றது பிடிச்சிருக்கு. ஒரு புரிந்துணர்வோட, சந்தோஷமா இருப்போம்னு தோணுது. முடிவு உன்னோடதுதான்' என்கிறார். இருந்தாலும், என் மனதில் ஏதோ ஒரு மெலிதான தயக்கம் அகல மறுக்கிறது.

என்ன முடிவெடுக்கட்டும் நான்?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.