Published:Updated:

வேலையிழந்த கணவன், காவல் நிலையத்தில் புகார் செய்த மனைவி... தவறா, தற்காப்பா?

couple
couple ( Photo: Pixabay )

நமக்குத் தெரிந்து இது ஒரு குடும்பம். கொரோனாவால் பிரிந்த குடும்பங்கள் இப்படி எத்தனை எத்தனையோ?

கொரோனா ஏற்படுத்திய வேலையிழப்பு குடும்பங்களைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. குடும்பத்தினரின் ஒற்றுமைக்குள் விரிசல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு குடும்பத்தைச் சந்திக்க நேர்ந்தது. கொரோனாவால் வேலையிழந்த குடும்பத் தலைவர் அவர். சேமிப்பை வைத்து குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார் அவரின் மனைவி. கொரோனாவுக்கு முன்பு கைநிறைய சம்பளம் வாங்கியதைப் போலவே நல்லதொரு வேலையைத் தேடிக்கொண்டிருந்தார் அந்தக் குடும்பத்தலைவர். ஆனால், ஒரு வருடம் ஆன பிறகும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே சண்டை வர ஆரம்பித்திருக்கிறது. வார்த்தைகள் தடிக்க, ஒரு கட்டத்தில் மனைவி, கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டார். விளைவு, கணவர் வீட்டைவிட்டுச் சென்று விட்டார். தற்போது இரண்டு குழந்தைகளுடன் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் அந்தக் குடும்பத்தலைவி.

love
love
Photo: Pixabay

நமக்குத் தெரிந்து இது ஒரு குடும்பம். கொரோனாவால் பிரிந்த குடும்பங்கள் இப்படி எத்தனை எத்தனையோ... இந்தச் சூழ்நிலையை எப்படி அணுக வேண்டும் என்று சமூக ஆர்வலர் கீதா நாராயணன், உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், மற்றும் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோரிடம் பேசினோம்.

`பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்ளக்கூடாது!'

சமூக ஆர்வலர் கீதா நாராயணன்
சமூக ஆர்வலர் கீதா நாராயணன்

``கணவன்- மனைவிக்கிடையே புரிந்துணர்வு இல்லாதிருப்பது, பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்வது இந்த இரண்டும்தான் தம்பதியருக்கிடையே வெகு சுலபமாகப் பிரிவை ஏற்படுத்தி விடுகிறது. அதனுடன் பொருளாதாரச் சிக்கலும் சேர்ந்து கொள்ளும்போது குடும்பங்கள் சத்தமில்லாமல் சிதறி விடுகின்றன. இந்த பேண்டெமிக் நேரத்தில் மட்டுமல்ல, குடும்பத்தில் எந்தப் பிரச்னை வந்தாலும் அதை இருவரும் சேர்ந்து பேசி சரி செய்ய வேண்டும். அல்லது அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை இருவரும் சேர்ந்து யோசிக்க வேண்டும். இந்த ஒற்றுமை மட்டும் இருந்துவிட்டால் குடும்பங்கள் பிரியவே பிரியாது என்பதுதான் என் கருத்து'' என்கிறார் கீதா நாராயணன்.

``தாங்க முடியாத பிரச்னை வரும்போது சண்டை வேண்டாம்!''

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் பேசுகையில், ``வருமானம் திடீரென நின்றுவிட்டதால் அந்தக் குடும்பத்தலைவி பதறிப்போய் இருப்பார். சேமிப்பு கரையக் கரைய அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கணவருடன் சண்டை பிடிக்க ஆரம்பித்திருப்பார். இது மனைவி பக்க நியாயம். கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த கணவர், வேலை பறிபோன துக்கத்தில் நிச்சயம் உடைந்து போய் இருப்பார். அதேபோல நல்ல சம்பளத்துடன் வேலை தேடியிருப்பார். அதனால்தான் அவர் வேலைக்குப் போகாமல் இருந்திருப்பார். இது கணவர் பக்கத்து நியாயம். இந்த இடத்தில் கணவனும் மனைவியும் எப்படி சண்டை போட்டுக்கொண்டார்கள், என்ன மாதிரியான வார்த்தைகளைப் பிரயோகித்தார்கள், உடல்ரீதியான தாக்குதல்கள் நிகழ்ந்தனவா, மனதைக் காயப்படுத்தும் வார்த்தை வன்முறைகளும் செயல் வன்முறைகளும் அவர்களுக்கு நடுவில் நிகழ்ந்தனவா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.

அதனால், வேலை இழப்பு போன்ற பெரிய பிரச்னை வீட்டுக்குள் நுழையும்போது, கணவன்-மனைவி இருவரும் இரண்டு விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒன்று, சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் நாம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்ளக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது, தற்போது என்ன பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் அதிலிருந்து மீள்வது குறித்தும் இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

couple
couple
`கணவனின் நண்பர்களை மனைவி வெறுக்க காரணம் என்ன தெரியுமா?!' - இயக்குநர் எம்.ராஜேஷ்

இந்த மனிதனுடன் இனிமேல் வாழ முடியாது என்ற நிலைமையில்தான் ஒரு பெண் காவல் நிலையம் வரைக்கும் செல்வார். அதேபோல் இந்தப் பெண்ணுடன் இனிமேல் வாழ முடியாது என்ற நிலைமையில்தான் ஓர் ஆண் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வார். இங்கு இரண்டுமே நடந்திருக்கின்றன. அதனால் தவறு இரு தரப்பிலும் இருப்பதற்கே வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தாங்க முடியாத பிரச்னைகள் வரும்போது சண்டை போடாமல் பிரச்னைக்கான தீர்வுகள் குறித்து யோசித்திருந்தால் நீங்கள் சொன்ன அந்தக் குடும்பம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கியிருக்காது'' என்று வருத்தப்படுகிறார்.

```குடும்ப மானமே போச்சு' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது!''

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்
வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் இது குறித்துப் பேசுகையில், ``எந்தச் சூழ்நிலையிலும் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் மரியாதையுடனும் அன்புடனும் நடத்த வேண்டும். சூழ்நிலைகள் காரணமாக இது நிகழாதபோது அல்லது மனதையும் உடலையும் பாதிக்கிற குடும்ப வன்முறைகள் நிகழும்போது பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையை நாடுவது சரியான விஷயம்தான். தனக்கு வேலையில்லை என்ற விரக்தியில் மனைவியை அடிப்பது, திட்டுவது என்று கொடுமை செய்தால் அது 498-A சட்டத்தின் கீழ் வரும்.

காதல் செய்வது எப்படி? #AllAboutLove ❤️ - புதிய தொடர் - 1

அதனால், மனைவி காவல்துறையின் உதவியை நாடிச் சென்றது சரிதான். காவல் நிலையத்துக்குச் செல்கிற அளவுக்கு வீட்டுக்குள் பிரச்னை நிகழ்ந்ததுதான் சரியில்லை. இந்த இடத்தில் இன்னொரு கருத்தையும் நான் சொல்ல விரும்புகிறேன். கூட்டுக் குடும்பங்கள் இருந்த காலத்தில், கணவன் மனைவிக்கிடையே பிரச்னை வந்தால் அதைப் பெரியவர்கள் தீர்த்து வைத்தார்கள். தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க பெண்கள் காவல் துறையை அணுகுவதை `குடும்ப மானமே போச்சு' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது'' என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

அடுத்த கட்டுரைக்கு