Published:Updated:

பெறாத தாயின் கல்லறையை அலங்கரித்த அன்புமகன்... மனதை உருக்கும் அனுபவப் பகிர்வு! #Allsoulsday

கல்லறை
கல்லறை

அவர் யார்? அந்தக் கல்லறை யாருடையது என்று எனக்குள் ஆயிரம் கேள்விகள் இருந்தன. ஆனால் அந்த இடம் கேள்விகளையும் பதில்களையும் கடந்த இடம் என்பது என் நினைவில் ஓடியது.

அன்றாடம் நாம் கண்டும் காணாதுபோலக் கடந்துபோகும் இடம் கல்லறை. ஆனால் காலையிலிருந்தே பரபரப்பாகக் காணப்பட்டது. ஒவ்வொரு கல்லறையும் சுத்தம் செய்யப்பட்டு மலர்கள் சூடி அலங்கரிக்கப்பட்டட்டிருந்தன. ஒரு சிலர் குடும்பமாக வந்து ஊதுபத்தி ஏற்றிவைத்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். சிலர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. மனிதர்களால் நிரம்பியிருந்த அந்தக் கல்லறைத் தோட்டத்துக்குள் உள்ளே சென்றேன்.

All souls day
All souls day

ரோஜாப்பூக்கள் தூவிய ஒரு கல்லறை. புதிதாய் பூசப்பட்டிருந்த வர்ணத்தோடு பளபளத்தது. அந்தக் கல்லறையின் முன்பு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் தன் முழங்கால்கள் மடித்த நிலையில் அமர்ந்திருந்தார். கூட யாரும் இல்லாமல் தனியாகத் தன் துயரத்தோடு மௌனமாய் உரையாடிக் கொண்டிருப்பவர்போலத் தோன்றிய அந்த மனிதருக்கு அருகில் சென்றேன்.

அவர் யார்? அந்தக் கல்லறை யாருடையது என்று எனக்குள் ஆயிரம் கேள்விகள் இருந்தன. ஆனால் அந்த இடம் கேள்விகளையும் பதில்களையும் கடந்த இடம் என்பது என் நினைவில் ஓடியது. பேசாமல் அவர் அருகில் நின்றேன். கண்ணீர் துளிர்க்கும் விழிகளோடு என்னை ஏறெடுத்தவர் ஒரு பரிட்சையப் புன்னகையை வெளிப்படுத்தினார். ஒரு முறை குனிந்து கல்லறையைத் தொட்டு வணங்கிக்கொண்டார். தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பாவனையில்,

All souls day
All souls day

"என் மேரியம்மா... எப்படி உறங்குது பாரு... மேரியம்மாவுக்கு ரோஜாப்பூன்னா ரொம்பப் பிடிக்கும்" என்றார்.

மேரியம்மா, என்ற உச்சரிப்பில் அவர் அம்மா என்பதில் கொடுத்த அழுத்தம் மனதை என்னவோ செய்தது. பதிலுக்குப் பேசவேண்டிய அவசியம் இப்போது என்வசம்.

"உங்க அம்மாவா?"

"ஆமா, எங்கம்மாதான். நான், எங்கம்மா, எங்க அப்பா மூணுபேரும் பெங்களூருல இருந்து இந்த ஊருக்கு வந்தப்போ எங்களை அரவணைச்சுக் காப்பாத்தின அம்மா"

"அப்போ மேரியம்மா உங்க சொந்த அம்மா இல்லையா..."

"இல்லம்மா... அதுக்கும் மேல" என்று சொல்லிவிட்டு கல்லறையை மீண்டுமொருமுறைப் பார்த்தார்.

Vikatan
All souls day
All souls day

"எங்க வீட்டுக்கிட்டதான் அவங்க வீடு. என்னைய அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்து என்னை வளர்த்து ஆளாக்கினது மேரியம்மாதான். எங்க அம்மாவுக்கும் அப்பவுக்கும் அடிக்கடி சண்டை வரும். அப்போ அவங்களை தடுத்துச் சமாதானம் பண்ணுவாங்க.

மேரியம்மா ரொம்ப அழகு. நல்ல இங்கிலீஷ் பேசுவாங்க. ஆங்கிலோ இந்தியன். டைப் ரைட்டிங் எல்லாம் நல்ல தெரியும். நிறைய படிப்பாங்க. நான்னா அவங்களுக்கு ரொம்பப் பிரியம். நிறைய நாள் அவங்க வீட்டுல அவங்க கிட்டதான் நான் படுத்து தூங்குவேன். நான் என்ன ஆசைப்பட்டாலும் வாங்கித் தருவாங்க. கல்யாணமே பண்ணிக்கலை. என்னை அவங்க சொந்தப் பிள்ளைபோலப் பாத்துக்கிட்டாங்க. அவங்களுக்கு என்னை நல்லாப் படிக்க வைக்கணும்னு ஆசை. 'நல்லா படிச்சிப் பெரிய ஆளா வரணும்னு' சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஆனா எனக்குப் படிப்பு ஏறல. அதுக்காக அவங்க என் மேல வச்ச பாசத்தை மட்டும் குறைக்கவேயில்லை.

All souls day
All souls day

எனக்கு இப்போ குழந்தைகள் எல்லாம் இருக்கு. மேரியம்மா ஆசைப்பட்ட மாதிரி என் பையன் நல்லா படிக்கிறான். விவேகானந்தா கல்லூரில படிக்கிறான். பொண்ணு பத்தாவதுல 473 மார்க் வாங்கியிருக்கா. அவளுக்கு டாக்டர் ஆகணும்னு ஆசை. என் மேரியம்மாவுக்காக நிச்சயம் அவளை டாக்டர் ஆக்கியே தீருவேன்.

மேரியம்மா வாழ்ந்தப்போ எவ்ளோ பேருக்கு உதவியிருக்கு. இன்னைக்கு அந்த அம்மா கல்லறைல வந்து நின்னு ஒரு சொட்டிக் கண்ணீர்விட யாருமில்லை. அம்மா ஆத்மா ஒரு நாளும் வருத்தப்பட்டுறக்கூடாதுன்னு, வாய்ப்புக் கிடைக்கிறப்போல்லாம் நான் வந்து நிக்கிறேன். இந்த நாளுக்காக பெயின்டெல்லாம் அடிச்சு சுத்தம் பண்ணி வச்சிருக்கேன். நல்லா இருக்கில்ல...

மேரி அம்மா கல்லறை
மேரி அம்மா கல்லறை

ஒண்ணு சொல்லவா, இங்கதான் என் அம்மா - அப்பா கல்லறை கூட இருக்கு. ஆனா, எனக்கு அங்க போறதை விட மேரியம்மா கிட்ட வர்றதுதான் பிடிச்சிருக்கு. நிச்சயம் ஒரு நாள் நாம எல்லோரும் மரணத்தை சந்திச்சுதான் ஆகணும். ஒவ்வொரு முறையும் சர்ச்சுக்கு சந்தா கட்டும்போது, எங்க மேரியம்மாகூட மறுபடியும் ஒரு வாழ்க்கை வாழ இங்க ஓர் இடம் நிச்சயம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கை உருவாகி ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதுவரைக்கும் அடிக்கடி வந்து அம்மாவைப் பார்த்துட்டுப் போவேன்" என்று அவர் சொல்லும்போது கண்ணீர் வழிந்து கல்லறையில் தெறித்துச் சிதறியது.

அடுத்த கட்டுரைக்கு