Published:Updated:

``அப்பாவுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது!" - எலிசபெத் குமரிமுத்து

``அப்பாவுக்குத் தன் கண்கள் விஷயத்துல மனசு நிறைய வருத்தம் இருந்துச்சு. ஆனா, `அது மூலமாதான் ஆண்டவர் தன்னை உயர்த்தி வெச்சுருக்கார்'னு அடிக்கடி சொல்றது மூலமா அதை பாசிட்டிவ்வா கடந்துபோயிட்டாரு." - எலிசபெத் குமரிமுத்து

`நான் முத்தையா பொண்ணு’ என்று தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொள்கிற எலிசபெத், நடிகர் குமரிமுத்துவின் மூன்றாவது மகள். அப்பா பற்றிய மலரும் நினைவுகளையும், இன்ஸ்டாவில் அண்மையில் பதிவேற்றிய வீடியோவுக்கான காரணம் குறித்தும் நம்முடன் பகிர்ந்துகொண்டார் அவர்.

``அப்பா அவரோட 15 வயசுல சென்னைக்குப் பிழைக்க வந்தவர். 17 வயசுல எம்.ஆர்.ராதா டிராமா ட்ரூப்ல சேர்ந்தாராம். கன்னியாகுமரியில் இருந்து வந்த முத்தையாவை குமரிமுத்துவாக்கி, `பொய் சொல்லாதே’ங்கிற படத்துல நடிகர் நாகேஷ், நகைச்சுவை நடிகரா அறிமுகப்படுத்த, அப்பாவோட சினிமா கரியர் ஸ்டார்ட் ஆச்சு. `மனசுக்குள் மத்தாப்பு’ படத்துல அப்பா வைத்தியரா நடிச்சிருப்பார். அப்போ ஷூட்டிங் நேரத்துல அப்பா அவரோட டிரேட் மார்க் சிரிப்பை கேஷுவலா சிரிக்க, அதைப் பார்த்த டைரக்டர், `இதே மாதிரி படத்துலேயும் சிரிங்க’ன்னு கேட்டிருக்கார். அப்புறம் அதுவே சினிமாவுல அப்பாவுக்கான அடையாளமாகிப் போச்சு.

அப்பா மாதிரி குடும்பத்தை யாராலும் லவ் பண்ண முடியாதுங்க. அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு போனை கட் பண்ணிட்டேன்னா, அடுத்த நிமிஷமே மறுபடியும் போன் பண்ணி, `ஏம்மா போனை வெச்சுட்டே’ன்னு சமாதானம் பண்ணுவாரு. எங்கம்மா பேரு புண்ணியவதி. அப்பாவோட கடைசிகாலம் வரைக்கும் அம்மாவை `ஹே... புண்ணியம்’னு சீண்டி விளையாடிட்டே இருந்தார். அவங்களோட அந்நியோன்னியம் பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்’’ என்றவர், `முத்தையா பொண்ணு’ ஸ்டேட்டஸ் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

எலிசபெத் குமரிமுத்து
எலிசபெத் குமரிமுத்து

``இங்க எல்லா பொண்ணுங்களும் டாடிஸ் கேர்ள்ஸ்தான். எனக்கு எங்கப்பா இன்னும் ஸ்பெஷல். எல்லாருக்கும் அவரை காமெடி நடிகராதான் தெரியும். யாரைப்பத்தியும் தப்பா பேசக்கூடாதுங்கிறதை அப்பா தன் வாழ்நாள் கொள்கையா வெச்சிருந்தது எங்க குடும்பத்துக்கு மட்டும்தான் தெரியும். அரசியல் வாழ்க்கையில அப்பா கடைசி வரைக்கும் ஒரு கட்சி, ஒரு தலைவர் என்ற ஒழுக்கத்தோடு வாழ்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பா நிறைய படங்கள் நடிச்சார்தான். ஆனா, எங்களுக்குப் புண்ணியத்தைச் சேர்த்து வெச்சாரே தவிர, சொத்து எதுவும் சேர்த்து வைக்கலை. நிறைய பேருக்கு மருத்துவச் செலவுக்கு உதவியிருக்கார். எத்தனையோ பிள்ளைகளைப் படிக்க வெச்சிருக்கார். அதுவும் ஒரு வருஷம், ரெண்டு வருஷமில்ல. ஃபைனல் இயர் வரைக்கும் ஃபீஸ் கட்டுறதுதான் அப்பாவோட வழக்கம்.

இவ்வளவு ஏன், அப்பாவோட ஆரம்ப காலத்துல ரேடியோவுல நிகழ்ச்சி செஞ்சு கொடுத்துட்டு, கிடைச்ச 10 ரூபா சம்பளத்துல கோதுமை வாங்கிட்டு வந்துக்கிட்டிருந்தாராம். வர்ற வழியில அவரோட நண்பர் ஒருவர் தன் கஷ்டத்தைச் சொல்ல, வாங்கின கோதுமையில பாதியை அவருக்குக் கொடுத்துட்டாராம். அவரோட விசிட்டிங் கார்டிலும் லெட்டர் பேடிலும் `கொடுப்பதைக் கெடுப்பவன் இருப்பதை இழப்பான்’ன்னு வாசகம் வெச்சிருந்தாரு’’ என்று நெகிழ்ந்தவர், தன் அப்பாவைத் தள்ளி விட்டவரை, தான் அடித்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார்.

``அப்பா கிட்டத்தட்ட 15 வருடங்கள் கிறிஸ்துவ ஊழியம் பண்ணிக்கிட்டிருந்தாரு. அப்போ, ஏதோ ஒரு பிரச்னையில ஒருவர் அப்பாவைத் தள்ளி விட்டுட்டார். அந்த நபரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. விஷயத்தைக் கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த நான், போலீஸ்காரங்களையெல்லாம் தாண்டிட்டு எங்கப்பாவை தள்ளிவிட்ட நபரை அடிச்சிட்டேன். அந்தளவுக்கு அப்பா பைத்தியம் நான்" என்று சிரிக்கிற எலிசபெத், `நான் நடிகர் குமரிமுத்து மகள் பேசுகிறேன்’ என்ற தன்னுடைய இன்ஸ்டா வீடியோ பற்றி பேச ஆரம்பித்தார்.

நடிகர் குமரிமுத்து
நடிகர் குமரிமுத்து
நிறைய தமிழ் விடுகதைகள், மகளின் ஸூம் க்ரூப்... கவிஞர் விவேகாவின் `லாக்டௌன்' பேரன்டிங்

``மக்களுக்கு உபயோகமா ஏதாவது சொல்லணும்னுதான் உருவகேலி பத்தி வீடியோ போட்டேன். அப்பாவுக்குத் தன் கண்கள் விஷயத்துல மனசு நிறைய வருத்தம் இருந்துச்சு. ஆனா, `அது மூலமாதான் ஆண்டவர் தன்னை உயர்த்தி வெச்சுருக்கார்'னு அடிக்கடி சொல்றது மூலமா அதை பாசிட்டிவ்வா கடந்துபோயிட்டாரு. அப்பா மாதிரி யாருக்கும் உருவ கேலி நடக்கக் கூடாதுன்னுதான், மத்தவங்க உடம்புல இருக்கிற குறைகளைக் கேலி பண்ணாதீங்கன்னு வீடியோ போட்டேன்" என்கிறார் எலிசபெத் குமரிமுத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு