Published:Updated:

என்னை சுயநலவாதியாகப் பார்க்கும் உடன் பிறந்தவர்கள்; சந்தோஷமான வாழ்க்கை குற்றமா? #PennDiary - 55

Penn Diary

`நீ மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கலாம்? அதை எப்படியெல்லாம் கெடுக்க முடியுமோ அதையெல்லாம் செய்றேன் பார்...' என்று நடந்துகொள்ளும் என் அண்ணனை சமாளிப்பது எப்படி? என் அக்காக்கள் என் மேல் கொண்டுள்ள பொறாமை, வெறுப்பை நீங்கச் செய்வது எப்படி?

Published:Updated:

என்னை சுயநலவாதியாகப் பார்க்கும் உடன் பிறந்தவர்கள்; சந்தோஷமான வாழ்க்கை குற்றமா? #PennDiary - 55

`நீ மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கலாம்? அதை எப்படியெல்லாம் கெடுக்க முடியுமோ அதையெல்லாம் செய்றேன் பார்...' என்று நடந்துகொள்ளும் என் அண்ணனை சமாளிப்பது எப்படி? என் அக்காக்கள் என் மேல் கொண்டுள்ள பொறாமை, வெறுப்பை நீங்கச் செய்வது எப்படி?

Penn Diary

எனக்கு 36 வயதாகிறது. அன்பான கணவர், ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என அழகான குடும்பம். பொருளாதாரப் பிரச்னைகள் எதுவும் இல்லை. என் பிரச்னை எல்லாம், என்னுடன் பிறந்த என் இரண்டு அக்காக்களும் அண்ணனும் என்னை சுயநலவாதியாகப் பார்த்து ஒதுக்குவதுதான்.

எங்கள் அப்பா, அம்மா இருவரும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள். இரண்டு அக்காக்கள், ஓர் அண்ணா, நான் என எங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகள். நான்கு பேரையும் படிக்க வைத்து, வளர்த்தது என இதுவே அவர்களுக்குப் பெரும்பாடாக இருந்ததால், எங்களின் எதிர்காலத்துக்கு சேர்த்து வைக்க அவர்களால் இயலவில்லை. என்னுடன் பிறந்தவர்களுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதாலும், நான் அந்த வீட்டில் தேவையில்லாமல் பிறந்த பிள்ளை என்று அவர்கள் நினைத்ததாலும், என்னுடன் மூன்று பேருமே அதிகம் பேச மாட்டார்கள், பாசமும் காட்ட மாட்டார்கள்.

Family (representational image)
Family (representational image)
Image by Peggy und Marco Lachmann-Anke from Pixabay

என் பெற்றோர் அவர்கள் உறவு, நட்பு என்று யாருனுடம் பேசுவதில்லை, பழகுவதில்லை என்பதால் என் அக்காக்களும், அண்ணனும் மிகவும் கூச்ச சுபாவத்துடனும், யாருடனும் பேசாமல், பழகாமலும் இருப்பார்கள். ஆனால், கடைக்குட்டியான நான் எல்லோருடனும் நன்றாகப் பேசுவேன், பழகுவேன். என் அக்காக்கள், அண்ணன்களைப் போல படிப்பை முடித்ததும் வீட்டுக்குள் முடங்காமல், என் சொந்த முயற்சியால் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கப்பெற்றேன், வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறி தங்கினேன், கெரியரில் அடுத்தடுத்து வளர்ச்சி பார்த்தேன்.

இன்னொரு பக்கம், என் வீட்டில் சூழல் இறுக்கமாகவே இருந்தது. என் முதல் அக்காவின் திருமணம் விவாகரத்தில் முடிந்து, மீண்டும் அவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்தது. என் இரண்டாவது அக்கா, திருமணம் குறித்த தனது அதீத எதிர்பார்ப்புகளாலும், மாப்பிள்ளை குறித்த கண்டிஷன்களாலும் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். என் பெற்றோர் உறவுகளுடன், உலகுடன் தொடர்பற்று இருந்ததால், என் அண்ணனுக்குப் பெண் பார்த்து திருமணம் முடிப்பதும் பெரும் பாடாக இருந்தது.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by Jeyaratnam Caniceus from Pixabay

இதற்கிடையில், எனக்கு 30 வயது கடந்திருந்தது. விவாகரத்தான எங்கள் உறவினர் ஒருவரும் நானும் விரும்ப... நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இதில் என் உடன் பிறந்தவர்களுக்கு சம்மதமில்லை. அப்போது வீட்டு லோனை நான் கட்டி வந்துகொண்டிருந்ததால், என் திருமணத்துக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். என் பெற்றோர், என் உடன் பிறந்தவர்கள், என் வீடுதான் என்றாலும், என் வாழ்க்கையும் முக்கியம் என்பதால், நான் திருமணம் முடித்து எங்கள் வீட்டை விட்டு வெளியேறினேன்.

இப்போது நான் என் கணவர், குழந்தைகள் என சந்தோஷமாக இருக்கிறேன். வேலைக்குப் போகாத என் இரண்டாவது அக்கா, அண்ணா, என் பெற்றோரின் பென்ஷனில் வாழ்ந்து வருகிறார்கள். `நாங்கள் இங்கே கஷ்டப்படும்போது நீ சுயநலமாக முடிவெடுத்து, இப்போது நீ மட்டும் சந்தோஷமாக இருக்கிறாய்' என்று என் அண்ணன் என் மீது வெறுப்பைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார். மேலும், என் தந்தை வழி சித்தப்பா, அத்தை எல்லாம் என் திருமணத்துக்கு ஆதரவாக இருந்து முடித்து வைத்தார்கள் என்பதால், அவர்களிடம் என் அண்ணன் கடந்தகால குடும்பப் பிரச்னைகள், சொத்துப் பிரச்னைகளை எல்லாம் பேசி சண்டை சூழலை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார். எனக்கு உதவியதால் அவர்களுக்கு இவர் பிரச்னை ஏற்படுத்துவதால், என் நிம்மதி பறிபோகிறது. என் மாமியார், மாமனாரையும் என் புகுந்த வீட்டில் மதிப்பதில்லை.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Alex Green from Pexels

`நீ மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கலாம்? அதை எப்படியெல்லாம் கெடுக்க முடியுமோ அதையெல்லாம் செய்றேன் பார்...' என்று நடந்துகொள்ளும் என் அண்ணனை சமாளிப்பது எப்படி? என் அக்காக்கள் என் மேல் கொண்டுள்ள பொறாமை, வெறுப்பை நீங்கச் செய்வது எப்படி? என்னுடன் தொடர்பற்று வைக்கப்பட்டிருக்கும் என் பெற்றோரிடம் நான் பேசுவது எப்படி?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.