நான் ஒரு பெரிய நகரத்தில் வசிக்கிறேன். முதுகலை பட்டதாரி. 12 வருடங்களாக டெய்லரிங் ஷாப் வைத்து நடத்தி வருகிறேன். கணவர் ஒரு மருத்துவமனையின் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிகிறார். இருவரின் வருமானத்திலும் வாழ்க்கை நன்றாகச் சென்றுகொண்டிருந்தது.
சுடிதார் முதல் வெடிங் பிளவுஸ் வரை தைத்துக்கொடுத்துக்கொண்டிருக்கும் என் தையல் தொழில், 5 வருடங்களுக்கு முன் நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. ஆனால் பெரிய பெரிய பிராண்ட் ஷோரூம்களின் ரெடுமேடு டாப்ஸ், மற்றும் ரெடிமேடு பிளவுஸ்களின் வருகைக்குப் பின் என்னைப் போன்ற டெய்லர் கடைகள் பலமாக அடிவாங்க ஆரம்பித்தன. எனக்குப் பெரிய வாடிக்கையாளர் வட்டம் என்பதால் என்னால் இத்தனை வருடங்களாக எப்படியோ தாக்குப்பிடித்து வர முடிந்தது. என்றாலும், தொழில் முன்னர் போல இல்லை, இது இனி இன்னும் மோசமாகும் என்பதே நிலை.

இந்நிலையில், பொட்டீக் ஆரம்பிக்கவிருக்கும் ஒரு உள்ளூர் ஜவுளி நிறுவனத்தினர், என் அனுபவம் மற்றும் வேலைநேர்த்தி காரணமாக, அவர்களுக்கான ஆடைகளை தைத்துக்கொடுக்கும் ஆஃபருடன் என்னிடம் வந்து பேசினார்கள். அந்த வாய்ப்பு எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. கட்டண ஒப்பந்தங்களும் சிறப்பாக இருக்க, அதற்கான பேச்சு வார்த்தைகள், மீட்டிங்குகள் நான்கு மாதங்களாக நடந்துவந்தன.
ஒரு பக்கம் நான், தேய்ந்துகொண்டிருந்த என் தொழிலுக்கு ஒரு ஏணி கிடைத்திருக்கும் மகிழ்ச்சியிலும், இன்னும் சில டிசைனர்கள் கலந்துகொண்ட பல சுற்று நேர்காணல்களுக்குப் பிறகு அந்த ஜவுளி நிறுவனத்தினர் என்னைத் தேர்ந்தெடுத்தது குறித்த தன்னம்பிக்கையிலும் பாசிட்டிவிட்டியிலும் மிதந்துகொண்டிருந்தேன்.
ஆனால் இன்னொரு பக்கம் என் கணவரோ, எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு குறித்து மனதார ஒரு பாராட்டுகூட தெரிவிக்கவில்லை. நாள்கள் ஆக ஆக, அந்த ஜவுளி நிறுவன பிரநிதிகள், உரிமையாளர் என அவர்களுடன் எல்லாம் நான் கலந்தாலோசிப்பது, மீட்டிங்குக்கு சென்று வருவது என்றான போது, `எனக்கு இது பிடிக்கவில்லை' என்பதை வெளிப்படையாகச் சொன்னார். ஆனால், இதில் அவருக்குப் பிடிக்காமல் போகும் அளவுக்கு என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. எனவே, அவர் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையில், டிசைன்கள் உருவாக்குவது, மெட்டீரியல்கள் வாங்குவது என்று நான் பொட்டீக் வேலைகளுக்கான முன்தயாரிப்புகளை உற்சாகமாகப் பார்க்க ஆரம்பித்தேன்.
மூன்று மாதங்கள் நான் என் வேலைகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம், `இந்த வேலையை நீ செய்ய வேண்டாம்' என என் கணவர் என்னிடம் சண்டைபோட ஆரம்பித்தார். அதுவரை என் 8 ஊழியர்களுடன், நான்கு சுவர்களுக்குள் நான் என் டெய்லரிங் கடையை நடத்திவந்தபோது இவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவே, ஒரு ஜவுளி நிறுவனத்துடன் ஒப்பந்தம், அதன் பிரதிநிதிகளுடன் மீட்டிங், என் திறமை என் கடையைக் கடந்து வெளியே அங்கீகாரம் பெறுவது, கஸ்டமர் கொண்டு வந்து தரும் துணிகளையே தைத்துத் தந்தது தாண்டி, க்ளாத் பர்சேஸுக்கு என நான் வெளியே சென்றுவருவது என... என்னுடைய இந்த நகர்வெல்லாம் அவருக்குப் பிடிக்கவே இல்லை. அவருக்கு ஏன் பிடிக்க வேண்டும், எனக்கு இது பிடித்திருக்கிறது என்று நானும் பின்வாங்கவில்லை.

இந்நிலையில், புராஜெக்ட் வேலைகள் ஒரு மாதத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், அவர் என்னுடன் மிகத் தீவிரமாக, ஆக்ரோஷமாக சண்டை போட ஆரம்பித்தார். இந்தப் புதிய புராஜெக்ட்டில் அதிகப் பொறுப்புகள் இருக்கும், வீட்டை, குழந்தைகளை, அவரை எல்லாம் முன்னர் போல என்னால் முழுமையாக கவனிக்க முடியாது என்றார். `உங்களையெல்லாம் நான் முழுமையாக கவனித்து நல்ல அம்மா, நல்ல மனைவி பட்டங்கள் வாங்கியது போதும். பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், அவர்களுக்கு நான் முன்னர் போல ஸ்பூன் ஃபீடு செய்யத் தேவையில்லை. நீங்களும் உங்கள் கம்ஃபர்ட் ஸோனை அட்ஜஸ்ட் செய்துகொள்ளத்தான் வேண்டும். ஏன் என்னை மட்டும் தியாகியாகச் சொல்கிறீர்கள்?' என்று நானும் விட்டுக்கொடுக்காமல் பேசினேன்.
இனி சண்டையிலோ, பேச்சிலோ என்னைத் தடுக்க முடியாது என்று உணர்ந்தவர், அடுத்த ஆயுதமாக எமோஷனல் பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார். என் மீது உள்ள பொஸசிவ்னெஸ்ஸால்தான் இப்படிச் சொல்வதாகக் கூறியவர், அதன் பின்னர் என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. அடிக்கடி டிரிங்ஸ் சாப்பிட ஆரம்பித்தார். அலுவலகத்திற்கு வீட்டிலிருந்து லன்ச் எடுத்துச் செல்வதை கைவிட்டார். ஏதோ அவர் வாழ்க்கையே சோகத்தில் மூழ்கியதுபோல நடந்துகொள்ள ஆரம்பித்தார். அதற்கு ஒற்றை காரணமாக என்னைச் சொல்லி, எனக்கு குற்ற உணர்ச்சி தர முயன்றார். அதில் அவரும் வெற்றியும் பெற்றுவிட்டார்.
ஆம்... பொஸசிவ்னெஸ் என்ற பெயரில் அவர் செய்வது ஆணாதிக்கம் என்பதை நானும் அறியாமல் இல்லை. என்றாலும், வரப்போகும் சந்தோஷத்துக்காக இருக்கும் நிம்மதி பறிபோய்விடுமோ என்ற அச்சம் என்னைப் பிடித்துக்கொண்டது. வேறு வழியே இல்லாமல், மிகுந்த மன வருத்தத்துடனும், மன உளைச்சலுடனும் அந்த ஜவுளி நிறுவனத்திடம் சென்று நான் புராஜெக்ட்டில் இருந்து விலகுவதாகச் சொல்லி கண்ணீருடன் திரும்பியபோது, தொழில் நிமித்தமாக இத்தனை வருடங்களாக என் மீது நான் வைத்திருந்த மரியாதையெல்லாம் அந்தக் கண்ணீரில் கரைந்துவிட்டிருந்தது. என்னை நினைத்து மிகவும் அவமானமாக இருந்தது.
இன்னொரு பக்கம், அந்த ஜவுளி நிறுவனத்தினரிடம் நானே பேசி, எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை என் தோழிக்குப் பெற்றுக் கொடுத்தேன். நான் அந்த பிசினஸுக்கு அதுவரை தயார் செய்திருந்த அத்தனை ஐடியாக்களையும், டிசைன்களையும், மேலும் என் ஆலோசனைகளையும் அவளிடம் ஒப்படைத்து `ஆல் பெஸ்ட்' சொன்னபோது, என் வாழ்வின் மிகத் துயரமான நொடியில் ஒன்றில் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்தேன்.

இப்போது என் கணவருக்கு நிம்மதி. ஆனால், நிம்மதியிழந்து கிடக்கும் என் மனது ஒரு நிலைக்கு வர மறுக்கிறது. என்னை இயலாமைப் புள்ளியில் நிறுத்தியிருக்கும் என் கணவர் மீது கோபம் கோபமாக வருகிறது. திறமை, முயற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு என எல்லாம் இருந்தும் எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் தட்டிவிட்டுவிட்டு வந்திருக்கும் இந்தத் துயரம், ஒரு மாதம் ஆகியும் ஆற மறுக்கிறது. என் கணவர் என்னிடம் பேசாமல் இருந்தபோது, `அய்யோ இவரை நாம் காயப்படுத்திவிட்டோமோ' என்று எனக்குள் எழுந்தது தவிப்பு. ஆனால் இப்போது எதையோ பறிகொடுத்ததுபோல திரியும் என்னை தினமும் பார்க்கும் என் கணவருக்கு, அப்படி எந்த உணர்வும் இல்லை. பதிலாக, `இனி இவ எப்படி இருந்தா என்ன, அதான் அந்த வேலையில இருந்து வெளிய வந்துட்டா இல்ல...' என்ற மனநிலையும் அவருக்கு இருப்பதை உணரும்போது, என் மனம் கொதிநிலையை அடைகிறது.
இருக்கும் நிம்மதியை இழக்கக்கூடாது என்று நினைத்துத்தான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால், என் கணவரின் நிம்மதியைக் காப்பாற்றிவிட்டு அதற்கு என் நிம்மதியை பலிகொடுத்திருக்கிறேன் என்பது இப்போது புரிகிறது. என்ன செய்வது நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.