Published:Updated:

நேசம் கொடுத்தே நேசம் பெற்றிருக்கிறார்..! கமலின் சம்திங் ஸ்பெஷல் காதல் பக்கங்கள் #HBDKamal

இல்லறத்தில் நிரம்பிய அன்புடனும் பரஸ்பர மரியாதையுடனும் நடத்தப்பட்ட பெண்ணின் உடல்மொழி, அன்று சரிகா வெளிப்படுத்தியது.

Published:Updated:

நேசம் கொடுத்தே நேசம் பெற்றிருக்கிறார்..! கமலின் சம்திங் ஸ்பெஷல் காதல் பக்கங்கள் #HBDKamal

இல்லறத்தில் நிரம்பிய அன்புடனும் பரஸ்பர மரியாதையுடனும் நடத்தப்பட்ட பெண்ணின் உடல்மொழி, அன்று சரிகா வெளிப்படுத்தியது.

'கமலின் வாழ்க்கையில் பெண்கள்' என்ற டாபிக்கைத் தொட்டாலே, அவர் மேல் எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்கள் எழுவது வாடிக்கை. 'முறைப்படி திருமணம்' என்று சமூகம் செல்கையில் கமல் லிவ்-இன் உறவில் இருந்தார். அதனாலேயே அவருடைய வாழ்க்கை முறை பழைமைவாதிகளுக்குத் தவறாகத் தெரிந்தது. அதே வேளையில், அவர் தன் வாழ்க்கையில் பெண்கள் வந்த தருணங்களை வெளிப்படுத்தத் தயங்கியதே இல்லை.  இதையும்விட முக்கியமாக, தான் நேசித்த பெண்களைக்  காயப்படுத்தக் கூடாது என்பதில் அவர் கவனமாகவே இருந்தார்.

கமல்
கமல்

அது அக்‌ஷரா ஒரு நடிகையாக அறிமுகமாகும் 'ஷமிதாப்' இந்திப் படத்தின் ஆடியோ லான்ச். தங்கள் இளைய மகள், நாயகியாக கேமராவுக்கு முகம் காட்டும் முதல் படம் என்பதால், அப்பா கமல், அம்மா சரிகா இருவருமே அந்த ஃபங்ஷனுக்கு வருகிறார்கள். இருவரும் நேருக்கு நேராகச் சந்தித்த ஒரு புள்ளியில், முகம் நிறைய பூரிப்புடன் பரஸ்பரம் கைகளைப் பற்றிக்கொள்கிறார்கள். 'சட்டப்படி பிரிஞ்சுட்டாலும் செலிப்ரிட்டிகள் பப்ளிக்ல கைகொடுத்துக்கொள்வது வழக்கம்தானே' என்று இதைக் கடந்துவிட முடியாது. இல்லறத்தில் நிரம்பிய அன்புடனும் பரஸ்பர மரியாதையுடனும் நடத்தப்பட்ட பெண்ணின் உடல்மொழி, அன்று சரிகா வெளிப்படுத்தியது. அமர்ந்திருந்த அவருக்கு கமல் குனிந்து கைகொடுக்க, பதில் அன்பு தந்து, மலர்ந்து அதை ஏற்றுக்கொண்ட சரிகாவின் கண்களே அதற்கு சாட்சி.

'பெண்களுடனான கமலின் ரிலேஷன்ஷிப்' என்று பேச ஆரம்பித்தாலே, முதலில் பலவிதமான எதிர்மறை விமர்சனங்கள்தான் எழும்பும். கொஞ்சம் தன்முடிவுகளையும் முன்முடிவுகளையும் தள்ளி வைத்துவிட்டு யோசித்தால், ஶ்ரீவித்யாவில் ஆரம்பித்து கெளதமி வரை, கமல் நேசத்தைக் கொடுத்தே நேசத்தை வாங்கியிருக்கிறார் என்பது புரியும். அவர் அன்பில் சுயநலத்தைச் சுட்டிக்காட்ட முடியாது.

செலிப்ரிட்டியாக இருப்பதாலேயே ஒருவருடைய பர்சனல் பெண் உறவுகளைப் பற்றிப் பேசலாமா, எழுதலாமா என்றால், கமல் விஷயத்தில் அதைத் தாராளமாகச் செய்யலாம். ஏனென்றால், எப்போதும் தன் ரிலேஷன்ஷிப்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருந்தவர், கொண்டிருப்பவர் கமல்.

kamal - srividhya
kamal - srividhya

நடிகை ஶ்ரீவித்யா, கமல் உலகின் முதல் பெண்ணாக அறியப்படுபவர். என்றோ தன் இருபதில் வந்துபோன அந்த அன்பு, அழகெல்லாம் இழந்துபோய் நோயின் பிடியில் மரணப்படுக்கையில் கிடந்தபோது, நேரில் தேடிப்போகிறார் கமல். தன் அன்புக்குரியவரை, இதுபோன்ற ஒரு சூழலில் சந்திக்கச் செல்வதில் சாதாரண மனிதர்களுக்கே அத்தனை தயக்கங்கள் இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. ஜோடியாகப் பேசப்பட்ட எத்தனையோ நட்சத்திரங்கள், பிரிவுக்குப் பின் கடைசி நொடியில்கூட சந்தித்துக்கொள்ளாத, சம்பிரதாய மலர்வளையத்துடன் வந்த கதைகளையும் அறிவோம். ஆனால், தன் இமேஜ், மீடியாவின் மொழி என எதையும் பொருட்படுத்தாமல், வாழ்வின் ஆதிநாள்களில் தன்னை நேசித்த, தான் நேசித்த அந்த அன்பை தரிசிக்கச் சென்றார் கமல்.

தான் நேசித்தவர், தற்போதைய தன் அழகு தொலைத்த உருவத்தைப் பார்த்துவிடக் கூடாது என்று ஶ்ரீவித்யா மறுத்தார். அப்படியும் கமல் அங்கிருந்து அகலவில்லை. காத்திருந்து, அந்தப் பெண்ணின் மனம் கரைத்து, பார்த்துவிட்டுத்தான் வந்தார் கமல். 'அந்த அழகான முகம் மட்டுமே கடைசிவரை என் மனசுல இருக்கட்டும்' என்று நினைத்து, தன்னை இதுபோன்றதொரு சூழலிருந்து வேதனையுடன் விலக்கிக்கொள்வது ஒரு வகையான அன்பு. அதையும் தாண்டி, இதயத்தின் ஆழம்வரைக்கும் ஒரு பெண்ணை நேசிக்கும் ஆணுக்குத்தான் இந்தத் தைரியம் கைவரும். தான் ரசித்த, காதல்கொண்ட முகத்தை விதியின் கொடூரத் தழும்புகளுடன் பார்க்கும்போதும், அதைச் செரித்து, 'அதனால என்ன' என்று தன் அன்பை அந்த ஜீவனுக்கு உறுதிப்படுத்தும் தைரியம்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

வாணியும் கமலும் மனம் ஒத்துப்போனதால் இருவரும் திருமணம் முடித்தார்கள்; மனம் ஒத்துப்போகாததால் பிரிந்துபோனார்கள். விவாகரத்துக்குப் பிறகு, தன் வாழ்க்கையில் மனைவியாக வந்த அந்தப் பெண்ணின் மீது மறைமுகமாகக்கூட எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களையும் வைக்கவில்லை கமல்.

சரிகா விஷயத்தில், கமல் ஓர் ஆதர்ச ஆணாக வாழ்ந்தார். சரிகாவின் கமல், அன்பான கணவன், பொறுப்பான தகப்பன்.

இந்தியாவில் லிவ்-இன் உறவுக்கு எந்தவித மரியாதையும் இல்லாததால், அது கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்ட, அதைப் பற்றிய கலந்துரையாடல்கள்கூட இல்லாத காலகட்டத்தில்தான், சரிகாவும் கமலும் லிவிங் டுகெதர் உறவில் இணைகிறார்கள். சரிகா கர்ப்பமாகிறார். அம்மா இல்லாமல் அண்ணியிடம் வளர்ந்த அந்த ஆண், தன் வளர்ப்பை, தன்னை நம்பி வந்த உறவு விஷயத்தில் அழுத்தமாக நிரூபிக்கிறார். திருமண உறவுகளே தத்தளித்துக்கொண்டிருந்தபோது, லிவ்-இன் உறவில் எந்தளவுக்கு உறுதித்தன்மையோடு இருக்க முடியும் என்பதை, வாழ்ந்து காட்டுகிறார்கள் கமலும் சரிகாவும்.

கமல் - சரிகா
கமல் - சரிகா

ஒருகட்டத்தில், இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் வலுப்பெற்றபோது, 'அடுத்த குழந்தையும் பிறந்தவுடன் திருமணம் செய்துகொள்வோம். ஒரு குழந்தை நம் திருமணத்துக்கு முன்னாலும், இன்னொரு குழந்தை திருமணத்துக்குப் பின்னாலும் பிறந்தால், அதில் சமமின்மை இருக்கும்' என்கிறார் அப்பா கமல். அந்த முடிவின்படி, இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சரிகாவை திருமணம் செய்கிறார். சமூக அழுத்தங்களால், சமூக பயமுறுத்தல்களால் தங்கள் காதலை சில்லு சில்லாகத் தொலைத்தவர்கள் நிரம்பியது, இந்தச் சமூகம். அந்தச் சமூகத்துக்கு 31 வருடங்களுக்கு முன்னர், இரண்டு பெண் குழந்தைகளுடன் திருமணம் செய்துகொண்ட இந்த நட்சத்திர பெற்றோர் சொன்ன ரிலேஷன்ஷிப் செய்தியும், சிவாஜி முன்னிலையில் அவர்கள் மண ஏற்பு செய்துகொண்ட அந்தக் காட்சியும் அவ்வளவு ஃப்ரெஷ். ஏன், இந்த 2019-லும் அது புதுமைதான்!

கமலின் வாழ்க்கையில் கெளதமி வந்த காலகட்டம், இருவருக்குமே முக்கியமானது. இம்முறை அவர் அன்பைப் பகிர்ந்துகொண்டது 5 வயதுக் குழந்தையின் அம்மாவுடன். அதற்குரிய பக்குவமும் முதிர்ச்சியும் இவர்கள் ரிலேஷன்ஷிப்பின் அழகு. கமலின் பிரியமும் அரவணைப்பும் அப்போது உடல்நலப் பிரச்னையுடன் இருந்த கௌதமிக்கு மருந்தாகவும் அமைந்தன. சமூகத்திடம் கெளதமியைத் தன் இணையெனச் சொல்வதில் கமலுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

கமல்
கமல்

பொதுவெளியில், தன் இணையால் பெண்ணுக்குக் கிடைக்கிற ஒரு தோள் அணைப்பு, கைப்பற்றுதல் அவளுக்குப் பெரிய கம்பீரத்தைத் தரும். இந்தக் கம்பீரத்தை, கமலுடன் தான் வாழ்ந்த காலத்தில் பூரணமாக அனுபவித்தார் கெளதமி. அவரும், கமலின் அன்புக்குக் குறையில்லாத அன்பைக் கொடுக்கும் இணையாக அவர் வாழ்வில் தன்னை நிலைநிறுத்தினார். 13 வருடங்கள் கழித்து, வளர்ந்த மகள், குணமடைந்த உடல், தனக்கென ஓர் அடையாளம் எனக் கௌதமி கமலிடமிருந்து விடைபெற்றார். அதேபோல, கமலுக்கு, தான் அவருடன் வாழ்ந்த காலத்தில் அவர் தந்திருந்த மாரல் சப்போர்ட்டும் மரியாதைக்கு உரியது.

காதல், திருமணம், விவாகரத்து, லிவ்-இன், மறுமணம், மண ரத்து, பிரேக் அப், சிங்கிள், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்... ரிலேஷன்ஷிப்பின் அத்தனை அம்சங்களையும் வாழ்ந்திருக்கிறார் கமல். அதற்காக, அவரின் பெர்சனல் வாழ்க்கை சமூக மதிப்பீட்டில் குறைவானது என்பது இல்லை. ரிலேஷன்ஷிப்பை பொறுத்தவரை தன் விருப்பப்படி, தன் இணையின் விருப்பப்படி முடிவெடுக்கும், வாழும் தைரியம் அவருக்கு வாய்த்திருக்கிறது. குறிப்பாக, அதில் அவர் காட்டும் வெளிப்படைத்தன்மை தனித்துவமானது.

கமலின் காதலை கமலாலும் அவருடைய காதலை அனுபவித்த பெண்களாலும் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்!