அடடா… இவர்கள் இப்படிகூட காதலைக் குறித்து உருகி மருகி பேசுவார்களா என உணர்ச்சிவசப்படவைக்கிறது, பிப்ரவரி - 14 காதலர் தினத்திற்காக ‘காதல் என்பது யாதெனில்’ தலைப்பிற்காக அரசியல், சமூகம் சார்ந்த பிரபலங்கள் விகடனுக்காக தங்கள் இதயத்தை திறந்தபோது! சமூக செயற்பாட்டாளர் கௌசல்யாவிடம் பேசினேன்...
"காதல் இயற்கையானது, மக்கள் வாழ்க்கையில் இயல்பாக நடக்கக்கூடிய விஷயம். சினிமாத்தனமாக அதனை அணுக முடியாது. பொதுவாகவே, பெற்றோர் பார்த்துவைக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களுக்கும் காதல் திருமணங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. காதல் திருமணத்தில் சுதந்திரமான போக்கு இருக்கும். 'வாடா போடா' என்று பேசலாம். பெரும்பாலும் வரதட்சணை பிரச்னை இருக்காது. என்னதான் பெற்றோர்கள் அழுத்தம் கொடுத்தாலும் காதல் திருமணம் செய்தவர்கள் ஒரு புரிதலோடு ஒற்றுமையாக இருப்பார்கள்.

மிக முக்கியமாக சாதி, மதம் ஒழியும். முன்னரே, தனது காதலன் காதலியைப்பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணம் அப்படிக் கிடையாது. அதில், பெரும்பாலும் லவ் இருக்காது. அப்படியே, லவ் வந்தாலும் அதுல கட்டாயம் ஒரு நிர்பந்தமும் இருக்கும். அதைவிட, முக்கியமாக பயமும் அச்சமும் இருக்கும். ஒரு சுதந்திரமான போக்கு இருக்காது. அதனால, காதல் திருமணம்தான் பெஸ்ட்.
அதேநேரம் காதல் திருமணம் செய்தாலும் இருவரும் சுதந்திரமாக இருக்கவேண்டும். அவரவர்கள் விருப்பப்பட்ட துறையில் சாதிக்கவேண்டும். எனது இணையர் சக்தி ஊக்கப்படுத்துவதால்தான், என்னால சர்வைவ் ஆகமுடிகிறது. அவனும் பறையிசையில சாதிச்சிட்டு வர்றான். எம்.சி.ஏ பட்டப்படிப்பும் முடிச்சிருந்தாலும் கலை மீதான ஆர்வத்தால் இயங்கிக்கிட்டிருக்கான்.

நிறைய பேரு முற்போக்கா பேசுவாங்க. ஆனா, பெண்களை வீட்டுல அடக்கி ஒடுக்கி அடிமையா வெச்சிருப்பாங்க. ஆனா, சக்தி அப்படிக் கிடையாது. அந்தளவுக்கு என் இயல்பிலேயே என்க்ச் செயல்பட வைத்துள்ளான். 'ஏன் இன்னும் கௌசல்யாங்குற உங்க பேரோடு சங்கர் பேரையும் சேர்த்து வெச்சிருக்கீங்க'ன்னு பலர் கேட்டிருக்காங்க. ஆனா, சக்தி அதுபற்றி கேட்டதே இல்ல. அதை நீக்கணும்னு சொன்னதே இல்ல. சங்கர் என் வாழ்க்கையில் பிரிக்கவே முடியாத உயிர். நான், என்பது சங்கர்தான். என் வாழ்க்கை உயிர்ப்போடு இருக்கிறதுக்கு காரணமே சங்கர்தான். அதை என் இணையர் சக்தி புரிஞ்சுக்கிட்டு என்னை நல்லபடியா பார்த்துக்கிறாரு; காதலிக்கிறாரு. 'காதல் என்பதற்கு அறிவுப் பொருத்தம், அனுபவப் பொருத்தம் வேண்டும். காதல் இயல்பாகவும் கண்ணியமாகவும் முதிர்ச்சியாகவாவும் இருக்க வேண்டும். காதல் சாதி ஒழிக்கும் என்பதறிவோம்' என்று பெரியார் சொல்வது இதைத்தான்!" என்கிறார் அழுத்தமாக.