Published:Updated:

சொத்தை எழுதி வாங்கிக்கொண்ட மகன், வைத்தியம் பார்க்காத துரோகம், எங்கு சென்று முறையிட? #PennDiary89

Penn Diary

இப்போது, என் கணவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, டயாலிசிஸ் செய்யும் நிலையில் வந்து நிற்கிறோம். ’அதற்கெல்லாம் செலவழிக்க முடியாது, கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் போங்க’ என்று கல்நெஞ்சுக்காரனாக பேசுகிறான் மகன். அரசு மருத்துவமனைதான் சென்று வருகிறோம்.

சொத்தை எழுதி வாங்கிக்கொண்ட மகன், வைத்தியம் பார்க்காத துரோகம், எங்கு சென்று முறையிட? #PennDiary89

இப்போது, என் கணவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, டயாலிசிஸ் செய்யும் நிலையில் வந்து நிற்கிறோம். ’அதற்கெல்லாம் செலவழிக்க முடியாது, கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் போங்க’ என்று கல்நெஞ்சுக்காரனாக பேசுகிறான் மகன். அரசு மருத்துவமனைதான் சென்று வருகிறோம்.

Published:Updated:
Penn Diary

நானும் கணவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள். எங்களுக்கு ஒரே மகன். அவன்தான் உலகம். அவனை நல்ல பள்ளியில் படிக்க வைத்தது, வெளியூரில், டாப் கல்லூரியில், மேனேஜ்மென்ட் கோட்டாவில் அவன் விரும்பிய கோர்ஸில் சேர்த்தது, ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று வந்து நின்றபோது, அவன் விரும்பிய பெண்ணையே அவனுக்கு மணம்முடித்து வைத்தது என... அவன் விரும்பியதை எல்லாம் செய்துகொடுத்தோம். ஆனால், எங்களிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு, இப்போது வயோதிகத்தில் அவன் எங்களை நிறுத்தியிருக்கும் கோலத்தை தாங்க முடியவில்லை.

Old age - Representational Image
Old age - Representational Image
Pixabay

நானும் கணவரும் கை நிறைய சம்பாதித்தோம். அவர் வீட்டினருக்கோ, என் வீட்டினருக்கோ எங்கள் சம்பாத்தியம் தேவைப்படாத சூழல் என்பதால், குடும்பச் செலவுகள் தவிர வேறு பெரிய செலவுகள் எதுவுமில்லை. எனவே, வருமானத்தை எல்லாம் எங்கள் மகனுக்கான சேமிப்பாக மாற்றத் தொடங்கினோம். எங்களுக்கு என விலை உயர்ந்த ஆடைகள் எடுத்துக்கொள்ளமாட்டோம். மகள் இல்லை, மகன் மட்டுமே என்பதால், ஆசைப்பட்டாலும் கூட, எனக்கு என நகை வாங்கி அணிந்துகொள்வதை தவிர்த்தேன் நான்.

என் கணவர், மிகவும் பழையதாகி, பழுதாகி போன தன் பைக்கை கூட, ‘இதற்கு மேல் இதை நீங்கள் ஓட்டவே முடியாது’ என்று மெக்கானிக்கே கைவிரித்த பின்னர்தான் மாற்றினார். ’ரெண்டு பேரும் கை நிறைய சம்பாதிக்கிறீங்க. சினிமா, ஹோட்டல், டூர், கார் வாங்குறதுனு ஜாலியா, வசதியா இருந்தா என்ன?’ என்று பலரும் கேட்டாலும், அந்த ஆடம்பரங்களை விட்டு எல்லாம் விலகியே இருந்தோம். பணம் சேமிப்பது, ஒரு தொகை சேர்ந்ததும் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது என எங்கள் பையனுக்கான சொத்து சேர்ப்பதிலேயே குறியாக இருந்தோம்.

 Old age  (Representational image)
Old age (Representational image)
Pixabay

எங்கள் பையனிடம் நாங்கள் பாசத்தை கொட்டி வளர்த்தோம். ஆனால், அவன் சுயநலவாதியாக வளர்ந்திருப்பதை மிகத் தாமதமாகவே அறிந்திருக்கிறோம். அவனுக்குத் திருமணமாகி இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவன் சொந்தத் தொழில் செய்துகொண்டிருக்கிறான். தொழிலை ஆரம்பித்தபோது, அவன் பெயரில் சொத்து இருந்தால்தான் கடன் கிடைக்கும் என்று சொல்லி, எல்லா சொத்துகளையும் அவன் பெயரில் மாற்றி எழுதி வாங்கினான். என்று இருந்தாலும் நம் பையனுக்குக் கொடுக்கப்பட வேண்டியதுதானே என்று, நாங்களும் முழுமனதுடன் அவனுக்கு எழுதிக் கொடுத்தோம்.

ஒரு வருடத்திற்கு முன், என் கணவருக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, ஆரம்பத்தில் சில மாதங்கள் தனியார் மருத்துவமனை அழைத்துச் சென்ற மகன், பின்னர் அதற்கு அதிகம் செலவாகிறது என்று கூறி, அந்தச் செலவுகளை எங்களையே பார்த்துக்கொள்ளச் சொன்னான். எங்கள் கடைசி காலத்துக்கு என்று நாங்கள் எடுத்து வைத்திருந்தது 2 லட்சம் ரூபாய் தான். மற்ற ரொக்க பணத்தையும் மகனிடமே கொடுத்துவிட்டிருந்தோம். இந்நிலையில், கணவருக்கு நோயும் தீவிரமாகி, சிகிச்சை செலவும் அதிகமாகிக்கொண்டே வந்ததால், எங்கள் கையிருப்பில் இருந்த காசெல்லாம் கரைந்துகொண்டே வந்தது.

Hospital (Representational Image)
Hospital (Representational Image)

இப்போது, என் கணவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, டயாலிசிஸ் செய்யும் நிலையில் வந்து நிற்கிறோம். ’அதற்கெல்லாம் செலவழிக்க முடியாது, கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் போங்க’ என்று கல்நெஞ்சுக்காரனாக பேசுகிறான் மகன். இப்போது அரசு மருத்துவமனைதான் சென்று வருகிறோம். தனியார் மருத்துவமனை அளவுக்கு அங்கு சிகிச்சை இல்லை. இன்னொரு பக்கம், அரசு மருத்துவமனைக்கே சென்றாலும், உடல் நலமில்லாத நாங்கள் இருவரும் ஆட்டோவில் சென்று வரும் போக்குவரத்து செலவுகூட இப்போது எங்களுக்கு சமாளிக்க முடியாததாக இருக்கும் அளவுக்கு இருக்கிறது எங்கள் பொருளாதார நிலைமை. எனக்கும் சுகர், பிரஷர் என மாத்திரை வாங்க வேண்டியிருக்கிறது.

எங்களிடமிருந்து கிட்டத்தட்ட 2 கோடி மதிப்புள்ள சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு, மாதம் 8 ஆயிரம் எங்கள் செலவுக்குக் கொடுக்கிறான் மகன். அவன் வசதியாக இருக்கிறான். தொழிலில் நல்ல வருமானம் பார்க்கிறான்.

Old woman(Representational image)
Old woman(Representational image)
Pexels

வயதான காலத்தில் எங்களை அவன் பார்த்துக்கொள்வான் என்று எதிர்பார்த்து நாங்கள் அவனை வளர்க்கவில்லை. ஆனால், பெற்றவர்களை கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது என்பதை அவன் உணர வேண்டாமா? எங்களை இப்படி கைவிட்ட துயரத்தை, துரோகத்தை எங்கு சென்று முறையிட?