Published:Updated:

``வாழ்க்கை இவ்வளவு மோசமாகும் என நினைக்கவில்லை; ஆனால்..." பர்சனல் பகிர்ந்த விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் தன் வாழ்க்கையில் மனஅழுத்தத்தில் சிக்கிய தருணங்களையும் அவற்றிலிருந்து மீண்டது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான, சுவாரஸ்யமான பர்சனல் பக்கங்கள் பற்றிப் பேசுவதற்கு எந்தப் பிரபலமும் தயங்க மாட்டார்கள். ஆனால், சோகமும் வெறுமையும் அப்பிக்கிடக்கும் தங்கள் வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் குறித்து வெகு சிலரே பகிர்ந்துகொள்வார்கள். அந்தச் சிலரும் ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களாக மட்டுமே இருக்கிறாரர்கள். தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள், மனதளவில் தாங்கள் அனுபவித்த சிக்கல்களைப் பெரும்பாலும் வெளியே சொல்வதில்லை.

Depression
Depression
Pixabay

ஆனால் அபூர்வமாக, நடிகர் விஷ்ணு விஷால் தன் வாழ்க்கையில் மனஅழுத்தத்தில் சிக்கிய தருணங்களையும் அவற்றிலிருந்து மீண்டது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

விஷ்ணு விஷாலின் திருமண பந்தம் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்குவந்தது. அந்தச் சமயத்தில் பேசிய விஷ்ணு, தனக்கும் தன் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்பதைத் தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பிறகு, தன்னுடைய பர்சனல் பக்கங்கள் குறித்து அதிகமாக அவர் வெளியில் பேசவில்லை.

இந்நிலையில், தனது வாழ்க்கையின் இருண்ட பக்கம் குறித்துப் பேசி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறார் விஷ்ணு. அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவின் கேப்ஷனாக, `வாரணமாயிரம்' வழியைத் தேர்ந்தெடுத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

``எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், நான் எப்போதும் என் உடலையும் மனதையும் இணைத்து, இறுக்கமாக வைத்திருக்கப்போகிறேன்.''
விஷ்ணு விஷால்

அவர் எழுதியிருக்கும் இரண்டு பக்க கடிதத்தில், ``என்னைப் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று விரும்புகிறேன். என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. மற்ற எல்லாரைப் போலவும் என் வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள் இருந்தன. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தது. அந்த நாள்களில், என் பகல்கள் இருட்டாக இருந்தன. இரவுகளோ அதிக இருட்டாக இருந்தன. அவற்றைப் பற்றி பேச இதுதான் சரியான நேரம்.

ஒரு தருணத்தில் என் சினிமா வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் என் பர்சனல் வாழ்க்கை கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, 2017-ம் ஆண்டு நானும் என் மனைவியும் பிரிந்தோம். அந்தப் பிரிவு எங்கள் இருவரையும் தனித்தனி வீடுகளில் வாழவைத்தது மட்டுமல்லாமல், பிறந்து சில மாதங்களேயான என் மகனிடமும் இடைவெளியை உருவாக்கியது. என் வாழ்க்கை இவ்வளவு மோசமாக மாறும் என்று நினைக்கவேயில்லை. குடிக்க ஆரம்பித்தேன். ஒவ்வோர் இரவும் நான் மனதளவில் உடைந்து அழும் வரையிலும் குடித்தேன். மனஅழுத்தமும் தூக்கமின்மையும் என்னை நோயாளியாக்கின. அதனால், ஒரு மைனர் சர்ஜரியும் செய்யவேண்டி வந்தது.

Vishnu Vishal
Vishnu Vishal
`காதலனிடம் பாதுகாப்பை உணர்ந்தேன்..ஆனால்!' - பிரேக்அப் குறித்து இலியானா

மற்றொரு பக்கம் என் திரையுலக வாழ்க்கையும் பிரச்னையைச் சந்தித்தது. என் திரைப்படங்கள் மோசமான ரிலீஸ் தேதிக்கு கார்னர் செய்யப்பட்டன. சிறிது காலத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட என் தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தது. எனது தயாரிப்பில் தொடங்கப்பட்ட படத்தை 21 நாள்கள் ஷூட் செய்யப்பட்ட நிலையில் கைவிட நேர்ந்தது. நிலைமை இன்னும் மோசமாகும் வகையில், தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படமாக்கப்படும் `காடன்' திரைப்பட ஷூட்டிங்கில் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, மோசமான காயம் ஏற்பட்டு இரண்டரை மாதம் படுத்த படுக்கையாகிவிட்டேன். 11 கிலோ எடையும் அதிகரித்துவிட்டது.

சிறந்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்படவிருந்த என் 8 படங்கள் கைவிடப்பட்டன. வாழ்க்கையில் எதுவுமே சரியாகப் போகவில்லை. `ராட்சசன்' சூப்பர்ஹிட் படமாக இருந்தாலும், விவாகரத்து, குழந்தையைப் பிரிந்தது, உடல்நிலையில் பின்னடைவு, பொருளாதார இழப்பு, ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயம், குடிப்பழக்கம், ஈட்டிங் டிஸார்டர், உடல் எடை அதிகரிப்பு என வாழ்க்கையின் அடித்தளத்துக்கே போய்விட்டேன். இதுபோன்ற நிலையில் உழன்று கொண்டிருந்தபோது, என் அப்பா போலீஸ் சர்வீஸில் இருந்து ஓய்வுபெற்றதுகூட எனது கவனத்தைப் பெறவில்லை. என் நிலை, என் குடும்பத்தையும் மிக பாதித்திருந்தது. குறிப்பாக என் அப்பாவை.

Vishnu
Vishnu

நான் எத்தகைய கையறு நிலையில் இருக்கிறேன் என்பதை உணர்ந்த அந்த நாள், வாழ்க்கையை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானித்தேன். மருத்துவ உதவியை நாடினேன், மனஅழுத்ததுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். என் வாழ்க்கைக்கான பொறுப்பை நானே கையில் எடுத்தேன். ஒரு புரஃபஷனல் டிரெய்னரிடம் பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துக்கு மாறினேன், குடிப்பழக்கத்தைக் குறைத்தேன், யோகா பயிற்சியில் ஈடுபட்டேன். முன்தீர்மானத்தோடு என்னுடன் பழகியவர்களைத் தவிர்த்தேன், எதிர்மறையான மனிதர்களை சமூக வலைதளங்களில் பிளாக் செய்தேன். குடும்பத்துடனும் என் மனநிலையை பாஸிட்டிவாக்கும் சில நண்பர்களிடமும் மட்டும் அதிக நேரத்தைச் செலவழித்தேன். என்னைப் பற்றி, என் வேலையைப் பற்றி மட்டுமே யோசிக்கத் தொடங்கினேன்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு 16 கிலோ எடை குறைந்தது. எக்கச்சக்க வலிமையுடன் மீண்டும் எனது அடுத்த பட ஷூட்டிங்குக்குத் தயாராகியிருக்கிறேன். என்னைப் போல பலர் தங்கள் வாழ்க்கையில் கடினமான தருணங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், உங்கள் எல்லாருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் எந்த நேரத்திலும் துள்ளிக்குதித்து மீண்டெழ முடியும். எப்போதும் நேர்மறையாகச் சிந்தியுங்கள்... சுயஒழுக்கத்தைக் கடைபிடியுங்கள்! உங்களின் கோபத்தையும் விரக்தியையும் உபயோகமானவையாக மாற்றுங்கள். உடலுக்கும் மனதுக்கும் பயிற்சிகொடுங்கள்.

விஷ்ணு5
விஷ்ணு5
தாம்பத்யத்துக்கு `நோ’, நிறம் மாறும் உடல், மனஅழுத்தம்... பிரசவம் பெண்களுக்கு உண்டாக்கும் 10 மாற்றங்களும் தீர்வுகளும்! #Motherhood
#Postpartum

உடல்நலம் எப்போதும் மனநலத்தை மேம்படுத்தும். இதை நான் நேரடியாக அனுபவித்திருக்கிறேன். எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், நான் எப்போதும் என் உடலையும் மனதையும் இணைத்து இறுக்கமாக வைத்திருக்கப்போகிறேன்" என்று ஃபுல் பாஸிட்டிவ் மோடில் கடிதத்தை நிறைவுசெய்திருக்கிறார், விஷ்ணு விஷால்.

அடுத்த கட்டுரைக்கு