பட்டுப்பாவாடையைக் கைகளுக்குள் சுருட்டி, கொலுசுகள் சிணுங்க, தேரைப்போல் ஆடிவரும் பெண் குழந்தைகள் மனிதர்களுடன் வாழும் தேவதைகள். மகள், அம்மா என இரண்டு ஸ்தானங்களின் பொக்கிஷ அனுபவங்களைத் தாங்கியவர்கள். மகளாக இருக்கும்போது, ஒட்டுமொத்த குடும்பத்தையும் தன்னைச் சுற்றி இயங்கச் செய்தவர்கள், அம்மாவாக மாறிய பின், குடும்பத்துக்காக சுழல ஆரம்பித்த நிமிடங்கள் எப்போதும் ஆச்சர்யமானவை. வீட்டிலிருக்கும் எல்லோரிடமும் செல்லமாக சண்டையிட்டு, கோபித்துக்கொண்டு பட்டாம்பூச்சியாக வலம் வந்த மகள்கள், ஒருகட்டத்தில் குடும்பத்தில் அனைவரின் கோபத்தையும் புன்னகையால் கடந்து செல்லும் அம்மாவாக மாறும் தருணம் என்பது காலத்தின் கட்டாயம் அல்ல... பெண்ணுலக ஆச்சர்யம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வயிறு புடைப்பதும், மார்பு கனப்பதும் மட்டும் தாய்மை அல்ல... அது ஓர் உன்னத உணர்வு. ஆகப்பெரும் பாறை மெள்ள இளகி, சருகாய் தடம்புரள்வதைப் போல, பகலில் வியப்பைப் பரிசளிக்கும் மாமழை இருளில் வெற்றுக்கோடாக நெளிவதைப் போல நிகழும் மாற்றம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவீட்டிலிருக்கும் அண்டா, குண்டாக்கள் அடமானத்துக்குப் போன நிலையிலும், தினமும் தலைக்கு வைக்கும் பூவுக்கும், ஆடைக்கு ஒன்றாக மேட்ச்சிங்காக அணியும் வளையல்களுக்கும் எப்போதும் எந்தக் குறையும் இருந்தது இல்லை எனக்கு. அண்ணன், தம்பி இருந்தாலும், அப்பாவின் அன்பு முதல், வாங்கி வரும் பொருள்வரை அனைத்திலும் முதலுரிமை எடுத்துக்கொண்டவள்.

கல்லூரி நாள்களில் படிக்கிறேன் என்ற பெயரில் வீட்டு வேலைகளில் இருந்து தப்பித்து, புத்தகத்தோடு தூங்கிய நிமிடங்களும் உண்டு. அம்மா, அதட்டும் போதெல்லாம், `பொம்பளப்புள்ளைய திட்டாத'னு சொல்லிருக்கேன்ல' என அப்பா எனக்கான திட்டுகளையும் வாங்கிக்கொள்வார்... இந்த நிமிடம் இப்படியே நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணியவளை, காலம் திருமணம், தாய்மை என்ற பயணத்துக்குள் தள்ளியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வேகமாக ஓடித்திரிந்த நான், தரையில் கால்களைப் பதித்து மெதுவாக நடக்கத் தொடங்கினேன். அதுவரை கல்லூரியில் முதல் மதிப்பெண் வாங்கியதுதான் என்னுடைய பெருமை என்று எண்ணியவள், என் குழந்தையை கையில் ஏந்திய நிமிடம் கர்வங்களை எல்லாம் சுருக்கிக்கொண்டேன். திடீரென்று எனக்கு பொறுப்பு எனும் புது சிறகு முளைத்தது. அதுவரை இரவு தூங்கும் போது, வானமே இடிந்தாலும் எனக்குத் தெரிந்ததில்லை. அப்படிப்பட்டவள், அரை மணிநேரத்துக்கு ஒரு முறை அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து என் மகளை மார்பணைத்தேன்.

Also Read
புத்தகத்தை கையில் வைத்தபடி தூங்கியவள், தொட்டில் கயிற்றை ஆட்டுவதை எப்போது நிறுத்தியிருந்தேன் என்பதை அறியாமல் தூங்க ஆரம்பித்தேன். காலையில் எழுந்து பார்க்கும் போது, தொட்டிலை நனைத்த சிறுதுளிகள் என் ஆடையையும் நனைத்திருக்கும்.
குழந்தையைக் கையில் ஏந்திய முதல் ஐந்து நாள்கள், எல்லாமே புதியதாகத்தான் இருந்தன. என் அம்மா, பாட்டிக்கெல்லாம் குழந்தை வளர்ப்பில் ஒன்றும் தெரியாது, நான் அனைத்தும் அறிந்தவள் என்பது போன்ற அதீத தன்னம்பிக்கையை அடுத்தடுத்து தன் செயல்களால் சுக்கு நூறாக்கினாள் என் மகள். தாய்மை எனும் படிப்பினையில் சுமார் இரண்டு ஆண்டுகள் என்னை முற்றிலுமாகத் தொலைத்திருந்தேன். தூக்கமின்மை, பிடித்த உணவைச் சாப்பிட முடியாத சூழல், எழுந்து நிற்க இன்னொருவரின் உதவி, என தாய்மை என்னை வேறு ஒருத்தியாக மாற்றியிருந்தது.
பேக் -பேக் போட்டு ஸ்டைலாக சுற்றிய நான், டயப்பர், பால் பாட்டில், பழைய துணி, கவர் என என் ஹேண்ட் பேக்கை மினி டிராவல் பேக்காக மாற்றியிருந்தேன். எங்கு கிளம்பும் முன்பும் அரைமணி நேரம் அலமாரியைத் தேடி, `டிரெஸ்ஸே இல்ல எனக்கு' என புலம்பியவள், பேன்ட் ஒரு நிறம், டாப் ஒரு நிறம், துப்பட்டா ஒரு நிறம் என மல்ட்டி கலரில் மாறியிருந்தேன். புடவை அசெளகர்யம் என்றவள், பால் கொடுக்க வசதியாக இருக்கும் என்று அம்மாவின் புடவையைத் தேடித் தேடி கட்ட ஆரம்பித்தேன். கண்ணாடி பார்ப்பதும், கண்மை வைத்துக்கொள்வதும் மறந்தே போனது. வாரம் ஒரு முறை அவுட்டிங் பிளான் போடுபவளுக்கு, மருத்துவமனையே நிரந்த அவுட்டிங்காக மாறிப்போனது.
உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அம்மா என்னை மருத்துவமனைக்கு அழைக்கும் போதெல்லாம், `சளி, காய்ச்சல்தான்... மாத்திரை போட்டா சரி ஆயிரும்' என்பதுதான் என்னுடைய பதிலாக இருக்கும். ஆனால், `பாப்பாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிட்டு வந்து 2 மணி நேரம் ஆச்சு, இன்னும் காய்ச்சல் குறையல, நாம வேணா வேற டாக்டர் பார்ப்போமா'? என்ற பீஸ்ட் மோடுக்கு போயிருந்தேன்.

எப்போதும், ஆன்லைனில் இருந்த நான், மகளை போட்டோ எடுக்க மட்டுமே செல்போனை பயன்படுத்த ஆரம்பித்திருந்தேன்.
`குழந்தை, பசிக்கு அழுகுதா, பால் போதலையா? குழந்தை இன்னும் நிக்கலையா, நடக்கலையா ஓடலையா' என்று வரும் கேள்விகள் எல்லாம், போர்க்களத்தில் தோற்றது போன்ற உணர்வுக்கே என்னைத் தள்ளின. அந்த நிமிடங்களில் என்னை எதிர்கொண்டவர்களுக்குதான் தெரியும் நான் சந்திரமுகிக்கே டஃப் கொடுப்பேன் என்று... மார்க்ஸ் தத்துவத்தையும், பெரியாரையும் எளிதாகக் கற்றவளுக்கு, குழந்தை தூங்குவது, நடப்பது, ஓடுவது என எல்லாமே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
இவை அனைத்தும் சுமையாய் ஒரு போதும் இல்லை. என்னைத் தொலைத்த நிமிடங்களும் சுகமானதாகவே இருந்தன. எல்லாவற்றிலும் எனக்கான முன்னுரிமைக்கு தம்பியிடம் சண்டை போட்ட நான், படுத்து இளைப்பாறும் அப்பாவின் மடியும், சாய்ந்து கொள்ளும் கணவரின் தோள்களும் அவளுக்கான சிம்மாசனமாகவே மாறியிருந்ததையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டேன். இதுதான் தாய்மை...

உங்கள் வீட்டிலும், கண்ணீரை மறைத்து, புன்னகையை மட்டும் சிந்தும் அம்மாக்கள் இப்படித்தான் அவர்களை உங்களுக்கானவர்களாக செதுக்கியிருப்பார்கள். நீங்கள் அவர்களைக் கொண்டாட வேண்டாம், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். அம்மாவின் உலகத்தில் அன்பைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை. இந்த அன்னையர் தினத்தில் ஒரு சாரியோ, தேங்க்ஸோ சொல்லி அவர்களைக் கட்டியணைத்துக்கொள்ளுங்கள்... அவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீரை உதிர்க்கக் காத்துக்கொண்டிருக்கும்.
அன்னையர் தின வாழ்த்துகள்...