Published:Updated:

``சந்தேகம்... பிரிவு... தத்துக் குழந்தை... சாண்டி!’’ - காஜல் பெர்சனல் ஷேரிங்ஸ்

காஜல் பசுபதி
காஜல் பசுபதி

`அவர் உதவி பண்ணா என்னாலயும் சீக்கிரமா ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடியும்கிற ஆசையிலதான் அப்படியொரு போஸ்ட்டை போட்டேன்.’

நடிகை காஜல் பசுபதி தன்னுடைய வலைதளத்தில், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸிடம், `நான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார். அவருடைய உணர்வுகளை அறிந்துகொள்ள அவரிடம் பேசினோம்.

Kajal  Pasupathy
Kajal Pasupathy
facebook.com

''ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கணும்கிறது என்னோட பல வருஷத்து ஆசை. எங்க அம்மா கூட இதுக்கு ஓகே சொல்லிட்டாங்க. ஆனா, தத்தெடுப்பு சட்டங்கள்ல கேட்கப்படுகிற கேள்விகளுக்கு என்கிட்ட பதிலில்லை. சிங்கிள் உமனால குழந்தையை வளர்க்க முடியாது. மாசாமாசம் கண்டிப்பா ஒரு வருமானம் வர்றவங்களுக்குத்தான் குழந்தையைத் தத்துக்கொடுக்க முடியும்கிறாங்க.

நான் சிங்கிள் உமன்தான். ஆனா, என்கூட என் அம்மா, என் குடும்பம்னு எல்லாரும் இருக்காங்க. நான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்தா, அவங்க எல்லோருமே எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. தவிர, ஒரு குழந்தையோட தலை நிக்கிற வரைக்கும் ஓர் அம்மா எப்படியெல்லாம் கவனமா இருக்கணும்கிறது வரைக்கும் 41 வயசு லேடியான எனக்கு நல்லாவே தெரியுங்க'' என்றவர், ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டதற்கான காரணத்தையும் சொன்னார்.

Kajal  Pasupathy
Kajal Pasupathy
facebook

''குழந்தை சுஜித் விஷயத்துல, அவங்க குடும்பத்துக்கு, தானே ஒரு குழந்தையைத் தத்தெடுக்க உதவி செய்யறேன்னு அவர் சொல்லியிருந்தார். ஸோ, அவருக்கு ஒரு குழந்தையைத் தத்தெடுக்கிறதுக்கான லீகலான விஷயங்கள் எல்லாம் நல்லா தெரியும்கிறது எனக்குப் புரிஞ்சுது. அவர் உதவி பண்ணா என்னாலயும் சீக்கிரமா ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடியும்கிற ஆசையிலதான் அப்படியொரு போஸ்ட் போட்டேன். மாஸ்டர் இன்னும் என் போஸ்ட்டைப் பார்க்கலை போல. ஆனா, சாண்டியும் அவன் மனைவியும் பார்த்துட்டாங்க. காலையிலேயே சாண்டியும் அவன் மனைவியும் எனக்கு போன் பண்ணாங்க. 'ஏம்ப்பா, உனக்கொரு குழந்தையை தத்தெடுக்கணும்னா நானும் ஹெல்ப் பண்றேன்'னு சொன்னாங்க'' என்று சந்தோஷமாகச் சொன்னவரிடம், இன்னமும் சாண்டி - காஜல் நட்பு தொடர்கிறதா என்றோம்.

''அவன் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட் மட்டுமில்லீங்க, நல்ல மனுஷனும்கூட. உண்மையாத்தான் லவ் பண்ணோம். முறைப்படி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். பேரன்ட்ஸ் ஒத்துக்காததாலே அதை மறைச்சோம். அதனாலேயே சட்டபடி நடந்த ஒரு திருமணத்தை 'லிவ்விங் டு கெதர்'ல இருக்காங்கன்னு சொல்லிட்டாங்க. பட், எல்லாமே முடிஞ்ச கதை. ஆனா, சாண்டி மேலே எந்தத் தப்புமில்ல. அவனோட வேலையோட தன்மைபடி, அவன் நிறைய பேரோட பழகத்தான் செய்யணும். அவங்க ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி. ஆனா, நான் ரொம்ப பொசஸிவ். என் பொருள் எனக்கு மட்டும்தான் அப்படிங்கிற எண்ணம்.

Kajal  Pasupathy
Kajal Pasupathy
facebook

தெளிவா சொல்லணும்னா, புதுப்புது அர்த்தங்கள் படத்துல வர்ற கீதா கேரக்டர் மாதிரி நான். வீட்டுல வளர்க்கிற நாய்கூட புருஷன் மடியில படுக்கக்கூடாதுன்னு நினைக்கிற மனைவி மாதிரிதான் நான் நடந்துக்கிட்டேன். என்னோட அதிகப்படியான பாசம் பொசஸிவாகி, சாண்டியை ரொம்பக் கஷ்டப்படுத்திடுச்சு. நானும் அவன்கூட சண்டை போட்டுட்டு அழத்தான் செய்வேன். ரெண்டு பேருக்குமே ஒரு கட்டத்துல மூச்சு முட்ட ஆரம்பிச்சது. பிரிஞ்சுட்டோம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்க, நான் செஞ்சதையே சாண்டி எனக்குச் செஞ்சிருஞ்சா, 'என்னை சந்தேகப்படறான்'னு நானும் பிரிஞ்சுதானே போயிருப்பேன். இப்ப அவனோட மனைவி, ரொம்ப மெச்சூர்டு. சாண்டியோட ஜாப் நேச்சரைப் புரிஞ்சுக்கிட்டு அழகா நடந்துக்கிறாங்க. இந்தப் புரிந்துணர்வு எங்க மூணு பேருக்குள்ளேயும் இருக்கிறதால, இப்போ வரைக்கும் நாங்க மூணு பேருமே நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கிறோம்.

Kajal  Pasupathy
Kajal Pasupathy
facebook

இப்ப என்னோட நோக்கமெல்லாம் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கிறதுலதான் இருக்கு. சிங்கிள் உமனால குழந்தையை நல்லா வளர்க்க முடியும்னு நம்புங்க. தவிர, எங்களை மாதிரி ஆர்ட்டிஸ்ட் இந்த மாசம் 50 ஆயிரம் சம்பாதிக்கிறோம்னா, அடுத்த மாசம் அதைவிடக் குறைச்சலாகவும் சம்பாதிக்கலாம், அதிகமாகவும் சம்பாதிக்கலாம். மாசாமாசம் ஒரு தொகையை சம்பாதிக்கிறவங்களாலதான் ஒரு குழந்தையை நல்லா வளர்க்க முடியும்னு சொன்னா எப்படி'' - ஆதங்கமாகப் பேசி முடித்தார் நடிகை காஜல்.

அடுத்த கட்டுரைக்கு