Published:Updated:

`தினமும் கோயில், ஞாயிறு சர்ச், நான்கு நாள்கள் ரம்ஸான் விரதம்' - சின்னி ஜெயந்த் #WhatSpiritualityMeansToMe

"தினம், அந்தந்த நாளுக்குரிய தெய்வத்தைச் சென்று வழிபாடு செய்வது என்னுடைய வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவேன்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் எனக்கு நிறைய ஈடுபாடு உண்டு. 'எப்போதும் உண்மையாகவும் தெய்வ நம்பிக்கையோடும் இருந்தால், வாழ்க்கையில் முன்னேறலாம்' என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன்'' என்று சொல்லும் நடிகர் சின்னி ஜெயந்த், ஆன்மிகம் குறித்த தனது பார்வையை, அதில் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Chinni Jayanth
Chinni Jayanth

''ஆன்மிகம் என்பது கடவுள் என்றால், அவரின் செயல் வடிவம்தான் இயற்கை. கடவுள் இயற்கையின் வழியாகத்தான் மனிதனுடன் பேசுகிறார். இரவு, பகல், வசந்த காலம், கோடைக்காலம், குளிர்காலம், மழைக்காலம் என இயற்கை மிகச் சரியாக மாறி மாறி தன் பயணத்தைத் தொடர்கிறது.

சூரியன் என்றாவது தவறு செய்திருக்கிறதா? காலம் தவறாமல் தன்னுடைய கடமையைச் செய்கிறது. அதைப்போல்தான் நாமும். நம்முடைய கடமையைத் தொடர்ந்து செய்தால், வாழ்க்கையில் துன்பங்கள் இருக்காது.

தினமும் கோயிலுக்குச் செல்வதை நான் தொடர்ந்து கடைப்பிடித்துக்கொண்டு வருகிறேன். தினம், அந்தந்த நாளுக்குரிய தெய்வத்தைச் சென்று வழிபாடு செய்வது என்னுடைய வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவேன்.

நாங்கள் குடியிருந்த மியூசிக் அகாடமி பகுதிக்கு அருகிலேயே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அப்பர் சுவாமி கோயில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில், ஷீர்டி சாயி பாபா கோயில் ஆகியவை இருந்தன. அது என் பாக்கியம்.

Chinni Jayanth
Chinni Jayanth

திங்கள்கிழமைதோறும் மயிலாப்பூர் தண்ணீர்த்துறை மார்க்கெட் அருகில் இருக்கும் அப்பர் சுவாமி கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கி அந்த வாரத்தைத் தொடங்குவேன். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு விசேஷமான நாள் என்பதால் முருகனை வழிபடுவேன். கந்தக்கோட்டம் முருகன் கோயில், பாம்பன் சுவாமி கோயில், வடபழனி முருகன் கோயில் இவற்றில் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சென்று முருகக் கடவுளை வணங்குவது வழக்கம். நேரம் இருந்தால், சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்வேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதன்கிழமை, தி.நகர் வெங்கட் நாராயணா சாலையிலிருக்கும் திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருவேன். இல்லாவிட்டால், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப் போவேன்.

Appar Swamigal
Appar Swamigal

வியாழக்கிழமைதோறும் மயிலாப்பூர் ஷீர்டி சாய்பாபா கோயிலுக்குப் போய் பாபாவை தரிசிப்பேன். பாபாவை நான் சிறுவயதிலிருந்தே வணங்கி வருகிறேன். அப்போதெல்லாம் வியாழக்கிழமைகளில் இவ்வளவு கூட்டமிருக்காது. அங்கிருந்து தி.நகர் ராகவேந்திரா மடத்துக்குச் சென்று ஶ்ரீராகவேந்திரரை வணங்குவேன். அப்படியே 10 நிமிடங்கள் அங்கு தியானம் செய்வேன். அங்கிருந்து எழும்பூர் தர்காவுக்குப் போய் விட்டு மவுன்ட்ரோடு தர்காவுக்கு வருவேன்.

மாலையில் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் அப்பர் சுவாமி கோயில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவேன்.

வெள்ளிக்கிழமை என்றால் எனக்கு கோமாதா வழிபாடுதான் பிரதானம். இரண்டு சீப்பு பச்சை வாழைப்பழம் அல்லது மஞ்சள் வாழைப்பழம் வாங்கிக்கொண்டு, வரும் வழியில் எங்கு மாடுகளைப் பார்த்தாலும் காரிலிருந்து இறங்கி மாடுகளுக்கு வாழைப்பழம் கொடுப்பேன். இதை வெள்ளிக்கிழமை செய்வது மிகவும் விசேஷம். சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வேன். பின்னர் அங்கே ஒரு மணி நேரம் வாலன்டியராக இருந்து, என் கையால் பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை பிரசாதங்களைக் கொடுப்பேன்.

Kabaleeswarar
Kabaleeswarar

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் நெய்தீபமும் ஏற்றுவேன். மாலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சனீஸ்வர பகவானுக்கு நெய் விளக்குப் போட்டு வணங்குவேன். அங்கு போக முடியாவிட்டால், மாலையில் அப்பர் சாமி கோயில் சனீஸ்வர பகவானுக்கு விளக்குப் போடுவேன். ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் சர்ச்சுக்குப் போய் அன்னை வேளாங்கன்னியிடம் பிரார்த்தனை செய்வேன்.

நான் மூன்று மதங்களைச் சேர்ந்த கடவுள்களையும் பிரார்த்திப்பேன். அதற்குக் காரணம், நான் மூன்று விதமான பள்ளி, கல்லூரிகளில் படித்து வளர்ந்தவன். ஐந்தாம் வகுப்பு வரை 'ராமகிருஷ்ணா வித்யாலயா'விலும், ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை 'வெஸ்லி ஹை ஸ்கூல்' என்னும் கிறிஸ்டியன் ஸ்கூலிலும் படித்தேன். பி.யூ.சியிலிருந்து பி.காம் வரை நியூ காலேஜ் எனும் இஸ்லாமியக் கல்லூரியில் படித்தேன். அதனால், நான் சிறுவயதிலிருந்தே எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கை உள்ளவன்.

Chinni Jayanth
Chinni Jayanth
"யானைகள் சீக்கிரமே எங்க விருந்தாளியாக வரும்; ஆவலுடன் காத்திருக்கிறோம்!"- நடிகர் கிஷோர்

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மும்மதங்களைச் சேர்ந்த கடவுளையும் நான் வணங்குவேன். ரம்ஜான் நாள்களில் நான்கு நாள்கள் நான் விரதமிருப்பது வழக்கம். என்னுடைய நண்பர்கள் காலை 3 மணிக்கெல்லாம் எனக்கு போன் செய்துவிடுவார்கள்.

இந்தக் கொரோனா வைரஸ் விரைவில் ஒழிந்துபோக வேண்டுமென மனித சமூகத்துக்காகவும் உலக நலனுக்காகவும் தினந்தோறும் நான் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன். ஜூன், ஜூலையில் இதிலிருந்து நமக்கு ஒரு நல்ல விடுதலை கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை'' என்கிறார் நடிகர் சின்னி ஜெயந்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு